கொட்டித் தீர்க்குது மழை
கொட்டித் தீர்க்குது மழை !
மானுடம் எறிந்த மாசுகள் அகற்றி
மண்ணை சுத்தப் படுத்தும்
ஆவேசத்துடன் !
உறிஞ்சி எடுத்து உலர்ந்து போன
மண்ணின் மார்புகள் நனைக்கும்
பேராசையுடன் !
புகை மூடிப் போன
வளி மண்டலம் கழுவி
நரை மூத்துப் போன எம்
விருட்சங்களின் விரல் நீவும்
ஆசுவாசத்துடன் !
நரகமாய் மாற்றிய நதிகளின்
ஆத்மாவைக் தேடி அலையும்
ஆக்ரோஷத்துடன் !
பேரிரைச்சலுடன் இழுத்துச் செல்கிறது
அவன் தின்று துப்பிய எச்சங்களை !
கவலையுடன் பார்த்திருக்கிறாள் என் மகள்
அவள் காகிதக் கப்பலை
கவிழ்த்து விடுமோ என்ற
அச்சத்தில் !