அம்மா பேரில்

அம்மா பேரில்

இன்னும் இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும், இந்த ஆறு வருடங்களில்,நான்கு முறை துபாயில் இருந்து ஊருக்கு வந்திருக்கிறான். முதல் முறை வந்த போது அம்மா இருந்தாள், அவளை பார்க்கவும், அன்னாடம் காய்ச்சியாக இருந்த அம்மாவை இந்த ஊரில் தலை நிமிர்த்தி நடக்க வைத்திருக்கிறோம் என்னும் சந்தோசம் அப்பொழுது இருந்தது. அதற்கு பின் ஆறே மாதங்களில் திரும்ப ஊருக்கு வரவேண்டிய சூழ்நிலையை அம்மா ஏற்படுத்தி இருந்தாள். தோட்டத்தில் வேலை செய்யும்போது பாம்பு கடித்து இறந்து போனாள் என்னும் செய்தி அவன் மனதை உடைய செய்து இங்கு வரவழத்தது.
அதற்கு பின் அம்மாவின் சினேகிதி மீனாட்சி, கைக்குழந்தையாய் இவன் இருந்த காலத்தில் அம்மா போக்கிடம் இல்லாமல் கூடப்பிறந்த அண்ணனால் விரட்டப்பட்டு திகைத்து நின்றவளை தனது குடிசையில் தங்க வைத்து இவனை அவளுடன் சேர்த்து ஒரு தாயாக வளர்த்தவள். அவளுக்கும் கணவனோ பிள்ளையோ இல்லாததால், இவனை இரு பெண்களும் போட்டி போட்டு வளர்த்து, படிக்க வைத்து, செலவு செய்து துபாயிக்கு அனுப்பி வைத்தனர்.
அம்மா இறந்து போயிருந்தாலும் இவனுக்கு இருந்த ஒரே பிடிப்பான மீனாட்சி வீட்டுக்கு இரண்டு முறை வந்து விட்டான். ஒவ்வொரு முறையும் ஒரு மாதம் தங்கியிருந்துதான் போவான். என்றாலும் ஒவ்வொரு முறையும் கிளம்பும் போது ஏதோ ஒரு ஏக்கம், எதிர்பார்ப்பு இவன் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது. அது என்னவென்று விளங்காமலேயே இருந்தது.
இப்பொழுது கூட, மீனாட்சியின் குடிசைக்குள், தரையில் பாய் போட்டு சட்டையில்லாமல் படுத்தபடியே அதை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தான்.
காளீஸ்வரா..காளீஸ்வரா.. சத்தம் வெளியில் இருந்து கேட்க பாயில் படுத்திருந்த காளீஸ்வரன், அருகில் ஒரு மூங்கில் குச்சியில் தொங்கவிட்டிருந்த சட்டையை போட்டு கொண்டு வெளியே வந்தான்.
சடையன் நின்று கொண்டிருந்தான். ஊருக்கு வந்ததில் இருந்து இவன் பின்னால் சுற்றி கொண்டிருந்தவன். அவ்வப்பொழுது இவன் கொடுக்கும் ஐம்பது நூறை சந்தோசமாய் வாங்கி சட்டை பையில் வைத்துக்கொண்டு, உனக்கு என்ன வேணுமின்னு சொல்லு மாப்பிள்ளை, நான் செஞ்சு தாறேன்.
இந்த ஊரில் சடையன் தயவால் படிக்காத மீனாட்சி அக்காவுக்கு, பணம் அனுப்பும்போது கூட இருந்து வாங்கி கொடுப்பதற்கும், அவளுக்கு வேண்டிய சாமான்களை சந்தையில் வாங்கி கொடுப்பதற்கும் உதவிகரமாக இருக்கிறவன் இவன் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்து வந்தவன்.
என்னவே?
இல்லை…. உங்க ஆயி, இத்தனை வருசம் வந்துட்டு போறான், ஒரு வாட்டி கூட என்னைய பாக்க வரலேன்னு சொல்லி கிட்டிருந்துச்சு, நீ இன்னும் இரண்டு மூணு நாள்ல கிளம்பிடுவேன்னு சொல்லியிருந்தேன், அதான் இந்தவாட்டியாவது ஒரு எட்டு ஆயாவை பார்த்திட்டி போவியான்னு கேட்டுச்சு.
