பதில் சொல்வாள் பத்ரகாளி --மெய்யன் நடராஜ்

முகமூடி அணிந்து கொண்டு
==முகங்களைத் தாக்கு கின்ற
சுகத்தினிலே திளைத்தி ருக்கும்
==சொற்களின் சொந்தக் காரர்
நகம்மீது அழுக்கு ஒட்டா
==நடிகர் போலே எழுத்தில்
சகசாலம் காட்டி விட்டால்
==சாவெனைத் தீண்டு மாமோ?

தாலிக்கு காவல் என்று
==தாரமும் மெய்தனை உருக்கி
நீலிக்கு செய்யும் பூஜை
==நித்தமும் தொடர்ந்தி ருத்தல்
போலியாய் இருக்கு மென்றால்
==போவேன் சீக்கி ரத்தில்!
வேலிபோல் காளி காக்க
==வெறும்சா பம்பலிக் குமோ?

அழிகின்ற தெய்வா லயங்கள்
==அடிக்கடி நெஞ்சைத் தாக்க
வழிகின்ற துயரக் கண்ணீர்
==வடுக்களை கொடுக்கும் வேளை
எழுகின்ற கோபம் தன்னை
==எழுத்தில் வடிப்ப தாலே
பழிக்கின்றேன் தெய்வம் தனைஎன
==பார்ப்பது தவறு தவறு ..

சிதைத்தவர் குடும்பம் பிள்ளை
==சிறப்புடன் வாழ்ந்தி ருக்க
சிதைந்தவர் ஏக்கம் கூட
==சிதைவுறும் எங்கள் நாட்டில்
சிதைகின்ற வழிபடும் தளங்கள்
==சிந்தை வருத்திய வேளை
பதைத்திட்ட உயிரின் தாக்கம்
==பழிப்ப தென்றா கிடுமோ?

முக்காலம் தெய்வம் வணங்கி
==முகிழ்ந்திடும் எனக்குள் இருக்கும்
அக்காளாம் அண்டம் காப்பாள்
==அவளிடம் கேட்டக் கேள்வி
எக்காளம் இடுதற் கல்ல
==என்றவள் உணர்ந்து இங்கே
இக்காலம் சாப மிட்டோர்
==இடிக்கொரு பதில்சொல் வாளே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Nov-13, 10:18 pm)
பார்வை : 134

மேலே