தோல்விக்குத் தோல்வி

தோல்விக்குத் தோல்வி
[அரிய என்று ஆகாத இல்லை
திருக்குறள் 0537]

+ தோல்விமேல் தோல்வி---அவைதாம்
தோற்காத வெற்றியைத் தொடுவதற்குத்
தோள்கொடுத்துத் துணைஎன நின்று
தூக்கி நிறுத்தும் தூண்கள்....

+ தோல்வி கண்டு துவண்டால்--அதுஉன்
தோள்மேல் ஏறிப் பயணிக்கும்....
தோல்வியை எதிர்த்து நின்றால்--அதுஉன்
காலுக்குச் செருப்பாக உழைக்கும்....

+ தோல்விக்கு உள்ளே குதித்து
மூலை முடுக்கெலாம் தேடிப்பார்...
தோல்விக்குத் தோல்வி கொடுக்கும்
தெளிவான வழிமுறைகள்---அங்குத்
தேங்கிக் கிடப்பது தெரியும்....

+ தோல்வி வீரனுக்குக் கால்பந்து....
தோல்விக்குக் கோழை கால்பந்து....

+ தோல்வி உனக்குஓர் ஆசான்..
தோல்வி கற்றுத்தரும் பாடங்கள்
மூச்சுஉள்ள வரையிலும்--உன்னை
வாழ வைக்கும் வழித்துணை...

+ தோல்வி என்றும் யாராலும்
தடுக்க முடியாத தொல்லை.....
தோல்வி யைத்தோற் கடித்தல்
ஈடில்லா இன்பத்தின் எல்லை....

+ தோல்விக்குத் தோற்கத் தெரியாது....
வேல்போல் பாய்ந்தாலும், கொடுவலித்
தேள்போல் கொட்டினாலும்---அந்தத்
தோல்விக்குத் தோல்வி கொடுத்தால்,
தோல்விஉன் தாள்பணிந்து கிடக்கும்...
ஆல்போல் நிழல்தந்து காக்கும்....

+ தோல்வியைத் தூண்டிவிட்டு---உன்னைத்
தூக்கிஎறிந்து வேடிக்கை பார்க்க
ஆயிரம்பேர் கூடிஎதிர் நிற்பார்...
ஆயிரம்பேர் கூடி நிற்பினும்---எதிர்
நீச்சல் போட்டு நின்று..."நான்
தோல்வியைக் காலடியில் எனது
வீழ்த்துவேன்" என்றுநீ என்றும்
காவியம் பாடிக்காட்டு---அதுதான்
தோல்விக்கு நீவைக்கும் அதிர்வேட்டு....

+ தோல்வி, வெற்றிச் சிகரத்திற்குப் படிக்கட்டு....
தோல்வி உன்னுள் தூங்கும் திறமைகளை
மேலே கொண்டுவரும் ஏற்றம்--அதனால்
தோன்றும் உனக்குப் பலமுன் னேற்றம்...

+ பிணியாகும் தோல்வி ஒருபோதும்
தனியாக வருவ தில்லை--பல
துயரத் தோழர்களைத் தன்னுடன்
அழைத்து வரமறப்ப தில்லை...

+ தோல்விக்கும் தோற்கும்
காலம் ஒன்றுஉண்டு....
தாளாண்மைத் தகைமையால்
தோள்தட்டி நின்றால் ஓடும்
வலைச் சுருட்டிக் கொண்டு....

+ தோல்வியைத் தூக்கிலே போடு....
வாழ்க்கை உயரும்புக ழோடு...

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (15-Nov-13, 8:46 pm)
பார்வை : 114

மேலே