பருவம் தொட்ட நாள் முதலாய்

பருவம் தொட்ட நாள் முதலாய்-முழுப்
பாவடை மேலேத் தாவணியாய்;
பெரியவளாக நாணுகிறாய்;
பேசமறுத்தும் ஓடுகிறாய்.

அரவம் இல்லா இடம் வரவும்-நீயோ
அச்சம் கொண்டு ஒதுங்குகிறாய்.
அருகில் நெருங்கப் பதுங்குகிறாய்;
உருவி விலகி ஓடுகிறாய்.

பார்த்தும் பாராமல் போகின்றாய்-முகம்
போர்த்தி மறைத்துக் கூசுகிறாய்.
நேற்று வரையும் இல்லாத-
நிலமை என்னடிச் சொல்லாயோ!

சண்டைக்காரியைப் போல நீ!-ஏனோக்
கண்டால் சீறிப் பாயுகிறாய்.
கண்டுங் காணாத முகமாக்கி
சண்டாளியானாய் அகங்காரி!.

பாட்டிக் கூட மாறிவிட்டாள்-என்னைப்
படியில் மறுத்தே நிறுத்துகிறாள்.
எட்டிப்பார்க்கவும் மறைக்கிறாள்;
என்ன அவசியம் என்கிறாள்.

குரலைக் கேட்டே ஓடி வரும்-என்
குழந்தைக் கௌரி எங்கயடி?
ஒரு நாள் முழுக்க உன் வாசல்-
இருக்குறேன் காத்துங் காணல?

மரத்தைச் சுத்தி விளையாட-அந்த
மனசு உன்னைத் தேடுறேன்.
அத்து அலையும் பட்டமடி!
ஆகிப் போனேன் பாவமடி.!

நேத்துவரைத் தொட்டுப் பேசி-தோப்பு
ஆத்தோரம் ஆடி ஓடி ;
சேத்தனச்ச சின்னத்தனம்:
சின்னத் தாவணி மறச்சதடி.

என்னடி ஆச்சு வீட்டார்க்கு-இப்போ
என்னைச் சேர்க்க வெறுப்பதற்கு?
முன்னடிப் போல இல்லையடி!
உன்னோட நினைப்புத் தொல்லையடி!.

பள்ளிக் கூடமும் விடமாட்டா-இனிப்
பார்ப்பதந்தக் கனவோடி.!
துள்ளித் திரிஞ்ச மானோடி!
தும்புலக் கட்டிப் போட்டாடி!

வயசுக்கு வந்த பருவமடி-அது
வந்துத் தொலைஞ்ச மோசமடி.!
பயலாப் பிறந்தேன் தோசமடி!
பாழாய்ப் போச்சே பழக்கமடி.!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (2-Nov-13, 11:08 pm)
பார்வை : 193

மேலே