ஒட்டுண்ணி ‘நட்பு’

வசதிகண்டு வாலாட்டி வருவான் – பணம்
உள்ளமட்டும் பாராட்டித் திரிவான்
உதவிவேண்டி பலகதைகள் அளப்பான் – மனம்
உருகிடப் பொய்யுரைகள் வளர்ப்பான்

பரிவுகாட்டிப் பாசமழை பொழிவான் – என்றும்
இனிக்கப்பேசி நஞ்சினை உமிழ்வான்
அறிவுபெற ஆயிரம்தடை விதிப்பான்– அந்தத்
தெளிவுநிலையைப் போராடித் தடுப்பான்

நல்லுரைகள் தேடிவர மறுப்பான் – எந்த
நல்லதுக்கும் வேறுவிளக்கம் அளிப்பான்
புன்னகையால் பாதகங்கள் மறைப்பான் – வேஷம்
களையமுன்னர் காரியத்தை முடிப்பான்

தீவினைகள் பிறர்தந்திட வருமோ – போலி
நட்பைப்போல் பெருந்துன்பம் தருமோ
பார்வைக்கு எல்லாமும் வெள்ளை – உண்மை
புரிந்திட்டால் வாழ்வில்சூழாது தொல்லை!

எழுதியவர் : குழலோன் (19-Nov-13, 9:07 am)
சேர்த்தது : குழலோன்
பார்வை : 97

மேலே