மாநாடு ~ மரணநாடு
மரண நாடொன்றில்
மாநாடு வைக்கப்போகும்
மான்புமிகு நாடுகளின்
மாபெரும் மனிதர்களே!!
கட்டுநாயக்கா உங்களை
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியோடு வரவேற்கும்!
அங்கு வீசும் காற்றில் சுற்றும்
வண்ணக் காற்றாடிகளின் வண்ணத்தில்
உங்கள் எண்ணமெல்லாம் வண்ணமாகும்!
அக்காற்றோடு கலந்து வரும்
கந்தகவாடையும் வெந்தக வாடையும்
உங்களுக்குப் புரியாது!
அலங்கார மண்டபத்தில்
சிங்கார மங்கைகளின்
ஆரவார வரவேற்பில்
எங்களின் அவலக்குரல்
உங்களுக்குக் கேட்காது!!
வரும் வழியில் பாருங்கள்
தமிழனின் மண்டையோடுகள்
உங்கள் கண்களிலும் தென்படலாம்!
நீங்கள் உட்காரும்
நாற்காலிகளின் அடியில்கூட
தமிழனின் எலும்புக்கூடுகள்
உக்கிக்கொண்டிருக்கும்!
சர்வாதிகாரி வீட்டில்
சர்வதேச விருந்து...!
சிங்களம் படைக்கும்
சிங்கிறால் கறிக்குள்
எங்கள் சின்னஞ் சிறுசுகளின்
சின்னி விரல் துண்டுகளும் இருக்கும் பாருங்கள்!
நன்றாகச் சாப்பிடுங்கள்...!
உங்கள் கோரப்பசி அடங்கட்டும்!!
உங்கள் மதுக்கிண்ணங்களை
நிரப்பப் போவது
சிவப்பு நிற திராட்சை ரசமல்ல...
ஈழத்தமிழனின் செங்குருதி...!
அது... ஈழத்தமிழனின் செங்குருதி...!!
சுவைத்துப் பாருங்கள்...!!
தன்மானத் தமிழனின்
உப்புக் கரிக்கும்!
நன்றாகக் குடியுங்கள்...!
உங்கள் கொலைவெறி அடங்கட்டும்!!
ஈழத் தமிழரின் மரணவீட்டில்
விருந்து வைக்கின்றீர்கள்...!
எங்களைக் கொல்லும் மரணநாட்டில்
மாநாடு வைக்கின்றீர்கள்..!!
வட்டமாய் உட்கார்ந்து
திட்டம் போடுவீர்கள்...!
பொதுநலவாய மாநாடு எனும்பெயரில்
சுயநல மாநாட்டை நடாத்திவிட்டு...
ஈழத்தமிழரின் நலத்தை மட்டும்
ஆழத்தோண்டிப் புதைப்பீர்கள்...
எம்மைப் புதைத்ததைப் போலவே!!!
முன்பே முடிவான ஒன்றுதான்
மீண்டும் கூறுகின்றோம்....!
வட்டமாய் உட்கார்ந்து
திட்டம் போடுவீர்கள்...!
பொதுநலவாய மாநாடு என்ற பெயரில்
சுயநல மாநாடொன்றை நடாத்திவிட்டு...
ஈழத்தமிழரின் நலத்தை மட்டும்
ஆழத்தோண்டிப் புதைப்பீர்கள்...
எம்மைப் புதைத்ததைப் போலவே!!!
ஆனால்,
நீங்கள் புதைக்கப் புதைக்க...
கார்த்திகைக் கிழங்குகள் போல...
மீண்டும் மீண்டும்
கார்த்திகைப் பூக்களோடு
துளிர்விடுவோம்!!!