மேகங்களைக் கழுவுதல்

மழை கம்பெடுத்து விரட்டிவருது
ஓடுங்கோ ஓடுங்கோ

புல்லுக்கு மேல்
அதன் கால் செருப்பு கழன்று விழுவதைக் கண்டேன்
கூரைக்கு மேல் குந்தி சிரிப்பது கண்டேன்
வீட்டுப் பானை நிரம்பி வழிகிறது கண்டேன்
நேற்றுத்தான் மழைக்கு குருக்கு தெளிந்திருக்கு

உம்மா பயத்தங்கொடிக்கு போட்ட பவுடரெல்லாம் கரைய
ஓங்கி அடிக்குது
இத்தனை நாட்களும் வீட்டுக்குள் குந்தியிருந்த
குடைக்கு என்ன குதூகலம்
கறுப்புக் கோட்டுடன் கூத்தாடுது

குறிப்பு: நான் குளிக்கப் போகிறேன்
தகரப் பீலியால் கிணறு வெடித்து ஊத்துண்ணுது

ஒரு துளி
நான் கண்ட அழகான பெண்மழை
ஒரு துளி
நான் கண்ட அழகான குழந்தைமழை

வானத்தை எல்லை பிரித்து
வாசலில் ஒரு பெரிய கோப்பை
அதனுள் பெண்மழை விழப்போகிறது
எடுத்து அருந்தினால் நோய் தீரும்

குழந்தை மழையை தூக்கி கொஞ்சிட முடியவில்லை
புழுதியில் உறுண்டு விளையாடும்
ஓதாமல், படிக்காமல் உமி அடுப்பையும் நூத்துவிடும்

எழுதியவர் : பைசால் இலங்கை (21-Jan-11, 4:38 pm)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 355

மேலே