பூக்கள் பூக்கும் தருணம் - நினைவின் கடிதம்
பூக்கள் பூக்கும் தருணம்
(கடிதப் பதிவு)
கோவை காந்திபுரம் முன்ன இருந்த ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி டவர் , இப்போ கணபதி சில்க்ஸ் இருக்குங்க தோழர் , காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட் க்கு எதிர்த்தாப்புல சிம்ம சொப்பனமா இருக்குமுங்க தோழர்.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட்.
விற்றுதீர்ந்த, விற்பனை ஆகாத மல்லிகை முழங்களுக்குள் மறைந்த காதல், கோபம், பிடிவாதங்கள், தலைமுறைகளாக, கேலிகள் சுமந்த கற்களாலான இருப்பிடங்கள், தள்ளுவண்டி காளான் கடைகள்,
என்றோ சுவரில் கிறுக்கப்பட்ட, அடையாளம் தொலைத்த, பழைய அலைப்பேசி எண்கள், தவறவிட்டவைகளை தேடிக்கொண்டிருக்கும் பழைய சிலர், பேருந்திற்காக காத்திருக்கும் சுமதலைகள், அப்போதுதான் சேரப்போகும், கடைசியாகப் பிரியப்போகும், காதல், நட்புடைய லாண்ட்மார்க், பார்த்து பழக்கப்பட்ட பெயர்த் தெரியாத முகங்கள், திறக்கப்படாத இதயங்களின் ஆவிகள் (நினைவுகள்), யாரோவுடைய தொலைந்துபோன பார்வைக்கென தேடித்திரியும் பார்வைகள், சில்லரைத் தட்டின் சப்தங்கள், டிரான்சிஸ்டர்களின், அலைவரிசை ஊசலாடும் திறக்கப்பட்ட பெட்டிக்கடைகள், அன்றைய எங்களை நினைவுப்படுத்தும் புதிய நாங்கள் யாரோ,
காலேஜ் முடிச்சிட்டு பிரெண்ட்ஸ் கூட சுத்திக்கிட்டிருப்பேன் தோழர் , அடுத்து வேலைக்குப்போலாமா இல்லை மேலே படிக்கப்போலாமா என்னும் குழப்பத்திற்கிடையில், சான்றிதழ்களை கலரில் நகலெடுக்க ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி டவருக்குள் நுழைகிறேன், 1996 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப்பின் டவரின் ஒரு பகுதி காலியாகிக்கிடந்தது,
மற்றொரு பகுதியில் ஸ்டார் செராக்ஸ், கருப்புவெள்ளை அச்சு எடுக்கும் பிரிவு, வண்ண நகல் பிரதி மேலும் அச்செடுக்கும் பிரிவு, விசிட்டிங் கார்ட், இன்விடேஷன், பிரௌச்சர், புத்தகங்கள், வடிவமைக்கும் பிரிவு, செய்தித்தாள் போஸ்டர் என வடிவமைத்து அச்சிடும் பிரிவு, பெரிய பெரிய வரைபடங்கள் வரையும் பிரிவு என ஏராளம் பிரிவுகள் இருக்கின்றன. அந்த இடம், அங்கே பணி புரியும் இளம் ஆண்களும் பெண்களும் திருமணமானவர்களும் என கலகலத்துக் கொண்டிருக்கும் அவ்விடைத்தையொத்த சூழல் டவர் அருகே உள்ள டீக்கடை, சுப்பு மெஸ் என அந்த இடம் லெகுவாக என்னை கவர்ந்திருந்தது தோழர்
நகலெடுக்க அற்பசமயம் காத்திருக்க வேண்டியிருந்ததால், வெளிப்புற சுவர்களில் பதியப்பட்ட வண்ணப்படங்களின்மேல் இலயிக்கலாமே என பார்வையை ஓடவிட்டேன் தோழர்
A4 அளவைவிட சிறிய அளவிலான தாளில் ஆட்கள் தேவை என்ற, ஸ்டார் செராக்சின் விளம்பரம், பில்டிங் வரைப்படம் மேலும் பொதுப்பணித் துறையின் மேப் வரைப்படம் கம்பியூட்டரில் வரைய ,, கணக்கீடு செய்யும் பணிக்கான விளம்பரம் அது.
