வானம்
வானமே!
வனங்கள் வளம்பெற - நீ
வசைபாடுகிறாய் மழைத்துளியை - நீ
வசைபாடவில்லை என்றால்
வளம் கண்ட வனமும் வறட்சி காணுமே
என் அன்பிற்குரிய வானமே!
நீ அளவோடு அழுதால் எங்களுக்கெல்லாம் அழகு
நீ ஆத்திரம் கொண்டு அழுதால் எங்களுக்கெல்லாம் அழிவு
வையகத்தையே வாழ வைக்கும் வானமே
நீ வாழும் வையகம் எங்கே என
வல்லரசு நாடுகளெல்லாம் வலைபோட்டு தேடுகிறதே
உலகமே உளவு பார்க்க விரும்புகிறது உன்னை
ஆனால் அதிசயங்கள் பல கொண்டு
அண்டத்தையே ஆச்சர்யபடுத்துகிறாய்
வண்ணங்கள் நிறைந்த வானவில்லை தந்து
வசியப் படுத்துகிறாய் எங்களையெல்லாம்.
வானமே!
உன்னை உருக்கி உழவர்களை உயர்த்துகிறாய்
தொட்டுவிடும் தூரத்தில் நீ இல்லை என்றாலும்
தோட்டாக்கள் பல துளைக்க நினைக்கிறது
வானத்தை பார்த்து சுடு என்ற வசனத்தை கேட்டவுடன்
வானமே!
நீ பருவமடைந்து தரும் பருவ மழையால் தான்
பருவமடைகிறது பசுமை நிற காடுகளெல்லாம்
நீ பருவமடையவில்லை என்றால்
பாலைவனம் ஆகிடுமே பசுமை நிற காடுகளும்
எங்கள் வாழ்வாதாரமாக விளங்கும் வானமே
உன்னை வணங்கி மகிழ்கிறோம்
எங்கள் வாழ்க்கை முழுவதும்
உன்னதமான உனக்கு கீழே
வாழ்கிறோம் என்ற பெருமையுடன்.......
----------------அரி.அன்பு---------------------------