என்னை வெறுக்கும் நான்
ஒற்றைக்கண்ணில்
வடிந்து செல்லும்
நீர்த்துளிகள் நான் ...
மறு கண்ணில்
போலிச் சிரிப்பு
வரைகின்றவன் தான்...
என்னோடு அணையட்டும்
என் குமுறல்கள்...
நெஞ்சோடு புதையட்டும்
என் சோகங்கள்...
நான் கிழித்த கோடுகள்
முடக்காகிப் போகின்றன,
நான் விதைத்த நாற்றுகள்
மண்ணோடு மாய்கின்றன...
என் வானத்தில் மட்டும்
இரட்டைச் சூரியன்கள்
ஒன்றுக்கும் ஒளி வீசத் தெரியவில்லை...
என் ராகத்தில் மட்டும்
பல நூறு ஸ்வரங்கள்
ஏதொன்றும் கானத்தில் சேரவில்லை...
அன்னை மடியில் தான்
நானும் அவதரித்தேன்...
அகில மொழியைத்தான்
நானும் அனுபவித்தேன்...
இருந்தும் பிறர் கண்ணில்
நான் மனித ஜாதியில்லை...
இருண்ட தேசத்தில்
மெழுகுவர்த்தியாய் நிற்கிறேன்...
இருந்தும் என் வெளிச்சம்
யாருக்கும் தேவையில்லை...
வற்றாத கடலுக்குள்
ஓர் படகாய் மிதக்கிறேன்...
நீச்சலடித்து வந்து என்னோடு தொற்ற
யாருக்கும் தோன்றவில்லை...
அதனால் தான்
நானே முடிவெடுத்துக் கொண்டேன்...
நிலத்தில் வீசும் கற்களை
குளத்தில் வீசப் போகிறேன்...
அந்த அலைகளாவது என்
அடையாளம் பேசட்டும்...
காட்டுக்குள் இருக்கும்
என் கனவுப் பாதையை,
நானே வழி சமைக்கப் போகிறேன்...
பிற்பிறவிகளாவது என்
வறலாறு கூறட்டும்...