பனித்திரையை விலக்கிப்பார்

அடி பெண்ணே
உன் மைவிழிகளிலென்ன
இத்துனை உணர்ச்சி !!

விரக்தி துக்கம் மிரட்சி தவிப்பு
எங்கே உனது சிரிப்பு
அதன் உயிர்ப்பு !

எப்பொழுதும் உன்விழியில்
குடிகொள்ளும் ஜீவனெங்கே !

கயவன் ஒருவன்
உன் மனத்திண்மையை குலைக்க
ஆடிய நாடகத்தில்
பலியாக நீயென்ன ஆடா ...
எங்கே உனது வீரம் !

நாடகத்தின் விளைவால்
உற்றத்தாரும் சுற்றத்தாரும்
குற்றுயிரும் குலையுயிருமாய்
உடலாலும் மனதாலும் நீயிருக்க
வஞ்சனையின்றியே வஞ்சகம் பேச
இத்துனை காலமும்
நீ சிலுவை சுமந்தது போதாதா
உன் மேல் பிழையின்றியே

என்னைக்காணும் அந்தக் கண்களில்
ஏன் அத்துனை அவநம்பிக்கை
நான் ஒருஆடவன் என்பதாலா
ஆடவனாயினும் நானுன் தோழனன்றோ !!

ஏன் மருகுகிறாய்
என்னை செவிமடுக்க மறுக்கிறாய்

இச்சகம் பேசும் உலகம்
பேச்சிலேயே உன்பலத்தை எடுத்திடுவர்
தற்கொலை விதையை உன்னுள் பதித்திடுவர்
நாளும் உரமும் இட்டிடுவர்

அவர்களுக்கு செவி சாய்க்கும்
உன்புலன்கள் என்னையும் காணாதோ

பெண்ணே உயிர்த்தெழு
தற்கொலை விதையைத் தோண்டி
மனத்துணிவு ஆயுதமேந்தி
கொன்றிடு தற்கொலை விதையை

உன்வாழ்க்கைப் புத்தகத்தின்
கசந்த பக்கத்தை
குப்பையிலே எறிந்திடு - வேண்டாம்
குப்பையைக் கிளரும்
கூட்டமும் இப்புவிதனில்
இன்னும் உயிர்த்திருக்கிறது
விழிதனிலுள்ள பொறிகொண்டு எரித்திடு

நீ வாழ்க்கையாய்க் காணும்
சுற்றமும் உற்றமும் மட்டுமே உலகமல்ல

புரளி பேசும் உலகை மரித்தவர்களாய்
கடலைப்போல் புறந்தள்ளி
வாழ்கையை தெளிந்த நீரோட்டம்போல் எதிர்கொள்
நீ இன்னும் மரிக்கவில்லை
உன் வாழ்க்கைப் புத்தகம் முடியவில்லை

உன்விழிகளில் தென்படவில்லையா
எதிர்கால வசந்தம்
விழியின் பனித்திரையை விலக்கிப்பார்
அதில் பல சாதனைகளும்
மகிழ்ச்சி ஆராவாரங்களும் !!

எழுதியவர் : வானதி (26-Nov-13, 8:02 pm)
பார்வை : 126

மேலே