பார்ட் டைமில் வேலைக்கு சேர்ந்தால் என்ன என்று தோணிற்று அன்று அதன் உரிமையாளரை சந்திக்க முடியவில்லை , மறுநாள் காலை நேரத்தே எழுந்து என் காரில் வந்து பார்த்தபோதுதான் அறிகிறேன்
அங்கு டவருக்கான பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்று
நூறடி ரோட்டில், இடம்பார்த்து காரை பார்க் செய்துவிட்டு, ஒரு ஆட்டோ ரிஃஷாவில் போய் இறங்கினேன்
உரிமையாளரைப்பற்றி விசாரிக்கும்போது, இரண்டாம் தளத்தில் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து
நேரிட்டுக் காணச் சென்றேன்.
அற்பம் காத்திருக்க நேர்ந்தது,
கண்டு பேசி விண்ணப்பம் அளித்ததும், மூன்று நாட்கள் சமயம் கேட்டிருந்தார், ஆனால் அடுத்த நாளே கூப்பிட்டுவிட்டார். அந்த அழைப்பு
மனதுக்கு இதம் அளித்தது.
சிறுவயது முதல் தனியாகவே இருந்துவிட்டு எனக்கு, நெரிசலில் புழங்குவதும், நெரிசலில் பயணிப்பதும் புதிது எனினும் அதிகம் விருப்பப்படுகிறேன் ஆம்.
காலையில் டவுன் பஸ்ஸில் சீட்டு கிடைக்கிறது கடினம் இருந்தாலும் வேலைக்குப் போகிறவர்கள் மத்தியில் எழுப்பப்படும் பேச்சு கேலி இவைகளினூடே பயணிப்பது அலாதி.
காலத்தோடு வேகமாக விரைந்து கொண்டிருக்கிறேன், ஸ்டார் செராக்சில் எல்லோரும் ஏறத்தாழ நண்பர்களாகியிருந்தோம் ஆண் பெண் என பேதமில்லாமல். சுப்பு மெஸ்ஸில் ஒரு சாப்பாடு ஆர்டர் செய்தால் ஆறு பேர் சாப்பிடலாம் 18 ரூபாய் சாப்பாடு,, ( பீசில்லாத மீன் குழம்பு, கோழி குழம்பு , கறிக்குழம்பு சாம்பார் ரசம் , மோர், நிறைய சோறு, அப்பளம் என பெரிய பார்சல்) ஒன்றாக சாப்பிடுவோம் பங்கிடுதலிலும் பேதமில்லை அங்கே. தோழர்.
ஜெனெரல் ஷிப்ட் முடிந்தால் எல்லோரும் ஒன்றாக பஸ் ஸ்டான்ட் போவோம் தோழர் , நிறைய நேரமிருந்தால் வஉசி பார்க் போயிட்டு திரும்ப நேரத்துக்கு பஸ் ஸ்டான்ட் வந்து கட்டிட இருக்கையில் சாய்ந்திருந்து மொக்கைப்போடுவோம், சிலர் காதலித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அவர்களுக்குள்ளாரே சண்டையிட்டுவிட்டு பேசாமல் இருந்தார்கள். சிலர் அரசல் புரசலாக புரளி பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் அரசியல் சிலர் நகைச்சுவை என இப்படி ஒன்று கூடும் பஞ்சாயத்தெல்லாம் அப்பொழுதுதான் நிகழும். ஒவ்வொருத்தருக்கான பஸ் வரும்போது
டா டா சொல்லி விடைபெறுவோம் தோழர். நண்பர்களின் திருமணம் என்றால் கூட்டத்தோடு போயி கும்மியடித்துவிட்டு ஒன்றாக படம் பிடித்து பின் வேலைக்குத் திரும்புவோம், அந்த வாழ்க்கை இன்று யாரோ அன்றைய எங்களுக்கு பதிலாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
பிடித்த பெண்களுக்கு பிடித்த ஆண்கள் வாங்கித்தரும் மல்லிகைப்பூவிற்கு பிரத்யேக வாசமிருக்கும் , பரிசு பொருட்களுக்கு மதிப்பிற்கும் அங்கே. இப்படி அழகாகக் கடந்துகொண்டிருந்தேன். என் வாழ்நாளின் நடு பக்கங்கள் அத்தனை அழகானதுதான் தோழர்
சுற்றும் முற்றும் பார்க்காமல் வேகக்கடக்கும் என் வாழ்க்கை வீதியில் ஒரு ஹாரன் சத்தம் போல, காலைப் பூக்கள் சட்டென்று பூக்கும்போது சன்னமாய் புறப்படும் மீயொலி போல, அவள் மொழி மென்மை, அப்பேருந்து நெரிசலின் சலசலப்பைக் கடந்து முதல் நாள் என் செவி கிழித்தது தோழர்.
