மரங்களின் உலகத்தை நோக்கி ஒரு பயணம்

ஒரு ஊரில் சிறுவன் ஒருவனுக்கு வாழ்க்கை மிகவும் போரடித்தது. எனவே வானத்தை நோக்கியோ, கடலிலோ, தொடுவானத்தின் மற்றோரு பகுதிக்கோ பயணம் செய்ய விரும்பினான். ஆனால், படகு, ரயில், மோட்டார் வாகனம் போன்ற எவ்வித வசதிகளும் அவனுக்கு இல்லை. அதனால், வெறும் தரையில் அமர்ந்தவாறே பொழுதை ஓட்டுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். பயணம் செய்வதற்கு இறக்கைகள், மீனுக்கு இருப்பது போன்ற செதில்கள் எதுவும் குறிப்பாகத் தேவையில்லை என்பதை ஒரு நாள் உணர்ந்தான். அப்போதுதான் மரங்களின் தேசத்திற்கு செல்வதற்கான ஞானோதயம் அவனுக்கு ஏற்பட்டது. அதுவும் ஒரே நாளில் அவனுக்கு ஏற்பட்டுவிடவில்லை. நெடுங்காலமாகவே அடர்ந்த காட்டினுள் அவன் நடந்து செல்வான். அப்போது பெரும் விநோதங்களை அங்கு உணருவான்.
மரங்கள் நகர்வதுபோன்றும், அவனுடன் பேசுவது போன்றும் விநோத உணர்வு அவனுக்கு ஏற்படும். அவை இடம்விட்டு இடம் நகர்வதில் மிகவும் வியப்படைந்தான். மரங்களை நாம் பார்க்கின்ற போது உண்மையில் அவை நகர்கின்றன. காற்றில் அசையும் ஆயிரமாயிரம் இலைகளுடனும், பரந்த கிளைகளுடனும் பூமியில் அவை நின்றுகொண்டிருக்கின்றன. ஆண்டாண்டுகாலமாக எப்பொழுதும் ஒரே இடத்தில் இருப்பதாக நம்மை நம்ப வைக்கின்றதந்திரம்தான் அது. கடினமான வேர்களுடன் தரையில் அவை பொருத்தப்பட்டு, அவற்றிற்கு எதுவும் தேவையில்லையென்றும், அவற்றிற்கு எதுவும் சொல்லத்தெரியாது என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை என்பதை சிறுவன் தெரிந்துகொண்டான்.

அவற்றிற்கு தூக்கக்கலக்கம். ஆழ்ந்த உறக்கத்தினால் பல நூறாண்டுகாலமாக அவை இறுகிப்போய்விட்டன. எதைபற்றியும் கவலைகொள்ளாத நிலையில் இருக்கின்றன. மரங்கள் உறங்கிகொண்டிருக்கவில்லை, சற்று வெட்கத்துடன் இறுகிப்போயிருக்கின்றன என்பதை சிறுவன் தெரிந்துகொண்டான். தன்னிடம் நெருங்கி வரும் மனிதனை காணும்போதெல்லாம் அவை தங்கள் வேர்களை இறுக்குகின்றன. ஒருவகையில் தன்னிடம் நெருங்கி வருகின்ற மனிதனின் காலடி ஓசையைக் கேட்டு தன்னைத்தானே இறுக்கி மூடிக்கொள்ளும் கடற்கரை கிளிஞ்சல்களைப் போலத்தான் இந்த மரங்களும். கட்டாயம் அவற்றை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மரங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வதிலேயே சிறுவன் முனைப்பாக இருந்தான். அதிகம் ஓசையை எழுப்பாமல் எச்சரிக்கையுடன் காட்டின் உட்பகுதிக்குச் சென்று, ஒரு திறந்தவெளியின் நடுவில் அமர்ந்துகொண்டான். சில நேரங்களில் மெதுவாக சீழ்க்கையடிப்பான். ஏனென்றால் சீழ்க்கையொலியின்மூலம் வெளிப்படுகின்ற இசையை மரங்கள் மிகவும் விரும்பும். பறவைகளுக்கோ, வெட்டுக்கிளிகளுக்கோ அவை ஒருபோதும் பயந்ததில்லை. மென்மையான ஓசையையே அவை பெரிதும் விரும்புகின்றன. இதுபோன்ற தருணங்களில் சிறிதுசிறிதாக தன்னுடைய இறுக்கத்தைவிட்டு தளர்ந்துவிடுகின்றன. அதன் கிளைகள் ஒரு பெரிய குடை விரிவதுபோல் திறந்துகொள்கின்றன. வேர்கள் வளையும் தன்மைகொண்டவையாக மாறிவிடுகின்றன. பூமியைவிட்டு மிகவும் மெதுவாக அவை வெளியே வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், அவற்றின் வேர்கள் முழுவதும் வெண்மையாக இருக்கின்றன.
சூரிய ஒளி அவற்றின் கிளைகளைப்போலவே வேர்களைக் கருப்பாக்கவில்லை. வேர்களும், கிளைகளும் தன்னைத்தளர்த்திக்கொள்ளும்போது கொட்டாவி விடுவதுபோன்றதொரு விந்தையான ஓசை காட்டின் எல்லாதிசைகளிலிருந்தும் வரும். குறிப்பாக கருவாலி மரம் மூச்சை உள்ளிழுத்து மிக சத்தமாக கொட்டாவி விடும். அதைவிட குறைந்த ஓசையுடன் சவுக்கு, பப்பாளி மரங்கள் ஓசையெழுப்பும். அதன்பிறகு, அவற்றின் அடிபாகத்திலுள்ள 'குரோட்டன்' செடிகள் மெதுவாக அசைவாடும்.

