கவிதை பயிர் வளர்ப்போம் மெய்யன் நடராஜ்

இதந்தரு வாக்குகள் ஆயிர மிருந்தும்
==இழிமொழி பேசிட லாமோ?
பதந்தரு தமிழ்மொழி பண்பினை மறந்து
==பழிமொழி பகர்ந்திட லாமோ?
நிதமொரு கொடுமொழி படிப்பது விடுத்து
==நிறைமொழி பேசுதல் அழகே
சுதந்திர படைப்புகள் வளர்ந்திட இனிதாய்
==சுவைமொழி கூறுதல் நலமே!

முகமது மறந்து படைப்புக ளாலே
==முகவரி செய்திடும் நாங்கள்
இகமது முழுவதும் இடம்பெறும் நிகழ்வினை
==இன்புற எழுதிடு வோமே
நகமுடன் சதையென ஒன்றியே நாமொரு
==நல்வழி அமைத்திட லாமே
திகழ்ந்திடும் மொழியதன் ஒளிதனை கொண்டு
==தெருவிரு ளகற்றிடு வோமே!

நடிப்பவர் நடித்திடும் நாடகம் பார்த்து
==நாமதன் பொருளுணர் வோமே
நொடிக்கொரு கொள்கை எடுப்பவர் தம்மை
==நுணலென கருதிடு வோமே
இடிப்பவர் இடிக்கும் இடிகளைத் தாங்கிடும்
==இதயம் எடுத்திருப் போமே
படித்தவர் புரியும் பணியெனக் கவிதை
==பயிரது வளர்த்திடு வோமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Oct-13, 2:32 am)
பார்வை : 127

மேலே