"பர்ஸ் காணோம் என்ற அவள் (அடை)மொழி" .
படைத்தவனின் குரூரம்
என்னிடம் முழுமையாகத் திரும்புவதை என்ன சொல்லுவேன். பேயாது நின்ற ஆயிரம் காலத்து அடைமழைமொத்தம் ஒருசேர என் மேல் பொழிவதைப்போல, அதுநாள் அடைத்துவைத்த புதிய இசையை அன்றுதான் பூமிக்கு அனுப்பிவைத்தானோ இறைவன் என்பதைப்போல, சுற்றி என்னை சொர்க்கமாக்கினாள் நிமிடம் தோழர்.
அன்றிலிருந்து அப்பேருந்து பிரவேசம் என்னில் புதிய பிராரப்தம். தினமும் அவள் இருக்கைக்கு நெருக்கமாகச் சென்று நிற்பேன்.
எப்போதும் பயணிக்கும் ராஜி அக்கா அன்று அவள் பக்கத்தில் இருந்தாள்,
அன்றுதான் இயற்கையை சபிக்கும்படி ஒருக் கட்டளைக்கு ஆளாக்கப்பட்டேன்.
ஆம் அவள் பார்வையற்றவள்.
அவளுடைய காணாத கண்கள்,
அதைக் காணும் இதரக் கண்களைப் பிறாண்டிடச் செய்திடும் மிளிர்ந்த விழிகள். காற்று அவள் கூந்தலை அழகாக அலைக்கழிக்கிறது. அவள் கன்னக்குழிகளைக் கணவாவது மீண்டும் அவளை சிரிக்கவைக்கலாமா என்று தோன்றும் அழகு.
ராஜி அக்கா, சகப்பயணி, பஸ் ஏறும்போது பார்த்து சிரிப்பார்,
பஸ்ஸில் கூட்டம் அதிகமாகும்போது
என் கைய்யிருக்கும் சோற்றுப்பையை வாங்குவார்கள், கொஞ்சமே பேசுவார்கள், அதைத்தவிர
அவர்களைக்குறித்து எனக்கு அவ்வளவு தெரியாதுங்க தோழர், அன்றுதான் ஆரம்பித்தோம், ஒருமணிநேரம் நிறைய தரிப்புகளை பேருந்து கடந்து செல்வதால் மிகையான சலிப்பிலிருந்து கடக்க அந்தாக்ஷரி ஆரம்பிக்கலாமா என்று,
அதற்கு அடுத்த நாளிலிருந்து முன்பாகவேச் சென்று பஸ்ஸில் முன்பக்கமாக ஏறி அவள் முகம் காணும்படி ஒரு இடம்பிடித்து எதிரிலுள்ள கம்பியில் சாய்ந்து நின்றிடுவேன், அன்றுதான் ராஜி அக்கா, அவளிடம்
என்னையும் என்னைச் சுற்றிய சிலரையும் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தாள், பின்பு எல்ல்லோரிடமும்
இவள் மலர்விழி என்று ராஜி அக்கா சொன்னபோது, மலர்ந்த அவள் இதழ்கள், அந்த நொடிக்குள் விழுந்து
திருடிக் கொண்டிருக்கிறேன் சுயநலம் தோழர். நிறைய நேரம் அந்த அழகைத் திருடிக் கொண்டிருப்பதை
எது உணர்த்தியதோ தெரியவில்லைத் தோழர், தானே உணர்கிறாள் போல தலைகுனிந்தாள் தோழர்.
