பற்பசை உறை

யானையின் மலம்போன்ற
பெரிதான கனவுகளெல்லாம்
என் கிராமத்து சுவரில் முட்டி
படம் வரையும் காற்றோடுபோகும்

ஒரு கம்புத் துப்பாக்கியினை தோளில்போட்டு
நான்
துயரின்றி இருந்த அன்று

மழையின் உறுண்டைத் தண்ணீரும்
மணி மணியான சந்தோசங்களும் எனக்கு

மர இலைகளை இரத்தப் பரிசோதனை செய்து
பட்டுப்பூச்சியின் கட்டிலில் தூங்கவைத்து
பாட்டும்பாடி
வெடித்த நிலத்திற்குள் இறங்கி மேலே வரும் என் கால்கள்
நோயில் படுத்திருக்கும் பட்டுப்பூச்சிகளின்
ஒரே சொந்தக்காரனும்
அதற்கு மருந்து கொடுப்பவனும் நானே

அரசாங்கத்து மஞ்சள் நிற பஸ்வண்டியில்
ஒரு நாள் பயணம் செய்தேன்
இராணுவ முகாம்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது பஸ்
இராணுவ முகாமில்
தண்டனை நிறைவேற்றப்பட்டு தலைகீழாய் தொங்கும்
பற்பசை உறைகள் அதிகம் கண்டேன்

அது என் சந்தோசமற்ற நிஜம்களில் ஒன்று
தம்பி அழுகிறான்
பற்பசை 01
பக்கத்து வீட்டு ராத்தாவின் புருசன் அழுகிறார்
பற்பசை 02
விறகு கொண்டுவந்து கொடுக்கும் வண்டில்காரர் அழுகிறார்
பற்பசை 03

என் விதவைத் தாய்க்கு
சாப்பாட்டு செலவாக நாளுக்கு நூறு ரூபாய் கொடுத்துதவும்
மாமாவையும் கொண்டு சென்றோம்
அடக்கம் செய்யும் மைதானத்திற்கு

எதை மறப்பது

அவள் என்னை முத்தமிட்டு
போருக்கு அனுப்பிடுவாள்
முத்தமிட்டு சந்தைக்கு அனுப்பிடுவாள்

அவள் என் மனைவி
அவளின் தெளிந்த கண்ணிரண்டிற்குள்ளும்
கம்புத் துப்பாக்கியின் ஆடையினைக் காண்பேன்

இரத்தத்தினை சீனியின் பாகு போலவும்
நீரில் இறக்கிடும் துயரங்களிலிருந்து
மயக்கும் மை பூசிய பறவைகளாக
என் கண் முன்னே வந்து நிற்கும் காதல் கோடுகளை
விழுங்கியவன் நான்

இப்போது பற்பசை சொல்லும்
"மனிதன் தூக்கிலிடப்படுகிறான்
மனிதன் தூக்கிலிடப்படுகிறான்"

-----------------------------------------------------------------------
(கவிதை படிக்கும் பிரியர்கள் ஏன் கவிதை பற்றி எதுவும் எழுதுவதில்லை?
எழுத முடியவில்லையா?)

எழுதியவர் : பைசால் இலங்கை (27-Jan-11, 2:15 am)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 554

மேலே