நான் ஏன் பிறந்தேன்
நான் ஏன் பிறந்தேன்!
நீண்ட நெடும் காலமாக
மனதை நெருடி கொண்டிருக்கும்
என் கேள்விக்கு விடை தேடி
இந்த கவிதை!
பிறந்தேன்..
பள்ளி படிப்பை முடித்தேன்..
கல்லூரியிலும் குதித்தேன்..
அதன்பின் என்ன?
திருமண பந்தத்தில் இணைவேன்..
வேலைக்கும் போவேன்..
கைநிறைய சம்பாதிப்பேன்..
இதற்கா நான் பிறந்தேன்?
பக்கத்து வீட்டு பெண்மணியின்
பெயரும் தெரியவில்லை..
அவளுக்கொரு மகன்
பிறந்தது கூட நினைவில் இல்லை.
இரவில் அவன் அழுதபோது கூட
தொலைக்காட்சி சத்தத்தை
குறைக்க மாட்டார்களா
என்றே சலித்து கொண்டேன்!
ரோட்டில் மயங்கி கிடந்த
மூதாட்டியை பார்த்த பின்னும்
கொலை பழி விழுந்துவிடுமோ
என்று ஓடி மறைந்தேன்!
பசியோடு சாலையோரம் படுத்திருந்த
மழலைகளை கண்ட பிறகும்
வயிறு முட்ட பிரியாணி உண்டு
மிச்சத்தை குப்பையில் கொட்டினேன்!
அரைமணி நேரம் வரிசையில் நிற்க
சலித்து கொண்டு
இன்டர்நெட்டில் ரயில் டிக்கெட்
பதிவு செய்தேன்!
பேருந்து பயணத்தில்
அருகில் இருப்பவரோடு பேசுவதை தவிர்க்க
தலையை சுற்றி சால்வை அணிந்து
முகத்தை மறைத்து கனவில் மூழ்கினேன்!
ஊனத்தோடு மக்கள் உரிமைக்காய்
போராடியது பொறுக்காமல்
கைதுசெய்த அதிகாரத்தை அறிந்த பின்னும்
இயலாமை போர்வைக்குள் மறைந்து கொண்டேன்!
உருப்படியாய் என்னதை செய்தேன் நான்?
சிந்தனை கடலில் முத்துகுளிக்க
முயன்றேன் நான்
கையில் சிப்ஸ் பொட்டலத்தோடு!
சில்லென்று வருடி சென்ற தென்றல்
என்னை உசுப்பியது..
தூரே பறந்து கொண்டிருந்த கிளிகள்
என்னருகே வந்தமர்ந்தது!
சிதறி கிடந்த கோதுமை மணிகளை
கொத்தி கொண்டே என்னை நோக்கியது!
ஏளன பார்வையா அல்லது இரக்க பார்வையா?
புரியாமல் விழித்தேன் நான்!
கூட்டமாய்.. கொண்டாட்டமாய்..
ஒற்றுமையாய் உணவருந்திய
அந்த விருந்தாளிகளின் பார்வையில்
தெளிவு பிறந்தது எனக்கு!
என் கேள்வியில்
பிழை இருந்தது
அப்போதே புலப்பட்டது!
நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்வியை விட
நான் ஏன் மனிதனாய் பிறந்தேன்?
என்பதே மிகவும் உறுத்தலாய் இருந்தது!
அடுத்த பிறவி ஒன்று இருந்தால்
சாதிகளற்ற.. மதங்களற்ற..
சண்டைகளற்ற.. சந்தேகமற்ற..
ஐந்தறிவு ஜீவனாய் பிறந்திட ஆசை கொண்டேன்!
இன்றைய பொழுதின் இன்பம் கண்டிட
நேற்றைய நாளின் கவலை மறந்திட
விண்ணில் சிறகடிக்கும் பறவையாய் மாற
வரம் ஒன்று கேட்டேன்!