யார் குற்றம்?

வடசென்னை மாதவரம் பகுதி. நூறு அடி சாலையை ஒட்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடியிருப்பு. அதில் ஒன்றில், ராமுவின் ஜாகை. ஒரு சிறிய 500 சதுர அடி புறாக்கூண்டில், நான்கு நண்பர்களுடன் பகிர்வு முறையில் தங்கியிருந்தான். அவனது பங்கு வாடகை 800 ரூபாய். இப்போதைக்கு அதுதான், அவனது சம்பாத்தியத்துக்கு கட்டுபடியாகும்.

ராமு, கோயம்பேட்டில், ஒரு சுமாரான ஹோட்டல் ஒன்றில் சிப்பந்தி. ஊரில் அம்மா, அப்பா. ஏழைக் குடும்பம். இவனது சம்பாத்தியத்தில் தான் அவர்கள் அரை வயிறு கஞ்சி குடிக்க முடிகிறது. பின்னால், ஒரு ஓட்டல்முதலாளி ஆகும் போது, பங்களா வாங்கிக் கொள்ளலாம், அம்மா அப்பாவை சேர்த்துக் கொள்ளலாம். இது அவனது கனவு.

ராமுவின் வயது முப்பது. கொஞ்சம் கருப்பு. அடர்த்தியான தலைமுடி. பார்க்க கொஞ்சம் சுமார் தான். ஒரு அடித்தள அரசியல் வாதியின் அள்ளக் கை போலிருப்பான்.

மூன்று நாட்களாக ராமுவுக்கு ஜுரம். சுருண்டு படுத்திருந்தான். வேலைக்கு போகவில்லை. வாங்கிய சம்பளப் பணத்தை ஊருக்கும் இன்னும் அனுப்ப வில்லை. நாளை தான் அனுப்ப வேண்டும்.

இன்று ஜுரம கொஞ்சம் தேவலை. இப்போது தான் கொஞ்சம் பசித்தது. இரவு மணி பத்து முப்பது. நண்பர்கள் வாசலில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். சிகரெட்டு புகை நாற்றம் உள்ளே அடித்துக்கொன்றுக் கொண்டிருந்து.

கொஞ்சம் வெளியே போய் வந்தால் தேவலை போலிருந்தது. அப்படியே, இரண்டு பழம் சாப்பிட்டு வரலாம், கடை திறந்திருந்தால், ஒரு ரொட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

அறையை விட்டு வெளியே வந்தான். “ ராமு, எங்க போறே? நான் வேணா கூட வரட்டுமா?” – நண்பனின் குரல்.

“வேணாம், சும்மா கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வரேன்”- ராமு.

குடியிருப்பை விட்டு வெளியே வந்தான். ஆளரவமே இல்லை. வெளியில், விளக்கு வெளிச்சமும் இல்லை. தெரு முனைக்கு வந்தான். ஏதாவது பெட்டி கடை திறந்திருக்கான்னு பார்க்க நடந்தான். இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்த்துக்கொண்டு.

****

ராமுவின் ஜாகைக்கு சிறிது தூரத்தில், ஒரு முட்டுச்சந்து. விளக்கு இல்லாத இடம். தவறுகள் நடக்கும் இடம். போதைப் பொருள்கள் இரவில் எளிதாக கிடைக்கும்.
****


மூன்று நாளைக்கு முன்பு தான் அந்த பகுதியில் ஒரு கொலை. ஒரு வாரம் முன்பு ஒரு கொள்ளை நடந்தது. இரண்டு வழிப்பறி. ஆள் நடமாட்டம் குறைவான அந்த பகுதியில், தீவிரவாதிகள் நடமாட்டம் வேறு கொஞ்சம் அதிகம் என தகவல்.

காளியண்ணன் மற்றும் தாஸ் இருவரும் போலீஸ் குற்றப் பிரிவு. தாஸ் ஏட்டு, காளியண்ணன் ஒரு கான்ஸ்டபிள். இருவரும் இரவில் மப்டியில் ரோந்து. மேலிட ஆணை.

“காளி! அங்கே பார்! ஒரு ஆள், இந்த பக்கம் அந்த பக்கம் பார்த்துக் கொண்டே போறான்?” தாஸ்.

தாஸ் உடனே குரல் கொடுத்தார். “ ஏய்! யாரது ! நில்லு. நாங்க போலீஸ்”

ராமு நின்றான். தாசும் காளியும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். “ யார் நீ! இங்கே என்ன பண்ற? இந்த நேரத்திலே?”

ராமுவுக்கு பயத்தில் வாய் ஒட்டிக கொண்டது. “ நா....ன், நா.....ன்” வாய் திக்கியது. அவனை அறியாமல் அவன் கை, கால் சராய் பாக்கெட்டை தொட்டது.

“நமது பர்சில் தான் நம்ம ஹோட்டல் ஐடென்டிட்டி கார்ட் இருக்குமே. எடுத்து காமிக்கலாமா? ஒரு வேளை இவங்க வழிப்பறி கொள்ளைக் காரங்களோ? ஐயையோ ! கால்சட்டையில், சம்பள பணம் வைத்திருக்கிறோமே! ஊருக்கு இன்னும் அனுப்பவில்லையே!. போலீஸ்னு பொய் சொல்லி பிடுங்கிக்கிட்டாங்கன்னா? இப்பதான் இந்த மாதிரி நிறைய நடக்குதே!” – ராமுவின் மூளையில் எண்ண ஓட்டம், பந்தய குதிரை போல் ஓடியது.