மரங்களைப்பற்றி தெரியாதவர்கள் காடு என்றைக்கும் அமைதியாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால், நாம் ஒரு பறவையைப்போல் மெதுவாக ஓசையெழுப்பினால், மரங்களும் பதிலுக்கு எழுப்புகின்ற ஓசையைக் கேட்கத்தொடங்கலாம். முதலில், கொட்டாவியும் மூச்சை உள்ளிழுக்கும் ஓசையும் அதைதொடர்ந்து பூமியில் சில இடங்களில் அவற்றின் இதயதுடிப்பு ஓசையும் கேட்கும். எல்லாவற்றையும்விட காற்றை வெகுவாக உள்ளிழுத்து ஊதுகின்ற ஓசைதான் மேலோங்கி ஒலிக்கும். ஏனென்றால், மரங்களும் அவற்றின் மொழியில் பதிலுக்குப் பாடும். சரியாக கவனிக்காவிட்டால் பறவைகள்தான் பாடுகின்றன என்று நாம் நினைத்துக்கொள்வோம். பறவைகள் பாடுவதும், மரங்கள் பாடுவதும் ஏறக்குறைய ஒரேமாதிரிதான் இருக்கும். சிறுவன் அந்த ஓசையைப் பகுத்தறிய கற்றுக்கொண்டான்.
பெரிய தடித்த மரங்கள் பூமியையே அதிரச்செய்யுமளவுக்கு ஓசை எழுப்புகின்றன. பப்பாளி, சவுக்கு போன்ற மரங்கள் புல்லாங்குழல்போன்ற ஓசையுடன் தொடர்ந்து பாடுகின்றன. மரங்களின் மொழியறியாதவர்கள் சிட்டுக்குருவிகள்தான் பாடுகின்றன என்று நினைத்துக்கொள்வார்கள்.
இதன்மூலம் அவன் அவற்றிடம் மிக நெருக்கமாகிவிட்டான். சிறிதுசிறிதாக அனைத்துமரங்களும் அவனிடம் பேசத்தொடங்கிவிட்டன. அனைத்தும் ஒரேநேரத்தில் பேசும்போது கர்ஜிக்கும் ஓசையுடன் கூடிய கொட்டாவியாக ஒலிக்கும்.
மரங்களின் உலகத்தில் நாம் இருக்கும்போது மரங்களும் நம்மைபற்றித் தெரிந்துகொள்ளும். அவற்றிற்கு கண்தெரியாது, காது இருக்காது, அவை ஊமைகள் என்று மனிதர்கள் நினைப்பதுண்டு. ஆனால், அது உண்மை இல்லை. மரங்களைப்போல மிகவும் அரட்டை அடிப்பவர்கள் வேறு யாரும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவற்றிற்கு எல்லா பகுதிகளிலும், எல்லா இலைகளிலும் கண்கள் உண்டு. இந்த உண்மை யாருக்கும் தெரியாது. மரங்கள் சற்று கூச்சசுபாவம் கொண்டவை. அவற்றை சுற்றி மனிதர்கள் இருந்தால், கண்களை மூடியே வைத்திருக்கின்றன. அவற்றின் கண்களை திறக்கக்கூடிய உத்தியை சிறுவன் தெரிந்துகொண்டு, ஒன்றிரண்டு ஸ்வரங்கள்கொண்ட இசையை சீழ்க்கையொலியாக எழுப்புவான். உடனே அனைத்து சிறிய இலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக சிலிர்த்து கண்களை திறந்து பார்க்கும்.
கறுப்பு, மஞ்சள், ஊதா, ரோஜா போன்ற அனைத்து நிறங்களிலும் அவற்றின் கண்கள் இருக்கும். காட்டிற்குள் உள்ள திறந்தவெளியின் நடுவில் அவன் அமர்ந்திருப்பதை அவை மெதுவாக பார்க்கும்.