“சுரீரென்று” இவனுக்குள் கோபம் பொங்கி, ஆயியை வந்து என்னை பாக்க சொல்லுவே, என்று சொல்லலாமா என்று நினைத்தான். சட்டென்று அமைதியானான். ஆயிக்கு இருந்தால் எழுபதுக்கு மேல் இருக்கும். இவன் அம்மாவை பெற்றவள். தன்னுடைய மகளையே, மகனுடன் சேர்ந்து வீட்டுக்குள் விட மறுத்தவள்.
பார்த்தாதான் என்ன? பாரு, “வக்கத்து போனவளேன்னு உன் மகளை பேசி விரட்டியடிச்சியே, அவ பையன் இப்ப வந்திருக்கேன், பாத்துக்கோ” அவள் முன்னால் நின்று சொல்லவேண்டும், மனதுக்குள் கறுவிக்கொண்டு சரி ‘வாவே’ போயி பார்ப்போம்.
சடையனுக்கு ஒரே ஆச்சரியம், ஆயா இவனிடம் வருத்தப்பட்டு சொன்ன போது இவன் நம்பிக்கையில்லாமல்தான் சொன்னான், நான் போயி சொல்லி பாக்கறேன் ஆயா,
வந்தான்னா கூட்டிட்டு வாறேன், அப்படி கிளம்பியவன், ஏற்கனவே இரண்டு முறை இவன் ஊருக்கு லீவில் வந்தபோது கேட்டிருக்கிறான், காளீஸ் அல்லாரையும் பாக்கறே, உங்க ஆயியையும், மாமனையும்தான் ஒரு வாட்டி பார்த்துட்டு வந்துடேன்.
சடையனை பார்த்து அவன் முறைத்த முறைப்பு, அவங்களை பத்தி பேசாதவே, என்னையும், அம்மாவையும் கைக்குழந்தைன்னு பார்க்காம விரட்டி விட்டவக, அவங்களை போய் பார்க்கோணோமுனு சும்மா கூட பேசாதவே.
அப்படி பேசியவன் இன்று இதை பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் தன்னுடன் கிளம்பியவனை சில நிமிடம் வியப்பாய் பார்த்து திகைத்து நின்றான். அதற்குள் காளீஸ்வரன் கொஞ்ச தூரம் போயிருந்தான், அவனை விரட்டியபடி இவன் பின்னால் ஓடினான்.
இத்தனை நாள் இங்கிருந்தும் இந்த பக்கமே வராமல் இருந்திருந்தான். ஒரு வைராக்கியத்திற்காக, இன்று சடையன் சொன்னவன் , சட்டென்று கிளம்பி வந்தவன் எதிரில் இருந்த அந்த வீட்டை பார்த்ததும் மனதுக்குள் தன்னை அறியாமல் ஒரு சலனம் சூழ்ந்ததை உணர்ந்தான்.
வீடு பாழடைந்திருந்தது, அங்கங்கு சுவரில் விரிசல்கள், வெள்ளை காணாத சுவர்கள், வீட்டு வாசலை அடைவதற்கே மூன்று நிமிடம் நடக்க வேண்டும் அவ்வளவு இடம் முன்னால் இருந்தது. இருக்கிறது, ஒரு காலத்தில் அதில் காயப்போட்டிருந்த நெல் மணிகள் குவியல் குவியலாய், இவன் கண்ணுக்குள் வந்து போனது, இதே காம்பவுண்டு வாசலில் ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று இவன் ஏங்கி நின்ற கோலமும் ஞாபகத்துக்கு வந்தது.
ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க, மீசையை முறுக்கியபடி உட்கார்ந்திருந்த மாமன் இவனை கண்டவுடன் சட்டென்று எழுந்து “வீதியத்த நாயியெல்லாம் வூட்டுக்குல்லார எதுக்கு வருது?
வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்கள் இவனை பார்த்து, பரிதபாமாய் விக்கித்து நிற்க, இவன் அந்த வார்த்தையின் அவமானம் தாங்காமல் அழுது கொண்டே ஓடிச்சென்ற ஞாபகம் வந்து இவன் தொண்டையை அடைத்தது.
