அம்மா நான் பார்த்தவர்களில் உயர் ரகம் நீ

அம்மா
நீ நான் நம் உறவு
எத்துனை நிறைவு
உன் கருவறைக்குள் கனிந்தது முதல்
கடைசியாய் உன்
கைகளின் தழுவுதலுக்குள் தொலைந்தது வரை
ஒவ்வொரு நிகழ்வும்
என் உயிருக்கு நெகிழ்வு
நீ கருவானதால்
இந்த ஞாலத்தில் நான் உருவானேன்
நீ உனக்குள் ஓர் இடம் தந்ததால்
நான் உன்னிடம் உருவெடுத்தேன்

எனக்கு உயிர் வரம் தந்த
உயர் ரகம் நீ
நான் வளர்ந்த நகரம் நீ
நீ இல்லை என்றால்
இன்று உலகில் ஏது
என்னைப் போல் ஒரு பிள்ளை
தொல்லை எனக் கொள்ளாமல்
தள்ளி போய் நிற்காமல்
தள்ளையாய் எனைத் தழுவிக் கொண்டவளே

பத்து மாதம் உனக்கு ஓர் தவம்
உள்ளிருக்கும் வரம் பத்திரமாய்
உன் கரம் சேர வேண்டுமென
உள்ளிருக்கும் எனக்கும் ஓர் தவம்
உனக்குள் இருந்து என்னை
இறக்காமல் விட்டு விடுவார்களா என
நீ எனக்கு
அன்னை ஆனதனால்
அத்தனையும் ஆனாய்

நான் உனக்கு அதிகம்
வலியை தந்திருக்கிறேன் - ஆனால் நீ
அந்த பழியை கூட
எனக்கு தந்ததில்லை
என்னை ஆளாக்கவே - உன்
நாட்களை எல்லாம் பாழாக்கிக் கொண்டவளே
எல்லா வேளையும் எனக்கே
வேலை செய்து கிடந்தவளே
நாளும் கிழமையும் என்னையே
நினைத்து இழைத்து கிடந்தவளே
என்னில் சரிபாதி கொண்டவளே
என்னை இலவசமாய் பரவசப்படுத்துபவளே

படுகுழிக்குள் இறங்கினாலும்
பாரின் கடை எல்லை
கடந்து பார்த்தாலும்
வானின் வரை
விரைந்து தேடினாலும்
உன் விழியில் விளைந்து வழியும்
அன்பை
வாழ்க்கை வழியில் வேறு
எவரிடமும் பார்த்துவிடமுடியாது
உன் நிலைக்கு உயரும் தகுதியும்
பெண்ணாய் பிறந்தும் - அது
இன்னொருவருக்கு வாய்த்துவிடாது
அவ்வளவு எளிதில் உயிரும் உறவாடிவிடாது

கருவறையிலும் கமர்சியல்
கலந்துவிட்ட காலத்தில்
என் குரல் வீழ்ச்சி கொண்டே
நான் எங்கோ விழுந்துகிடக்கிறேன்
தவித்துக் கிடக்கிறேன் என்பதை
விளங்கிக் கொள்ளும் வினோதம் நீ
அம்மா நீ
ஓர் உயிருக்குள் உறைந்திருக்கும்
ஓராயிரம் உறவு
அம்மா நீ ஆற்றல்
அம்மா நீ நிஜம்
அம்மா நீ நிரந்தரம்
அம்மா நீ நிம்மதி
அம்மா நீ சுயநலம் இல்லா சுகம்
அம்மா நீ தான் அன்பு

தொலைதூரம் நின்றாலும்
தொட்டுப் போகும்
பாசத்தை கொட்டிப் போகும்
ஏக்கத்தை தூண்டிப் போகும்
உறவு உன்னையன்றி
சத்தியமாய் சாத்தியம் ஆகாது

வாழ்க்கை நிகழ்வில்
தடுமாறி விழும்போதெல்லாம்
என்னைத் தாங்கி நடத்தும்
நடைவண்டி போல்
அருகில் நடமாடிக் கொண்டிருப்பவளே
நான் உனக்கு ஏதும் செய்ததில்லை
அதற்காய் உன் சேவையை நீ
இன்றுவரை நிறுத்தியதில்லை


உன் கனவுகளில் எல்லாம் கூட
என்னையே கண்டவளே
என்னை குறித்தே சிந்திக்க - உன்
இதயத்தில் திண்ணை அமைத்துக் கொண்டவளே
என் கண்ணீர் கண்டால் - எந்த
கரையும் தாண்ட - எந்த
மலையும் ஏற தயங்காதவளே
என்னை இயக்கவே
இயங்கிக் கொண்டிருப்பவளே

உன் சமையலுக்குள் என்னை
சாமர்த்தியமாய் சாய்த்தவளே - உன்
விரல்களுக்குள் விழுந்து
பிசைந்து வருவதால் - அதை நீ
ஊட்டி விடுவதால்
அந்த சோற்றில்
புதிய ஆற்றல் - என்
நரம்பு வழி நகர்வதை உணர்கிறேன்

உன் விரல் பட்டுவிட்டால்
எந்த உணவும் வீணாகி விடாது
உன் மடிசாய்ந்து கிடந்தால்
எந்த வலியும் வலிக்காது
உன் மடியில் விழுந்து எழும் போதெல்லாம்
வாழ்வில் புதிதாய்
விடிந்து எழுந்து புறப்படுகிறேன்

நான் பார்த்தவர்களில் உயர் ரகம் நீ
என் அகம் எங்கும் அலங்கரிக்கும்
அன்பு நீ
அம்மா ஆயுள் அடங்கும் வரை
அன்பு முத்தங்கள்
என் வாழ்வில் வந்த தாரகையே
என் சொந்த தேவதையே
என் வாழ்வும் முழுதாய்
உனக்கே தொழுகை

எழுதியவர் : Raymond (6-Nov-13, 4:13 pm)
பார்வை : 102

மேலே