சிரிப்பவர் யார்-அழுபவர் யார்
அழுகையும் சிரிப்பும்
அமைந்தது வாழ்க்கை.
அதையும் மறந்தால்
அடைவது இயற்கை.
அழுகையில் ஜனனம்.
அழுகையில் மரணம்.
இடையில் கலப்படம்
இதுதான் அனுபவம்.
அழுகையும் சிரிப்பும்
ஆறாம் அறிவாம்.
உணர்வுகள் மொழியும்
உன்னத வழியாம்
அதுதான் சிறப்பு
மனிதனின் பிறப்பு.
அழவிட்டு வாழ்வான்
அவன் மட்டுஞ் சிரிப்பான்.
ஒரு நாள் அவனும்
உலகினைக் கடப்பான்,
அதுதான் திருநாள்
அகிலம் சிரிக்கும்.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பான்.
தனக்கென வாழான்
தர்மனின் மரணம்
புவி தன் இழப்பாய்
பொங்கி அழுகும்.
வாழ்ந்தவன் வாழ்க்கை
வசதியில் இல்லை.
உனக்காய் மனிதம்
ஒருத் துளிக்கண்ணீர்
அழுது சிந்தினால்
அதுதான் வாழ்க்கை.
இன்பம் சிரிக்கும்
ஏழையின் குடிலில்.
துன்பம் அழுகும்
மாளிகை அரணில்
வறுமை அழுதால்
வளமை சிரிக்கும்.
கதவுகள் இல்லாக்
காவலுஞ் சிரிக்கும்.
பூட்டுக்குள் முடங்கும்
பொக்கிசம் அழுகும்.
காப்பவன் அழுவான்
பார்பபவன் சிரிப்பான்.
சிரிப்பது உடலின்
செழுமைக் காக்கும்.
அழுகை அருமைக்
கண்ணீர் உதிர்க்கும்
சிரித்தால் லாபம்
அழுதால் பாவம்.
சிரிப்பவர் யாரோ!
அழுபவர் யாரோ!
அவரவர் தீர்ப்புச்
செயலில் இருக்கு.
பாவ புன்னியம்
பார்த்திடுங் கணக்கு.
கொ.பெ.பி.அய்யா.