சடையன் வேலி படலை திறந்து விறு விறுவென்று வாசலை அடைந்து ஆயி ஆயி.. மாரியக்கா மாரியக்கா…
வெளியே வந்த அத்தையை இவனுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை, மிகவும் மெலிந்து உணவையே காணாமல் நான்கைந்து நாட்கள் இருந்தால் எப்படி இருப்பாளோ அப்படி இருந்தாள். ஒரு நிமிடம் வீட்டு முன்னால் நின்று கொண்டிருந் தவனை அடையாளம் தெரியாமல் விழித்து பார்த்தாள்.
சடையன் சட்டென்று என்னக்கா இப்படி முழிச்சு பார்க்கறே? நம்ம காளீஸ்வரன்,
ஆயியை பார்க்க நான்தான் கூப்பிட்டுட்டு வந்தேன்.
காளீஸ்வரனா..அத்தையின் கண்களில் பளபளப்பு.. அவள் மெலிந்திருந்த உடலுக்குள் கண்கள் மட்டும் விரிந்து அவனை வியப்பாய் பார்த்தன.
என்னக்கா, வா ன்னு சொல்லமாட்டீங்களா? சடையனுக்கு பயம், எங்கே காளீஸ்வரன் கோபித்துக்கொண்டு போய் விடுவானோ?
வா..சாமி..வா. அந்த வீட்டிற்குள் நுழையும்போதே வறுமை இவன் முகத்தில் அடித்தது. முன்புறம் ஒட்டியிருந்த திண்ணையில் கிழிந்த பாயென்றில் சக்கையாய் ஒரு உருவம் படுத்து கிடந்தது. சடையன் அதன் அருகில் உட்கார்ந்து ஆயி..ஆயி..சத்தமாய் காதோரம் கத்தினான்.
மெல்ல கண்களை திறந்து பார்த்த ஆயியிடம் இவன் காளீஸ்வரனை கை காட்டினான். யாரு வந்திருக்கா பாருங்க? ஆயி கண்களை சுருக்கி பார்க்க, இவன் அவள் முகத்தின் அருகில் சென்று நான் காளீவரன் வந்திருக்கேன், உங்க மக பேச்சியோட மவன்.
பேச்சி..மகளின் பெயரை கேட்டதும் கிழவியின் முகத்தில் பிரகாசம், காளீஸ்வரனின் முகத்தை தொட்டு பார்த்து தடவினாள். எம்புட்டு நாளாச்சு, ரோசக்காரி, ஆத்தாளையும், அண்ணனையும் வெட்டி எறிஞ்சு பேசிட்டு போனாளே, கிழவிக்கு கண்களில் கரகரவென்று கண்ணீர்.
காளீஸ்வரனின் மனதுக்குள்ளும் மெல்லிய சோகம், அம்மா எத்தனை முறை சொல்லி அழுதிருக்கிறாள். உங்க அப்பனை காவு கொடுத்திட்டு, பிழைக்க வழியில்லாம அவன் வூட்டுக்கு போயி வுக்காந்ததுக்கு என்னை எங்க சொத்தை பிரிச்சு கொடுக்க சொல்லுவாளோன்னு பேசி பேசியே என்னை விரட்டி அடிச்சாங்க. ஒரு வேளை சோத்துக்கு நான் அவங்க கிட்ட கையேந்தி நின்னேன், எல்லாம் உனக்காக, நீ அப்ப கை குழந்தை,
மீனாட்சி அக்கா அம்மாவுக்கு கொடுத்த ஆதரவு, பாவம் கணவனை இழந்து அந்த குடிசையில் வாழ்ந்தவள், அம்மாவை அழைத்து கொண்டு போய் தன் குடிசையில் தங்க வைத்து, அவளுக்கென்று இரண்டு ஆட்டுக்குட்டியை பேசி வாங்கி கொடுத்து, காடு கழனி என்று வேலைக்கு கூட்டி சென்று பார்த்துக்கொண்டாள்.
சட்டென்று தன் ஞாபகங்களை உதறிக்கொண்டான். அதற்குள் இரண்டு அலுமினிய தம்ளரில் மோரை எடுத்து வந்து கொடுத்த அத்தை அவனிடம்..காளீஸ்வரா பழசை மனசுல வச்சுக்காதே, உன் மாமனும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாக, வயலு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு, எங்க பொண்ணு மயிலா ஆஸ்பத்திரி செலவுன்னு எல்லாம் முழுகி போச்சு, கடைசியில மயிலாவும் போயிட்டா..