நிச்சயமாக எல்லா மரங்களும் ஒன்றுபோல் இல்லை. அவற்றில் சீமை ஆலமரம் மிகவும் கண்டிப்பானது. நம்மை நடுங்கச் செய்யும் மிக ஆழமான பார்வை அதற்கு உண்டு. எப்போதும் மிகவும் மும்முரமான காரியங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். இரவு முழுவதும் நட்சத்திரங்களையே பார்த்துக்கொண்டிருக்கும். அனைத்து நட்சத்திரக்கூட்டத்தின் பெயரும் அதற்கு நன்றாக தெரியும். நிலாவின் பல்வேறு கோணங்களைத் தொடர்ந்து அது கவனித்துகொண்டேயிருக்கும். ‘சில்வர் பீச்’ (Silver peach) மரம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். சூரிய ஒளியென்றால் அதற்கு கொள்ளை பிரியம். அதனை மற்ற மரங்களின் கண்களுக்கு பிரதிபலிப்பதை மிக மகிழ்ச்சியாக செய்யும். எனவே, இது முசுடான மரம் கிடையாது.
மதிப்பிற்குரிய ‘மேப்பில்’ மரமும் அங்குண்டு. அது மிகவும் வயதான மரம். அதன் அடிபாகம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து வேர்களாக மாறும். பலமுறை இது இடியைத் தாங்கியிருக்கிறது. அந்த அனுபவம் எப்படியிருந்தது என்று மற்ற மரங்களிடம் விவரித்துக் கூறுவதென்றால் அதற்கு மிகவும் பிடிக்கும்.
பெயர் தெரியாத பல மரங்கள் அந்தக் காட்டில் இருந்தன. அடிக்கடி அவை ஒன்றோடொன்று கைக்கோர்த்துக்கொண்டு இடைவிடாமல் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும். மெலிந்த நெட்டையான மரங்கள் பெரிதாக ஒன்றும் பேசிவிடாது. ஊசியிலைமரங்களைப் போன்று அவை மௌனமானவை. ஆனால், காட்டிற்கு அவைதான் பாதுகாவலர்களை அனுப்பி வைக்கின்றன. யாராவது காட்டை நெருங்கும்போது ஊசிபோன்ற தங்கள் இலைகளை அவசர அவசரமாக உதிர்த்து விடுகின்றன. இந்த எச்சரிக்கையை புரிந்து எல்லா மரங்களும் உடனே பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை மூடிக்கொள்கின்றன.
சிறுவன் மரங்களை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டதால் காட்டின் நடுவில் அவன் நடந்துசெல்லும்போது அனைத்து மரங்களின் கண்களும் அவனையே பார்த்துக்கொண்டிருக்கும். அவற்றின் உரையாடல்களை அவனும் கவனிப்பான்.

