நடுக்கம்

மதியம்
என் வீட்டிற்கு நீ வரயிருக்கிறாய் என்றதும்
மனதின் நிலம் நடுங்கியது
மனிதர்கள் அசைந்தார்கள்
சமையலறையில் இருந்த வெள்ளை வெங்காயம்
கீழே விழுந்தது

பயந்து நானும் கண்களை மூடினால்
கைகள்

வீட்டின் அறைகளை
சாக்குகளைப் பிரித்து அடைத்திருந்தேன்
அதனைக் கிழித்துக்கொண்டு
கைகள்

கைகள்
கோதுமை மாவு குழைத்திருக்கும் வெண்மை

பின்பு என்னை ஏதும் கேள்
வீட்டில் துப்பாக்கி இருக்குமிடத்தைச் சொல்கிறேன்
உன்னைக் கண்டதும் வாலாட்டும்
நாய்க்குட்டி இருக்குமிடத்தைச் சொல்கிறேன்

வாசலில் பூக்கன்றுகள் உடற்பயிற்சி செய்கின்றன
இன்னும் நின்று கொண்டே
நீ வந்திருப்பதை அறிந்து பயந்து நகராமல்

கிணற்றடியில் உலாவும்போது கொக்கறிக்கும் கோழி
சத்தமில்லாது நிற்கிறது பாக்கு மரத்திற்கு கீழ்
தலையில் பாக்கு விழுந்து
உலகம் சுற்றி இறந்தது என் அன்புக்கோழி
அதன் முட்டைகளை
உனக்கு பொரித்தும் தந்திருக்கிறேன்

என்னை சந்திக்க வரும்போதெல்லாம்
தோட்டாக் கோதுகளுடன் வருகிறாய்
போகும்போது
என் வீட்டிலிருக்கும் உயிரினங்களை கொண்டுசெல்கிறாய்

இன்னும் கையில் என்ன கொண்டுவந்திருக்கிறாய்
என் பிள்ளைகள் மண்ணில் விழுந்து விளையாடாமல்
உன்னைச் சுற்ற

ஒரு பெட்டி
அதில் இருப்பது மூன்றில் ஒரு பங்கு கவிதை
மற்றையது
அகதி முகாமில் ஒற்றைக்கால் மனிதனுடன் சேர்ந்து நின்று
வாங்கிய பாண்

இரவினது நிறத்திலும், உயிரிலும்
நிறுத்தி, நிறுத்தி
என்னோடு பேசவேண்டியிருப்பதையெல்லாம்
முள்ளு விக்கிய பூனைபோல்
நடு வாசலில் கக்கிவிடு

பக்கத்து ஊரில்
நிலா பற்றி படிக்காமலிருக்கிறார்கள்
நிலா பற்றி கதைக்காமலிருக்கிறார்கள்
என்று பயம்வர பேசிக்கொண்டிருந்தால்
என் சதிரம் நடுங்குவதை நிறுத்துமா?

எழுதியவர் : பைசால் இலங்கை (21-Jan-11, 2:23 pm)
சேர்த்தது : a.a.faisal
Tanglish : nadukkam
பார்வை : 461

மேலே