பூக்கள் செடிக்கு சுமையோ

ஒத்தையில நடந்து போகும்
ஓடதண்ணியே கொஞ்சம் நில்லு!
பாதி வழுக்கையான
வயல் வரப்பே கொஞ்சம் கேளு!

அரநிலவு நேரத்துல
அழுது பொழம்பி நாவந்தா
ஏன் என்று கேட்க நதியில்ல !
என்கதை கேளுங்களேன்!

பச்சிளம் வாழைமரமாம்
பால்நிலா பூமுகமாம்!
வயசுக்கு வந்து மாசம் மூணு ஆகல!

சொட்டன்கல்லு ஆடுனகையும்
நொண்டி ஆடுன காலும்
இன்னும் ஆடசொல்லி
அடம்பிடிக்கிற வயசுல!

வயசுக்கு வந்ததனால
வயித்துல நெருப்பை கட்டி
வாழுறதா ஊரைக்கூட்டி
ஒப்பாரி வச்சா எங்காத்தா!

வருகிற ஆடிக்குள்ள நான்செத்து
நாற்பது நாளா போகுமின்னு!
என் கல்யாணமாலை கண்டாதான்
கட்ட வேகுமின்ன எங்ககெழவி!

பொம்பள படிச்சா
புருஷன் கெடைக்காதுன்னு
பொறக்குற குழந்தைகளை
தூக்க வச்சான் எங்கப்பன்!

உள்ளூரு சந்தையில
வெல கூடுமின்னு
வெளியூர் சந்தையில
மாப்பிள்ளை பாத்தாக !

நல்ல உசரமாம்!
நாத்துனா நாலுபேராம்!
உச்சந்தைலையிலதான் கொஞ்சம்
உதிர்ந்து போயிருச்சாம் !

கண்ணால ஒருதரம் பார்த்ததில்ல!
கருப்பா செவப்ப கண்டதில்ல !
கல்யாண பொண்ணு நான்
நெஞ்சு பூத்து போனேன்!

கல்யாணம் முடிஞ்சுபோச்சு!
கொட்டக மரம் பிரிச்சாச்சு!
பெத்தவாக பாரத்துல
பெரும்பாரம் குறைந்து போச்சு!

நின்ன குத்தம்
நடந்தா குத்தமின்னு
என்னை அடுத்தவளா
அத்தை நெனைச்சாக!

ஐந்துபவுனு சங்கிலியில
அரபவுனு கொறைஞ்சதனால
கஞ்சி எரங்கலன்னு
கட்டினவன் விரட்டிவிட்டான் !

அரபவுனு சங்கிலி கேட்டு
ஆறுதடவ அலைஞ்சிபுட்டு
அப்பன் வீட்டு பஞ்சத்தில
தஞ்சம் கிடந்தேன் !

கல்யாணம் முடித்ததுமே
கருமாதி முடிந்ததுன்னா எங்காத்தா!
திருப்ப வந்தாக்க மருந்த
குடிப்பேன் என்றான் எங்கப்பன் !

புருசன்வீடு போனேன்
அடிச்சி அனுப்பிட்டான்!
அதுதான் அழுது வந்தேன்
ஓடக்கரை புல்வெளியே!

அத்திமர தோப்போரம்
அரளிமரம் பூத்திருக்கும்
யாரும் வந்து கேட்டாக்க
அடையாளம் சொல்லாதிக !

எழுதியவர் : கோடீஸ்வரன் (1-Nov-13, 7:48 am)
சேர்த்தது : கோடீஸ்வரன்
பார்வை : 93

மேலே