கவிமழை பெய்யும்
தெம்பா யிரண்டு மலைகள் நிமிர்ந்து
==தேகக் கட்டில் தேங்கி நிற்க
நம்பும் படியாய் இல்லா இடையால்
==நங்கை அதையுந் தாங்கி நிற்க
அம்பாய் பார்வை வில்லாய் புருவம்
==அகத்தை தாக்க ஏங்கி நிற்க
ரம்பை ஊர்வசி வழியில் வந்த
==ரதிமகள் மூச்சை வாங்கி னாளே!
ஈச்சம் பழத்திற் கிரும்பு வாங்க
==எங்கும் திரியும் வண்டிக் காரன்
மாய்ச்சல் போலே தினமும் அவளை
==மனதில் சுமக்க வைத்தவள் தன்னை
மூச்சை எடுக்கும் தொழிலில் நாளும்
==மும்முர மாகிடும் யமனும் கண்டு
பேச்சை கொஞ்சம் கேட்பா னானால்
==பேச மறந்து சிலையாய் நிற்பான்.
உளியும் இன்றி கல்லும் இன்றி
==உயிராய் பிரம்மன் செதுக்கிய சிற்பம்
துளித்துளி யாக உயிரை கொல்ல
==துணிந்து எடுத்த இளமைக் கோலம்
வளிதனில் தென்றல் தழுவுதல் போன்று
==வாழ்வினில் வந்து தழுவிட வேண்டி
களித்திடும் நெஞ்சின் கனவுகள் யாவும்
==கைவரப் பெற்றால் கவிமழை பெய்யும்!