மரங்கள் எப்போதும் இப்படித்தான். நிறைய நேரம் பேசிக்கொண்டேயிருக்கும், கொஞ்ச நேரம் தூங்கும். பிறகு, விழித்துக்கொண்டு கிசுகிசுக்கத்தொடங்கும். தலையில்லாத, வாலில்லாத, உப்புசப்பில்லாத கதைகளையே பேசிக்கொள்ளும். இவற்றில் மிகவும் வாயாடுவது பப்பாளி மரங்கள்தான். மேப்பில் மற்றும் சீமை ஆலமரங்கள் மிகவும் குறைவாக பேசுபவை. அவற்றிற்கு இருப்பதோ மந்தமான குரல்தான். 200 ஆண்டுகள் பழமையான கதைகளைத்தான் அவை பேசும். ஊசியிலை மற்றும் சவுக்கு மரங்கள் சோகமானவை. அலரிச்செடிகள் அழுமூஞ்சிகள். வாதுமைகொட்டை மரங்கள் சற்று முரட்டுத்தனமானவை. சிலநேரங்களில் ஒன்றோடொன்று கோபப்பட்டுக்கொள்ளுகின்ற சமயத்தில் கிளை ஒடிந்து விழுமளவுக்கு ஓசை எழுப்பும்.
சிறுவன் எப்போதும் வயதுமுதிர்ந்த சீமை ஆலமரத்துடன் பேசவே விரும்புவான். அதனிடம் பேசத்தொடங்கினான்.
“உன் பேர் என்ன?”
“தியுதூ”(மரங்களின் மொழி)
“இந்த காட்டிற்கு நீதான் அரசனா?”
“இல்லை. அவர் இங்கிருந்து வெகுதூரத்தில் வசிக்கிறார்.”
“அவர் பேர் என்ன?”
அந்த மரம் சற்று நேரம் யோசித்தது. யோசிக்கும்போது அதன் கிளைகள் லேசாக முறிந்து ஓசை எழுப்புகின்றன.
“அவரை நாங்கள் ‘ஊதூயு’ என்று அழைப்போம். எங்கள் மொழியில் ‘மேதகு, உயர்திரு’என்று பொருள்.”
“மிகவும் வயதானவரா?”
“நான் எப்போது பிறந்தேனோ… அப்போதே அவர் மிகவும் வயதானவராக இருந்தார். இப்போது மூன்றாயிரம் ஆண்டுகள் ஆகின்றது.”
சிறுவனுக்கு அவரின்மீது பெருமதிப்பு ஏற்பட்டது.
“முதிர்வயதானவர்களுடன் வாழ்வது மிகவும் நன்றாக இருக்கும்.”
“ஆமாம். அவர்களிடம் நிறைய நாம் கற்றுக்கொள்ளலாம்.”
“ஒருநாள் நீயும் இந்தக் காட்டிற்கு அரசனாகலாம்.”
அதைக் கேட்டு அந்தமரம் சற்று நிமிர்ந்து நேராக நின்றது.
“யாருக்குத் தெரியும்… அதுவரை என்னை இடியோ, மின்னலோ தாக்காமல் இருக்கவேண்டும்.”
“சரி… பப்பாளி மரங்கள்? அவை காட்டிற்கு அரசனாக முடியாதா?
பரிகாசம் செய்வதுபோல் அந்தமரம் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.
“அந்த மரங்கள் பறவைகளைப்போல் அரட்டையடிப்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கும். எனவே காட்டிற்கு அரசனாகும் தகுதி அவற்றிற்கில்லை.”

பப்பாளி மரங்களென்றால் சிறுவனுக்கு மிகவும் பிடிக்குமென்பதால் அந்தபதிலைக்கேட்டு சிறிது கவலையுற்றான். அந்தமரத்திடம் விடைபெற்றுக்கொண்டு காட்டினுள்ளே நடந்துசெல்வதைத் தொடர்ந்தான். நடந்து வருவது அவன்தான் என்பதை மரங்கள் தெரிந்துகொள்வதற்காக சீழ்க்கையொலியெழுப்பியவாறே நடந்தான். மிகவும் இளமையான வெளிர்பச்சை நிறமுள்ள சவுக்கு மற்றும் யூக்கலிப்டஸ் போன்ற மரங்களிருக்கின்ற இன்னொரு திறந்தவெளிக்கு வந்துசேர்ந்தான். அவை மிகுந்த கரவொலியுடன் அவனை ‘இஉய்த்’ என்றழைத்தன. அவற்றின் மொழியில் ‘மிகச்சிறிய மனிதன்’ என்று பொருள். அவை அவனிடம் இன்று மாலை அவைகளுடன் நடனமாட வருகிறாயா என்று கேட்டன. வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்றுகூறி விடைபெற்று மாலைபொழுது வந்தவுடன் மறுபடியும் காட்டிற்குள் வந்தான். மரங்கள் அனைத்தும் அவனுக்கு நண்பர்களாக இருப்பதால் அங்கு அவனுக்கு ஒரு பயமும் இல்லை. அந்த திறந்தவெளிக்கு அவன் வந்துசேரும்போது வானம் கருநீலமாக இருந்தது. பௌர்ணமி நிலவு மிகப்பிரகாசமாக ஒளிவீசியது. மரங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பாடுகின்ற ஓசை கேட்டது. மதிப்புமிக்க வயதான கருவாலி மரங்கள் பாதுகாப்பிற்காக காட்டுப்பகுதியின் ஓரத்தில் நின்றுகொண்டன. சிலநேரங்களில் வேட்டையாடுபவர்கள் திருட்டுத்தனமாக காட்டிற்குள் நுழைவார்கள். அப்போது இந்த மரங்கள் மற்றவர்களை எச்சரிக்க ஆந்தைபோல ஓசையெழுப்பும்.