இப்பக்கூட இந்த இடமும் வீடும் அடவு வச்சுத்தான் செலவ தாட்டிக்கிட்டிருக்கோம். வட்டி கூட கட்டமுடியாம ரொம்ப சிரமத்துலதான் எங்க வண்டி ஓடுது. அடவு வாங்கினவன் மொத்தமா விலைக்கு கொடுத்திடுங்கன்னு கேட்டுகிட்டிருக்கான், எங்க நிலைமை தெரிஞ்சு அடிமாட்டு விலைக்கு கேட்டு, அதுலயும் அடவு பணம் அசலும், அது போக வட்டியும் கழிச்சு போக மிச்சம் தாறோம், அப்படீங்கறான். ஒரு நிமிசம் இங்க சோத்துக்கும் பாத்துக்கும் அல்லாடறதை நினைக்கறப்போ பேசாம அவன் கேட்ட தொகைக்கு கொடுத்துத்துப்பிட்டு எங்கனாயவது ஒதுங்கிபொயிடலாமுன்னு நினைக்கறோம், ஆனா நினைச்சுப்பாரு, இந்த ஊர்ல தலை நிமிர்ந்து நடந்த குடும்பம், இப்ப இருக்கற வூட்டையும், எவனுக்கோ கொடுத்துட்டு பஞ்ச பரதாரியாய், இந்த கிழவியையும் வச்சிகிட்டு எங்க போறது? அதற்கு மேல் பேச முடியாமல் அழுகை முட்டிக்கொண்டு வர தேம்பினாள்.
சட்டென்று மூக்கை உறிஞ்சியவள், உங்க மாமன் உங்க அம்மாளுக்குன்னு அதா பாரு அந்த கிணத்தோரம் அஞ்சு செண்ட் எழுதி வச்சுத்தான் இருந்தாரு, அதுவும் கூட இப்ப அடமானத்துக்கு போயி… அழுதாள்.
ஓ..! கடைசியில் ஐம்பது சென்ட் இடத்தில் இவன் அம்மாவிற்கென்று போனால் போகிறதென்று மூலையோரம் ஐந்து சென்ட் மட்டும் எழுதி வைத்து..ம்…நினைத்தவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. பாவம் அம்மா அன்று கேட்டதும் அதுதானே, நானும் குழந்தையும் வசிக்க, ஒரு இடம் இங்கேயே கொடுங்கள் என்று கேட்டதற்குத்தானே, இத்தனை அவமானமும், இப்பொழுது கொடுத்திருக்கிறார்கள் அதுவும் எங்கே? மொத்தமாக போகப்போகிறது, என்று தெரிந்ததும் எவனோ ஒருவனிடம்.
அம்பது சென்ட்..? மனதுக்குள் ஒரு யோசனை வர, மொத்தமா எம்புட்டு வரும்?
இவன் கேள்வியை அவளிடம் எதிர்பாராமல் கேட்டது போல் திகைத்தாள். அது வந்து..
காளீஸ்வரன் உரத்து சொன்னான், மாமா வந்தவுடனே அவங்க எத்தனை விலைக்கு கேட்டாங்கன்னு சொல்லுங்க, அந்த விலையை விட அதிகமாவே நான் தந்துடறேன். நாளைக்கே கிரயம் பண்ணலாம், என்ன சொல்றீங்க? அதுக்கப்புறம் கடைசி வரைக்கும், நீங்க மூணு பேரும் இங்க நிம்மதியா இருக்கலாம். வந்த பணத்துல வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிட்டுட்டு இருங்க.
“க்கும்” கணைப்பு சத்தம் கேட்டு திரும்பினான். அன்று மீசையை முறுக்கியபடி உட்கார்ந்திருந்த உருவமா அது? மெலிந்து கன்னத்து எலும்புகள் வெளியில் தெரிய கிழிசலான ஒரு கை பனியனுடன், பார்க்கவே பரிதாபமாய் காணாப்பட்டார். அவனை நெருங்கியவர், என்னை மன்னிச்சிடு தம்பி, ஏதோ சொல்ல வந்தார்.
