அகால பிம்பங்கள்
இரவைக் கிழித்து,
வீறீடுகிறாள் மகள்.
எத்தனை பூக்கள் போர்த்தியும்,
அழுகுரல் நிற்கவில்லை,
அவள் கல்லறையிலிருந்து.
சமையலறையிலிருந்து
அம்மாவின் அழைப்பு.
எத்தனிப்பைத் தடுக்கும்,
அப்பா சொல்கிறார்-
“எனக்கும் கேட்டது”.
ஒவ்வொரு காலையிலும்,
வீட்டைப் பூட்டுகையில்,
உள்ளிருந்து கேட்கிறது,
கைக்குழந்தையைத் தாலாட்டும்,
மனைவியின் பாடல்.
இறங்கும் சவப்பெட்டியின்,
பலகையை மீறுகிறது,
உள்ளே படுத்திருக்கும்,
கணவனின் புன்னகை.
கட்டிலின் அடிவாரம்,
காலியென்று அறுதியிட்டே,
இன்றும் மூடிக்கொண்டிருக்கிறேன்,
ஐந்து வயது மகன் வாழ்ந்த
அறையின் கதவை.
விட்டுச் சென்றவர்களின்,
நினைவு பிம்பங்களில்தான்,
நீடித்துக் கொண்டிருக்கிறது,
வாழ்பவர்களின்
காதல்..