திறந்தவெளியைச் சுற்றி வட்டமாக இளம்மரங்கள் நின்றுகொண்டு நடனமாடும். மனிதர்களைப்போலவே அவையும் அருகில் இருப்பவர்களுடன் ஒன்றுக்கொன்று கிளைகளால் தட்டிக்கொண்டு நடனமாடும். சிறுவனும் அவற்றுடன் சேர்ந்து நடனமாடுகின்ற காட்சி காண்பதற்கு மிக விநோதமாக இருக்கும். அவன் எப்போதும் அவனைவிட வயதில் குறைந்த இளம் ‘செதார்’ மரங்களுடனே நடனமாடுவான். ஆடலும், பாடலும் வெகுநேரம் தொடரும். பெரிய மரங்கள் ஒன்றுக்கொன்று வேகமாக உரசிக்கொள்ளும்போது இடி இடிப்பதுபோன்ற ஓசை காட்டிலிருந்து வெகுதூரம்வரை எதிரொலித்துக்கொண்டே செல்லும். தங்கள் வயதை மறந்து அவை நடனமாடும்போது ஆண்டாண்டுகாலமாக இருக்கின்ற இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிடுகின்றன. ஒவ்வொரு முறையும் அவை நகரும்போது வேர்களிலிருந்து மேகம்போல் புழுதிகள் மேலே பறக்கின்றன. அவற்றின் நடனம் பௌர்ணமி நிலவு இருக்கும்வரை தொடரும். காட்டின் மறுபகுதிக்கு நிலவு சென்றவுடன் மரங்கள் நடனமாடுவதை நிறுத்திக்கொள்ளும். களைப்படைந்தபோதிலும் மரங்களும், சிறுவனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மரங்கள் அவரவர் இடங்களுக்கு திரும்பவும் சென்று வேறூன்றிக்கொள்ளும். தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கருவாலி மரங்கள் காட்டின் மறுபகுதியிலிருந்து உரக்கக்கத்தும். பிறகு, அனைத்து மரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக கண்களைமூடி உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். அவற்றுடன் சேர்ந்து உறங்க சிறுவனுக்கு மிகவும் பிடிக்கும். திறந்தவெளியில் படுக்கைவிரிப்புபோன்றிருக்கும் பாசியின் மீது படுத்துக் கண்களை மூடினான். மரங்கள் நடனமாடிய காரணத்தினால் திறந்தவெளியெங்கும் சற்று வெதுவெதுப்பாக இருக்கும். காலை பனித்துளியைக் காணும்வரை சிறுவன் உறங்கிகொண்டிருந்தான். வயதுமுதிர்ந்த கருவாலிமரம் இரவுமுழுவதும் கண்விழித்து அவனை பாதுகாத்தது.

2008-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற க்ளேசியோ என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய இக்கதையை தமிழில் மொழிபெயர்த்தவர் பெ.மார்ட்டின் ஜோசப்.

(நன்றி : திசையெட்டும்)

எழுதியவர் : க்ளேசியோ (French)/ தமிழில்: பெ.ம (20-Nov-13, 6:55 pm)
பார்வை : 320

மேலே