இதுவும் ஒரு கவிதை

வாழ்க்கை பற்றி
வாழ்க்கையின் போராட்டங்கள் பற்றி
எழுதும்போதெல்லாம் அது என் உம்மாவுக்கு புரிவதில்லை

ஏதோ ஒரு வீதியில் என் வீடு
சூரியன் சுட்ட பூமியில் என் கால்கள்
என நான்

குடை முறியும்படி காற்று
காற்றில் மழை
மழையில் நனைந்த கோபம்
என் வீடு சருகாய், முள்ளாய் இருந்தும்
எங்கோ சுகமிருக்கிறது

என் எழுத்து புரியாத கவலைபற்றி
நரம்பு உருகி சாம்பலாகலாம்
ஒரு நாள் என் பாதை
என் கோலம்
என்னைச் சுமந்த வயிறு
என நான் எழுதலாம்
மணல் குமித்து அதில் அமர்ந்து கல்லாகலாம்

என்ன ஆனாலும்
உம்மாவுக்கு இருக்கும்
அதே கோபமும் பாசமும்தான்
என் கவிதைகளுக்கும் இருக்கும்

எழுதியவர் : பைசால் இலங்கை (27-Jan-11, 1:46 am)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 623

மேலே