காதல் இதுதானோ-7
“மது செல்லமே.. சொல்லுங்க.. என்ன பண்றீங்க? எப்படி இருக்கீங்க? நீங்க நல்லா தான் இருப்பிங்க.. நான் தான் உங்கள் நினைவுகளால் வாடுகிறேன்!”
அவளை பேச கூட விடாமல் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தான் அவன்..
கொஞ்சம் என்னை பேச விடு..
“ஆஹா.. இதுவரை புன்னகை மட்டுமே பூத்து வந்த பூ இன்று பேச போகிறதாம்.. பேசு கண்ணே!”
தொலைந்து போக நினைக்கும் தன் இதய துடிப்பை இழுத்து பிடித்து கொண்டு பேச தொடங்கினாள் அவள்..
நீயும் நானும்...
“நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள..”
மீண்டும் இடைமறித்தான் அவன் ஒரு சினிமா பாடல் வரியால்..
நடக்காது..
“ஓஹோ..”
நீயும் நானும் இணையவே முடியாது..
“இது என்ன? புதிதாய் வெளிவந்த படத்தின் பெயரா? கொஞ்சம் கூட நன்றாக இல்லை..”
சொல்வதை புரிந்து கொள்.. நாம் என்றும் இணைய முடியாது.. இதுதான் என் முடிவு.. உன் மேல் சத்தியம்..
அதுவரை கேலி செய்து கொண்டிருந்தவன் அவள் செய்த சத்தியம் கேட்டு விறைத்து போனான்..
“மது மா.. என்னடி பேசுற?”
தன் கண்ணீர் கூட அவனுக்கு வலி தந்து விட கூடாது என்று நினைப்பவள் பொறுமையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்... மௌனம் மட்டுமே பதிலாய் தந்தாள் ..
“சொல்லு மா.. நீ சும்மா விளையாட்டுக்கு தான் சத்தியம் செய்தாய் என்று சொல்!”
அச்சத்துடன் வினவினான் அவன்..
நொறுங்கி உடைந்தாள் அவள்.. ஆற்று வெள்ளம் போல் கண்ணீர் வழிந்தோட ஏங்கி ஏங்கி அழ தொடங்கினாள்...
சிரிப்பையும் வெட்கத்தையும் மட்டுமே பரிசாய் தந்தவள் இன்று முதல் முறையாய் தனக்கு அழவும் தெரியும் என்று காட்டுகிறாள்..
“மது மா.. வேண்டாம் மா.. அழாத மது.. மது .. “
ஆறுதல் சொல்வது எப்படி என்று கூட யூகிக்க முடியாமல் அவள் பெயரை மட்டுமே உச்சரித்து கொண்டிருந்தான் அவன்..
ஆண்மகன் என்ற பட்டம் மட்டும் இல்லையேல் நானும் சிறுபிள்ளை போல் கதறியிருப்பேன் கண்ணே.. விசும்பினான் அவன் மனதிற்குள்.
“வேண்டாம் மது.. நீயும் நானும் இணைவதால் உன் புன்னகை மறைந்து விடும் என்றால் எனக்கு அது வேண்டாம்..
காதல் என்பது வெறும் தாலி கட்டி இணைந்து விடும் சடங்கு அல்ல..
நேசிக்கும் உள்ளத்திற்காக எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னையே தியாகம் செய்திடும் அற்புதமான உறவு தான் காதல்..
உன்னை அழவைத்து உன் பெற்றோரை அழவைத்து எனக்கு இப்படி ஒரு திருமண பந்தம் வேண்டாம் மது..
உன் உள்ளத்தின் அன்பு.. இதயத்தின் காதல் இவையெல்லாம் உண்மை என்று எனக்கு தெரியும் கண்ணே....
உன்னை மனதால் நேசித்திடும் வரம் ஒன்று போதும் எனக்கு..”
இணைந்திடவும் வழியின்றி மறந்திடவும் மனமின்றி சிலையாகி போனாள் மது..
“கவலை கொள்ளாதே மது.. இந்த பிரிவு வெறும் உலகத்திற்காக.. உள்ளத்தால் இணைந்தே இருப்போம்.. என்றும்..”
இத்தனை நாளாய் ஒளித்து வைத்திருந்த பொக்கிஷத்தை அவனுக்கு பரிசளித்தாள் அவள்..
Love you da செல்லம்...
“Love you மது..”
காதல் இதுதானோ!
தொடரும் அவர்கள் மனதில்!
முற்று பெறுகிறது.. இந்த வலைதளத்தில்!