விறகுவெட்டியின் கதை

ஒரு ஏழை தினந்தோறும் அருகில் இருக்கும் வனத்திற்குச் சென்று காய்ந்திருக்கும் மரங்களின் கொம்புகளை வெட்டிச் சேகரித்து அருகாமை யிலுள்ள ஊர்களில் விற்று அன்றாடம் வாழ்ந்து வந்தான்.

ஒருநாள், அவ்வாறு மரக் கொம்புகளை வெட்டிக்கொண்டிருந்த பொழுது, கை நழுவிய கோடாரி தவறி பக்கத்திலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருந்த அவன் கண்களில் நீர் ஒழுக, அவன் வணங்கும் கடவுளை வேண்டிக் கொண்டான்.

மனமிரங்கிய கடவுள் அவன் முன் தோன்றி "ஏன் அழுகிறாய்" என்று வினவ, அவன் நடந்ததைக் கூற, "சரி .. கவலைப் படாதே .. உன் கோடாரியை நான் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லி, கிணற்றில் மூழ்கி, பொன்னால் செய்யப்பட்ட கோடாரியை அவனிடம் கொடுத்தார். அதைப் பார்த்த அந்த ஏழை "ஐயா .. இது அல்ல என்னிடம் இருந்த கோடரி" என்று சொல்ல, மீன் கிணற்றில் மூழ்கி எழுந்து, வெள்ளியினால் செய்யப்பட்ட கோடரியை கொடுக்க, அவனும் அது தனதில்லை என்று கூற, மூன்றாம் முறையாக அவன் வைத்திருந்த கோடரியை கொணர்ந்து, "இது தானா உன் கோடரி" எனக் கேட்க, ஆம் என்று சொல்லி, அதை பெற்றுக் கொள்ள கரங்களை நீட்டிய வேளை, அவன் நேர்மையைப் பாராட்டி, கடவுள் மூன்று கோடரிகளையும் அவனிடம் கொடுத்து வாழ்த்தி அனுப்பி விட்டார். அவனும் மிக்க மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.

சில மாதங்கள் பிறகு ..

மரக் கொம்புகள் வெட்டிக் கொண்டு வருவதற்கு, அவனுடன் அவன் மனைவியும் வந்திருந்தாள். எதிர்பாராத விதமாக, அவன் மனைவி தவறி கிணற்றில் வீழ்ந்து விட, பெரும் கவலை கொண்டு, அழுது கொண்டிருந்த சமயம், மீண்டும் கடவுள் அவன் முன் தோன்றி "என்ன .. உன் கோடரி கிணற்றில் விழுந்து விட்டது .. அப்படித்தானே" என்று வினவ, அவன் "இல்லை .. ஐயா" என்று சொல்லி விக்கி விக்கி அழுவதைக் கண்ட கடவுளும் ஒரு நொடி திகைத்துவிட்டார். "பின் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்" என்று சற்று அதட்டுவது போல் கேட்க, அவன் நடந்ததைக் கூறி, இன்னும் உரக்க அழுதான். "உன் மனைவி மீது அவ்வளவு அன்பா .. உனக்கு" என்று கேட்க, "ஐயா .. என் உயிரே அவள் தான்" என்று சொல்ல, "சரி .. சரி .. கவலையை விடு .. நான் வந்து விட்டேனே .. உன் கவலை தீர்ந்துவிடும்" என்று சொல்லி, கிணற்றில் மூழ்கி, தேவதையைப் போலொருத்தியை அவன் முன் நிறுத்தவும், அவன் கண்களில் மகிழ்ச்சி பொங்குவதைக் கண்ட கடவுள், "இவள் தானே உன் மனைவி" என்று கேட்டதும், அவனும் மிகுந்த உற்சாகத்துடன், "ஆம் .. ஐயா" என்று சொன்னான்.

இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திராத, கடவுளுக்கு அது பேரதிர்ச்சியை தர, "உண்மையாகவே இவள் தானா உன் மனைவி" என்று மீண்டும் கேட்கவே, அவன் அழுது கொண்டே "இல்லை ஐயா" என்றான். "பிறகு நீ ஏன் பொய் சொன்னாய்" என்று வினவ, அந்த ஏழை "ஐயா .. நான் இல்லை என்று உண்மையைச் சொன்னால், நீங்கள் முன் போன்று, என் மனைவியுடன் மற்ற இரு பெண்களையும் சேர்த்துக் கொடுத்துவிட்டால், அன்றாடம் விறகு சுமந்து பிழைக்கும் என்னால் எப்படி மூன்று பேர்களை வைத்துக் காப்பாற்ற முடியும் ? எனவே தான் நான் பொய் சொல்ல வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்தது. அப்படி ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியதே நீங்கள் தானே ! என்று சொல்லவும், கடவுள், "ஓஹோ .. அப்படியா ? உன் மனைவியை விட இவள் மிகவும் அழகாக இருப்பதால், நீ இவளை அடைய வேண்டுமென்பதற்காக அப்படி ஒரு பொய் சொல்லி விட்டாய் என்று நினைத்து விட்டேன். நீ ஏழையாய் இருந்தாலும் மனதில் தூய்மை உள்ளவன். உன்னை நான் மெச்சுகிறேன்" என்று சொல்லி அவன் மனைவியை கொணர்ந்து, அவனிடம் கொடுக்க .. இருவரும் அவரை வணங்கினர்.

எழுதியவர் : (21-Nov-13, 6:29 pm)
பார்வை : 502

மேலே