காளீஸ்வரன் சட்டென்று கை அமர்த்தி வேணாம், நடந்தது எல்லாம் போனதாகவே இருக்கட்டும், அத்திய எல்லாம் சொல்லுச்சு, அதான் நான் இது மொத்தமும் எவ்வளவு விலையாகும்னு கேட்டுட்டு இருந்தேன். உங்களுக்கு கட்டுப்படியாகற விலைய சொல்லுங்க, சங்கடப்படவேண்டாம்,நான் ஒத்துக்கறேன், இப்பவே போய் அடவுக்காரனுக்கு கணக்கை முடிச்சு பத்திரம் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம், என்ன சொல்றீங்க?
அவன் மூச்சு விடாமல் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவர் கண்களில் தன்னையும் அறியாமல் கண்ணீர், அன்று பசியென்று வாசலில் நின்ற சிறுவனா இவன்? இளைஞனாய் அப்படியே தங்கை பேச்சியம்மாளே பேசுவது போல…
மதியம் இரண்டு மணிக்கு குடிசைக்குள் நுழையும்போது மீனாட்சி அக்கா சாதம் வைத்து காத்திருந்தாள், எம்புட்டு நேரம்? எங்க போயிருந்தே/
ஆயி வூட்டுக்கு,
வியப்பாய் பார்த்தாள், கண்களில் கனிவு
மொத்தமா விலை பேசிட்டேன், மாமா ஒத்துகிட்டார், அதான் அடவுக்காரங்கிட்ட போயி எல்லாத்தையும் மீட்டு கொண்டு வந்திட்டேன். நாளைக்கு என் பேருக்கு கிரயம் பண்ணலாமுன்னு நினைக்கேன். “பேச்சியம்மா தோட்டமுன்னு” பேர் வைக்க போறேன். ஒரு ‘சான்’ இடம் கூட கொடுக்கமாட்டோமுன்னு சொன்னவங்களோட இடம் முழுக்க இனி அம்மா பேருலதான் இருக்கப்போவுது. அந்த வூடும், இடமும். குரலில் ஒரு பெருமிதம்.
ரொம்ப நல்ல விசயம்யா, பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம், உங்க அம்மா கூட உயிரோட இருந்திருந்தா,அதைத்தான் செய்ய சொல்லியிருப்பா. சரி கைய கழுவிட்டு வா, பசிக்கு, எம்புட்டு நேரம் உனக்காக காத்திருப்பேன்.
இன்னும் எனக்காக காத்திருக்கியா? இவனே எழுந்து இரண்டு தட்டை எடுத்து வைத்து சாதத்தை போட்டு அவள் முன்னால் வைத்தான். குழம்பு சட்டியில் இருந்து குழம்பை கலக்கி இரண்டு தட்டுக்களில் சோற்றின் மேல் ஊற்றியவள், அப்ப அடுத்த லீவுல துபாயில இருந்து வந்தவுடனே உன்னை பெத்த பேச்சியம்மா பேர் போட்ட வூட்டுக்கு போயிடுவே, இல்லையா? குரலில் தெரிந்த ஏக்கம்..
காளீஸ்வரன் ஏன் அப்ப எங்கம்மாளும்,நீயும்தான என்னைய புள்ளையா வளர்த்தீங்க. எங்கம்மா செத்ததுக்கப்புறம் நீ என்னை புள்ளியயா ஏத்துக்கலை அப்படித்தானே? உறுத்து பார்த்தபடி அவளிடம் உன்ற வூட்டுக்கு வரவேணாமுங்கிறியா?
இல்லையில்லை, சும்மாத்தான் சொன்னேன்,அவள் முன்னால் வைத்திருந்த தட்டு சோற்றில் விழுந்தது அவளின் இரண்டு சொட்டு கண்ணீர்துளிகள்.
ஊரை விட்டு கிம்பும்போது இத்தனை வருடங்களாக அவன் மனதுக்குள் உறுத்தி கொண்டிருந்த அந்த ஒரு ஏக்கம் காணாமல் போயிருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Oct-24, 11:30 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : amma peril
பார்வை : 48

மேலே