நானும்தான்

வைகாசி மாதம் வசந்த காலம் பகலவன் காத்திருக்க. . .
வேப்பம்பூ உதிர்த்து வாயுபகவன் வரவேற்க,
தோழியின் கைபிடித்து வலம் வரும் என் வான்மதி. . .
யாரோ என்னை அழைக்க கவனித்த கண்களில் பதிந்தது என் பனிமலரின் அழகு,
தனிமையில் நானிருக்க நினைவுகளில் அவள் நிழற்படமும். . .
கனவுகளில் நானிருக்க கண்களில் அவள் பிம்பங்களும்,
பித்துபிடித்தவன் போல் பிரதியெடுக்க எனை தொட்டுச்சிரித்தன தூரத்து விண்மீன்கள். . .
தூக்கம் மறந்த என் இருபது இரவுகளும்,
துடித்துக்கொண்டிருத்த இதயமும் அவளுக்கென அறிந்த அன்றிலிருந்து-ஆறு மாதமாய் அவள்மீது காதல். . .
சொல்லத்துடித்தன உதடுகள்,
சிக்கித்தவித்தன வார்த்தைகள். . .
காதலும் கரைபுரண்டு கவிதைகள் பெருக்கெடுக்க,
மறுமுறை பார்க்கும் போது மறைக்க கூடாதென்று கழிந்துவிட்டது நான்கைந்து சந்திப்பு. . .
நேரில் சொல்ல நெஞ்சமும் துள்ள,
நாணத்தில் மாட்டிக்கொள்வாயென மனதும் சொல்ல மரணவலி தான் நாளும். . .
காதலுக்குகந்த கார்த்திகை மாதமும் காதல் பனியில் மாட்டிக்கொண்ட நான்,
காதலை சொல்ல இரவில் தட்டச்சு செய்தேன் குறுஞ்செய்தி ஒன்று. . .
தாவித்தாவி தவிக்கவிட்டது என் இதயத்துடிப்பும்,
பதில் ஒன்று வர என்னை பற்றிக்கொண்டது பயமும். . .
பார்க்க வேண்டாமென நான் பாதி குழம்ப,
அடைந்ததில்லை அப்படி ஒரு பதட்டம்
என்னுள் பிறந்த மின்னலின் தாக்கம் என்னவளுள். . .
இலேசான புன்னகையுடன் அவள் படிக்கும் கற்பனை,
காலையில் சொல்கிறேன் காத்திரு என்றாள். . .
மெல்லிய சலனம் என் மனதில்,
கண்டநாள் முதல் அன்றுவரை எண்ண அலைகள் வந்து என் மனதை கரைக்க. . .
இரக்கமில்லா இரவுகள் இவ்வளவு மெதுவாக நகர்ந்தில்லை,
நிஜங்களை மறந்து நினைவுகளில் ஒன்றிவிட்டேன். . .
கைபேசியை பிடித்தவாறு அயர்ந்துவிட்டேன் தன்னிலை மறந்து,
அதிகாலை பதறி எழுந்தவனுக்கு அதிர்ச்சி. . .
காலையில் சொல்கிறேன் காத்திரு என்றவள் எனக்கு முன் எழுந்து அனுப்பினாள். . .
"நானும்தான்"