முதுமை

விழுதுகள் வெறுக்கும்
ஆலமரம் நாங்கள்.

பால் வற்றிய
கறவைப் பசுக்கள்.
காத்துக் கிடக்கிறோம்
கசாப்பு கடைக்காரனுக்காய்.

தோளில் சுமந்துக் கொஞ்சிய
எம் மக்களோ
பாரம் நாங்களென்று
வீசுகின்றனர் வீதியில்

சொந்த ரத்தங்களை
தூக்கி வீசுகிறது
சொத்துக்களை நாடிய மனது.

ஒவொரு மாதமும்
முறைப் போட்டு
முறைப்புடன் பராமரிக்கும் மக்கள்.

தாய் பெரிய மகன் வீட்டில்.
தந்தை இளைய மகன் வீட்டில்.
முதுமையில் தான்
துணை வேண்டும் என்பதை
அறியாத மாக்கள்.

ரேஷன் கார்டுகளில்
எங்களைச் சேர்க்கும் மக்கள்
வீடுகளில் சேர்க்க ஏனோ
மறுத்து விடுகிறார்கள்.

பாட்டன் பாட்டியுடன் பழகினால்
பாழாகிவிடும் படிபென்று
வெறுப்புடன் கண்டிக்கும்
மருமகள்கள்.

ஆயிரம் நோயில் அவதிப் பட்டு
அல்லலுற்று
அன்று காப்பாற்றிய மகனோ
சற்றே இரும்பினாலும்
சனியன் ஏன் சாகவில்லை என்று
சத்தமிடுகிறான் இன்று.

ஊட்டி ஊட்டி வளர்த்த மகன்
இன்றோ
மிஞ்சிய சோற்றை வீசுகிறான் முகத்தில்.
அதையும் உண்ண மறுத்துவிட்டால்
அடுத்து வரும் நாட்களெல்லாம்
பட்டினிதான்.

என் சொத்து சுகங்களை
அனுபவிக்கும் மகனே
இன்று நான் சுமக்கும்
முதுமையும்
இறுதியில் உனக்கு தான்
கவனமாய் இரு
கவனிக்கின்றனர் உன் மக்கள்
உன் செயலை!

எழுதியவர் : த.எழிலன் (3-Nov-13, 1:46 am)
Tanglish : muthumai
பார்வை : 46

மேலே