ராமுவுக்கு வியர்த்து விட்டது. இருட்டு. இவர்கள் யாரென்றே தெரியவில்லையே. பேசாமல், ஓடி விடலாமா? பிடிப்பதற்குள்,நமது பிளாட்டை நாம் தொட்டு விடலாம். குடியிருப்பை நோக்கித்திரும்பினான். ஓட ஆரம்பித்தான்.

“நில்லு நில்லு”- காளி குரல் கொடுத்தார். டார்ச் விளக்கை எடுத்தார்.

“இவன் தீவிர வாதி தான். யாருன்னு சொல்லாம, நம்மை பார்த்து ஓடறான் பார். பாக்கேட்லே கூட கையை விட்டா மாதிரி இருந்தது. விடாதே பிடி”- தாஸ்.

ராமுவிற்கு திகில். “ஐயையோ, பாக்கெட்லே 5000 ரூபாய் இருக்கு. எப்படியாவது நம்ம குடியிருப்புக்கு போயிட்டா பிரச்னையில்லை. இந்த சந்து வழியா ஓடிப போயிடலாம்?- ஓட ஆரம்பித்தான். உடல் சோர்வு, ஓட முடியவில்லை.

காளி, கிட்டே வந்து விட்டார். டார்ச் விளக்கை அடித்துக் கொண்டே. “நில்லுடா! சொல்றேன் இல்லே”

நின்றான். திரும்பினான். “நான் .. நான்..” பாக்கெட்டில் கையை விட்டான். நம்ம ஹோட்டல் கார்டை காட்டலாம் என்ற எண்ணத்தோடு.

காளி பயந்து விட்டார். ஐயோ, துப்பாக்கி அல்லது கத்தி எடுக்கிறான். கையிலிருந்த லத்தியால் அவனை ஒரு போடு போட்டார். சரியாக அவனது மண்டையில் அடி பட்டது. ராமு ஒரு கையால் தலையை பிடித்துக் கொண்டான்.

தாஸ் அதற்குள் கிட்டே வந்து விட்டார். “ஐயா கிட்டே போகாதீங்க! கத்தியோ, துப்பாக்கியோ வெச்சிருக்கான் போல”. நான் டார்ச் அடிக்கிறேன்.

அதற்குள், ராமு பாகேட்டிலிருந்து கருப்பாக எதையோ வெளியே எடுத்தான். “ஆமா! காளி , கத்தி தான்!” . பயத்தில், தாஸ் தனது பங்குக்கு தடியால் அவனை ஓங்கி அடித்தார். "அம்மா!" என்று அலறிக் கொண்டே , ராமு கீழே சாய்ந்தான். அவன் தலையில் அடி பட்டு ரத்த வெள்ளம்.

“டார்ச் அடி, யாருன்னு பாக்கலாம்” – தாஸ்.

காளி டார்ச் அடித்தார். ராமுவின் கையில் பர்ஸ். அதில் அவன் போடோ, ஐ.டி.கார்ட் மற்றும் 5000 பணம்.

****

இப்போது ராமு உயிருடன் இல்லை. மண்டையில் அடி பட்டதால், இறந்து விட்டான். காளியும், தாசும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். அவர்கள் பெயரில் கவனகுறைவு, வன் தாக்கு எனும் காரணங்களினால் துறைசார் நடவடிக்கை எடுக்கப் பட்டது. தற்காப்பு என்பது அவர்கள் வாதம். அதை ஏற்றுக் கொண்டு, பணியிடை நீக்கம் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் மீண்டும் பணியில். அதே ரோந்து பார்வை, அடையாறு பக்கம். ஆனாலும், ஒரு குற்றமும் அறியாத ஒரு இளைஞனை கொன்று விட்டோமேயென்ற வருத்தம் இருவருக்கும் குறையவேயில்லை.

ராமுவின் பெற்றோர் ஊரில், குடிக்க கஞ்சிக்கு கூட காசு இல்லாமல், மகனை இழந்த சோகத்தில். அரசாங்க இழப்பீடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இழப்பீடு வந்து விடும். ஆனால், பிள்ளை மீண்டும் வருவானா?

“எல்லாம் எங்க தலைஎழுத்து ! விதி?”- நொந்து கொண்டிருக்கின்றனர் அந்த வயோதிக தம்பதி.

***

ஆசிரியர் குறிப்பு :



இது யார் குற்றம்?

ராமுவின் ஏழ்மையா? இல்லை பசியா?அவனது திக்கு வாயா? பயம்? இருட்டாயிருக்குமோ? ஒருவேளை, சந்தேகத்துக்குரிய அந்த பகுதியா? அல்லது போலீசின் சந்தேக பதற்றத்தில் ஏற்பட்ட ஒரு நிமிட தப்புக் கணக்கா? எல்லாம் சேர்ந்ததா?


ஏன் எல்லாம் ஒன்று சேர்ந்து, ராமுவின் வாழ்வை முடிக்க வேண்டும்? விதி என்பது இதுதானோ? இதைத்தான் ஆங்கிலத்தில் டிப்பிங் பாயிண்ட் (Tipping Point) என்று சொல்கிறார்களோ?

எழுதியவர் : முரளி (24-Oct-13, 11:48 am)
பார்வை : 186

மேலே