கண்ணீர்க்கொத்துக்களோடு

கண்ணீர்க்கொத்துக்களோடு...
=====================================ருத்ரா

புஷ்பாதங்கதுரையை
புத்தகங்களுக்குள்
செருகிக்கொள்ளாத
கல்லூரி இளசுகளையே
அப்போது காண முடியாது.
சுஜாதாவின் நிழல் போல்
தோன்றினாலும்
இவர் சொல்லுக்குள்
இருக்கும் சூடு
உள்ளத்தை மட்டுமே நிமிண்டும்.
சுஜாதாவின்
அரைப்புள்ளி முக்கால்புள்ளி கூட‌
குவாண்டம் சொல்லும்
ஹோலோகிராபியை
நம் பாக்கெட்டில் போடும்
கூடவே கூடுதலாய்
காதலையும் தான்.
ஆனால்
பெண்வாசனையை
புனைபெயரில் தடவிக்கொண்ட போதும்
பிரபஞ்சத்தையும் இவர்
பிய்த்துப்பார்க்கத்தவறுவது இல்லை.
அப்படித்தான்
"திருவரங்கனை"
அவர் ஊர்வலமாக
கொண்டு சென்றதை
மறக்கவே இயலாது
"வேணுகோபாலனாய்"மாறி.
இருப்பினும்
அவர்
ஊதாப்பூக்கள்
சாதாப்பூக்கள் இல்லை.
அது ஊடுருவி..கண்சிமிட்டி
கலகம் செய்த காவியத்துக்கு
வயதுகள் கிடையாது.
சாய்வு நாற்காலி வயதுகளில்
சாயாத இளமை முறுக்கை
சொற்களின் கடலில்
பாய்மரம் விடுகின்ற‌
சாண்டில்யர்களின்
சாகித்யம் தான்
அவருக்கு கலங்கரை விளக்குகள்.
எழுத்துக்களுக்குள்
ஹார்மோன்கள்
ஹார்மோனியம் வாசிப்பதை
அரங்கேற்றி
ஆட்சி செய்த
தமிழ்ப்பிரம்மா இவர்.
இவர் இலக்கியத்தின்
பூத உடல் கூட‌
இன்னும்
மறையாமல் தான்
நம் கூடவே இருக்கிறது.
இதயம் கசிந்த‌
நம் அஞ்சலிகளை
அவர் குடும்பத்தாருக்கு
கண்ணீர்க்கொத்துக்க்களோடு
முன் வைக்கின்றொம்.

====================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (11-Nov-13, 10:59 am)
பார்வை : 72

மேலே