அந்தாக்ஷரி,
அவள் நான் ராஜி அக்கா இன்னும் சிலர் இருந்த அந்த அழகான பயணம்.
மலர்விழி பக்கம்
குடைசாய்ந்து கிடக்கிறேன் என் நிமித்தங்களை
சரியாகப் புரிந்துகொண்டாள் ராஜி அக்கா.
புரிந்துகொண்டாளே அன்றி
அவளிடம் சொல்லிருக்கமாட்டாள். எங்கு போய்விடுவாள்.
நல்லவேலை கிடைக்கும்போது
சொல்லிவிடலாம்தான்.
கண்களுக்கு முன்னால்
அமைய இருக்கும் எதிர்காலம். ஏனோ தாமதிக்கிறேன்,
எண்ணி எண்ணி எழுதிய எத்தனையோக் கவிதைகள்
உடுப்பு மாறிய கணமெல்லாம்
மைத் தேய்ந்தது மட்டுமல்லாமல்
மடிப்புகளில் கிழிசல் பட்டன
வருந்தியிருக்கிறேன் தோழர்.
காலியான
நிரப்பில் சிப்பங்கள்
கவிதைகளின் சாட்சியாக
இன்னும் இருக்கு தோழர்.
சொல்லிக் கொள்ளலாம் நேரங்களில் பெங்களூரில் ஒரு பெரிய அடுக்ககம் கட்டும் நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள், எப்படியோ
அந்த வேலை கிடைத்துவிடும், மலர்விழியுடைய மலர்விழிகளாக கிடைத்த இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவேண்டும்.
அதை ஒரு இலட்சியம் செய்துக்கொண்டேன். யாரிடமும் சொல்லாமல் ராஜி அக்காவிடமும் சொல்லாமல், பெங்களூர் சென்றுவிட்டேன், நெடும்பயணம் கொடும்பயணம். எப்போது இந்த நேர்முகத்தேர்வு முடியுமோ, இதோ என்னைச்சுற்றி பின்னால் முளைக்கும் சிறகுகளுடன் பறந்துபோய்
அவளைப் பார்த்துவிடவேண்டும். அடக்கிவைத்த அபிலாசைகளை
அவள் முன்னால் பொட்டித் தெறிக்கவேண்டும். துள்ளிக்கொண்டிருந்தன ஆவல்கள் தோழர்.
நேர்முகத்தேர்வு முடிந்து, திரும்ப வந்த அந்த இரவை கடக்க அப்பப்பா எத்தனை போர்க்களம்.
விடியாத நேரத்திலேயே
பேருந்து தரிப்பில் புறப்பட்டுப்போய் நின்றுகொண்டேன் .
எல்லோரும் வந்திருந்தார்கள், மலர்விழியும் வந்திருந்தாள், இனிப்புகளுடன் அருகில் சென்றேன்.
நான் முந்தும் முன்பு இராஜி அக்கா இனிப்புகளுடன் முந்திக் கொண்டாள் தோழர்.
விஷயம் எட்டாமல்
வியப்பிற்குள் விழ அசையாமல் இருந்தேன்.
இராஜி அக்கா குரலுயர்த்தி,
என்னை முழுநாள் ஊமையாக்கினாள் தோழ்ர்.
ஆம், மலர்விழி மருது என்ற இருவரின் புகைப்படமிருந்த அந்த திருமண ஓலையை, ராஜி அக்கா என் முன்னால் நீட்டினார், அவளும் அவளைப்போன்ற
ஒரு பார்வை அற்றவரை திருமணம் செய்யப்போகிறாள்.
நினைவின் திரைமறைவிற்குப் பின்னால்
ஒளிந்து நின்று அழுகிறது
மென்மை பூத்த இதயம்.
வாழ்த்தி வழிவிடுகிறது.
தவிர வேறென்ன செய்யப்போகிறேன் சொல்லுங்கள் தோழர்.
பைராகி