இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா தொடர் 1
புலந்தரீ ஸப்வா ஸே நஹீ ஹூவா
கலந்தரீ ஸ்ப்வா ஸே ஹூவா
என்று இரண்டே அடிகளில் உர்து மொழிக்கே உரிய ஓர் அற்புதமான அழகுடன் அல்லாமா இக்பால் ஒரு கவிதையை நமக்குக் கொடுத்து, இஸ்லாம் பரவிய விதத்தைப் பற்றிய ஒரு வரலாற்று உண்மையைத் தெளிவுப் படுத்துகிறார். இதோடு இந்தக் கட்டுரையை முடித்துக் கொண்டு விடலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஒருவகையில் இந்த கட்டுரையே இந்த இரண்டடிகளின் விளக்கம்தான்.
அல்லாமா இக்பாலின் மேலே குறிப்பிட்ட மாதிரியான ஒரு கவிதையை ஹெச். அப்துர் ரஹீம் அழகாக தமிழில் மறுபடைப்பு செய்திருக்கிறார். அவருடைய கவிதை :
அறமுன்னால் அணுகுண்டும் ஆற்றலுறும் எழுத்தாளன்
திறமுன்னால் வாளுரமும் பாழ்!
இஸ்லாம் வளர்ந்து, கிளைத்து, ஆலமரமாய்த் தழைத்து உலகெங்கும் வேர்விட்ட வரலாற்றைப் பொறுத்தவரை இந்தக் கவிதை சொல்வதும் உண்மையே. அறமும், திறமும், அமைதியும், சமாதானமும் இஸ்லாத்தின் நிரந்தர நிறங்களாகவே இருந்து வந்துள்ளன.
வாளுரத்திற்கும் ஒன்றும் குறைவில்லைதான். தேவைப்படும்போது அதுவும் பயன்படத்தான் செய்திருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம்: இஸ்லாமிய வாளின் கூர்மை அமைதியாலும் சமாதானத்தினாலும் பட்டைத் தீட்டப்பட்டது. பெருமானாரின் வாளில் கூட "சாந்தியும் சமாதானமும்" என்று பொறிக்கப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகிறது!
நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதோ, மேடையில் பேசும்போதோ வணக்கம், "குட் மார்னிங்", லேடிஸ் அன் ஜென்டில்மேன்" என்றெல்லாம் பலவிதமாக விளிக்கிறோம். ஆனால் விவேகானந்தர் அமெரிக்கா சென்ற போது, சகோதரர்களே, சகோதரிகளே" என்றழைத்ததை இன்றளவும் நாம் ஏன் நினைவு கொள்கிறோம்? அது வித்தியாசமாக இருந்தது என்பதற்காக மட்டுமல்ல. அதில் இருந்த ஒரு சமத்துவமும் சகோதரத்துவமும் மற்ற எதிலும் இல்லை என்பதால்தான். அவருடைய உயர்ந்த சிந்தனை, ஒரு சம்பிரதாயமான விளிப்பைக்கூட உயிரோட்டமுள்ளதாக மாற்றிவிட்டிருந்தது.
முஸ்லீம்கள் ஒருவை ஒருவர் சந்திக்கும்போதும், மேடைகளில் பேச்சை தொடங்குமுன்னும் " அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வதை இந்த உலகம் நன்கு அறியும். அதன் அர்த்தம் இதுதான்: "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாகுக." காரணம், இஸ்லாம் என்பதே சாந்தியும் சமாதானமும்தான். வன்முறையும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை
; எதிரானவை.
ஸலாம் என்ற சொல்லின் அர்த்தம் இஸ்லாம் என்று விரிவு பெறுகிறது. அமைதியின் மறுபெயர் இஸ்லாம். ஸலாம் என்பது இறைவனின் பெயர்களின் ஒன்று எனவும் திருமறையிலிருந்து அறிகிறோம். ஸலாம் என்ற பெயருக்கு அமைதியளிப்பவன், இரட்சகன், சாந்தியும் சமாதானமும் அளிப்பவன் என்றெல்லாம் அர்த்தம் வரும்.
தொடரும்....
நன்றி
நாகூர் ரூமி.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
