இனிப்பும் கசப்பாகும்

இனிப்பும் கசப்பாகும்
இனிப்பையே சுவைத்தால்
கசக்கும் உண்மையில்
பிறக்கும் தெளிவுடன்
சரியான தீர்வு.

இன்ப மயமே
வாழ்க்கை என்றால்
இருக்காது நம்மிடம்
உயர்ந்த பகுத்தறிவு.

இன்பம் எப்போதாவது
தொட்டுக் கொள்ள
உதவும் ஊறுகாய்.

அவ்வப்போது சுவைக்கலாம்
புலனின்ப ஊறுகாயை
எப்போதும் சுவைத்தால்
உயர்ந்தவை என்பதே
இல்லாமல் போய்விடும்.

பண்பு அழிவதும்
சோம்பல் பெருகுவதும்
சுயநலம் வளர்வதும்
பேராசை எழுவதும்
இன்பத்தை மட்டுமே
எப்போதும் விரும்பும்
இயல்பினால் தானே!

கசக்கும் கீரைகள்
காய்கறி வகைகள்தான்
நோய்தீர்க்கும் மருந்தாகும்.

இனிப்பவை எல்லாம்
உகந்தவை அல்ல.
மிதம் கொஞ்சம் மீறினால்
நோய் எதுவும் வரலாம்.

இன்பத்தை மட்டுமே
வரம்பின்றிச் சுவைத்தால்
மதம் பிடித்துக் கொள்ளும்
மற்றவர்க்கே கிட்டும்
தீராத தொல்லை!

துன்பம் வருவது
நம்மைத்
தூய்மைப் படுத்தவே.

இன்பமாக்குங்கள்
துன்பத்தை
ஞானம் பிறக்கும்
பரம்பொருள் புரியும்!
(1999)

எழுதியவர் : இரா.சுவாமிநாதன் (9-Nov-13, 4:33 pm)
பார்வை : 216

மேலே