இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா தொடர்ச்சி 2
தொடர்ச்சி 2....
புனித பைபிளில்கூட இயேசு போன்ற தூதர்கள் மற்றவர்களைப் பார்க்கும்போது பீஸ் பி அன்டு யு என்று சொல்வதாகத்தானே இருக்கிறது! " அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதன் ஆங்கில மொழிப்பெயர்ப்புத்தான் அது! இப்படிக் காலங்காலமாக சாந்தியையும் சமாதானத்தையும் பரப்பிக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் மீது, வாளால் பரவிய மார்க்கம் என்ற கற்பனைச் சேற்றை வாரியிறைப்பது எது அல்லது எவர்?
நண்பர் ஒருவர் ஒரு நிழல்படத்தை கணினியில் ஏற்றி வைத்திருந்தார். ஏதோ துணியைப் போட்டு முகத்தை மறைத்திருந்த ஒரு மனிதன் ஒரு கையில் திருக்குரானையும் இன்னொன்றில் ஒரு துப்பாக்கியையும் ஏந்திக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு படம். " இஸ்லாமிய தீவிரவாதி" என்பதாகக் கீழே எழுதியிருந்தது. பத்திரிக்கைகளும் மற்ற மீடியாக்களும் இன்றைக்கும் இப்படித்தான் முத்திரைக் குத்திக் காட்டுகின்றன. உண்மையில் அந்த மனிதன் முஸ்லீமாக இல்லாமலிருக்கலாம். வேறு யாராவது வேண்டுமென்றே கூட அப்படி 'போஸ்' கொடுத்திருக்கலாம்.
இப்போது முக்கியம், அவன் உண்மையில் முஸ்லீமா அல்லவா என்பதல்ல. இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாததைத் தூண்டுகிறதா, ஆதரிக்கிறதா, அனுமதிக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதில்தான்.
ஓர் அழுத்தமான "இல்லை" என்பதையே பதிலாக இஸ்லாமிய வரலாறு காட்டுகிறது என்பது மட்டுமல்ல: அஹிம்சை, அமைதி, சமாதானம் இவற்றை மட்டுமே இஸ்லாம் ஆதரிக்கிறது, சிபாரிசு செய்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு மோகந்தாஸ் காந்தி மகாத்மா காந்தியானதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கோட்சேக்கள் தவறாகத்தான் புரிந்துக் கொள்வார்கள் என்ற வரலாற்றையும் நாமறிவோம். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதச் செயல்பாடு மகாத்மா காந்தியின் படுகொலைதான் என்பதையும் நாம் மறக்க முடியாது.
தொடரும்....
நன்றி
நாகூர் ரூமி.