நான்மணிக்கடிகையில் பஃறொடை வெண்பா - பகுதி 3
பஃறொடை வெண்பா:
நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படும். இவ் வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும்.
இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ அல்லது பலவகை எதுகைகளோ வரலாம். 12 அடிகளுக்கு மேல் உள்ளவை கலிவெண்பா எனப்படும்.
நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களில் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்னும் வேறுபாடுகள் இருப்பதுபோல், பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள்.
கீழே உள்ள பாடல் ‘நான்மணிக்கடிகை'யின் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகும். இதுவும் நான்கு பொருட்களையே குறிக்கிறது.
பாடல் 1
மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம். 1
நான்மணிக்கடிகை - ஒரு விகற்ப பஃறொடை இன்னிசை வெண்பா
பொருளுரை:
நிலவு என்றும் நிலையான திருமாலின் ஒளி பொருந்திய திருமுகத்தை ஒத்திருக்கும்.
ஒளிக் கிரணங்களையுடைய சூரியன் அவனது சக்கரப் படையை ஒத்திருக்கும்.
தொன்றுதொட்டு என்றும் வற்றாத நீரையுடைய கழனிகளின் தாமரைத் தண்டிலிருந்து தோன்றும் செந்தாமரைப்பூ அவன் கண்களை ஒத்திருக்கும்.
காயா மரத்தின் புதுப்பூ அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும்.
இச்செய்யுள் ஐந்தடியால் வந்த ஒரு விகற்ப பஃறொடை இன்னிசை வெண்பா.
பாடல் 2
கற்பக் கழிமடம் அஃகும் மடம்அஃகப்
புற்கந்தீர்ந் திவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 28
நான்மணிக்கடிகை - பல விகற்ப பஃறொடை இன்னிசை வெண்பா
பொருளுரை:
ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால் அவனது மிகுந்த அறியாமை குறையும்;
அறியாமை குறைய, அறிவின்மை நீங்கி இவ்வுலகின் இயற்கையை அறிய முடியும்;
அவ் வியற்கையை அறிந்துகொண்டால் உண்மையான அருள் நெறியில் செலுத்தும்;
அத்தகைய நெறியினால் இவ்வுலகில் புகழை நிறுவி மறுமையில் உயர்ந்த வீடு பேறு அடைவான்.
இச்செய்யுளும் ஐந்தடியால் வந்த பல விகற்ப பஃறொடை இன்னிசை வெண்பா ஆகும்.
பாடல் 3
இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்
முனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்
தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்
இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத் தவன். 59
நான்மணிக்கடிகை - ஒரு விகற்ப பஃறொடை இன்னிசை வெண்பா
பொருளுரை:
சுவையான உணவை உண்பவன் என்று சொல்லப் படுபவன் உயிர்களைக் கொன்று, மாமிசங்களை உண்ணாமல் காய்கறி உணவுகளையே உண்பவன் ஆவான்;
எல்லாராலும் வெறுக்கக் கூடியவன் என்று சொல்லப்படுபவன் முகமலர்ச்சி இன்றி அனைவரிடமும் கடுகடுப்புடன் வாழ்பவன் ஆவான்;
துணையின்றி தனிமையில் வாழ்பவன் எனப்படுபவன் தன்னால் பிறர்க்கு நன்மை செய்யாதவன் ஆவான்;
இனிமையானவன் எனப்படுபவன் அனைவராலும் வெறுக்கப்படாத ஒழுக்கத்தையுடைய நற்குண முடையவன்.
இச்செய்யுளும் ஐந்தடியால் வந்த ஒரு விகற்ப பஃறொடை இன்னிசை வெண்பா.
(முற்றும்)