தேர்தல்

கரை படாத
கைகளை உருவாக்க
கரை படுத்தப்படும் விரல்கள்.....!

வறுமை சிறையை உடைத்தெறிய
வாக்காளர் எழுப்பும்
குரல்கள் ......!

அரசியல் ஒப்பந்ததாரர்களுக்கு
விடப்படும்
ஐந்து வருட குத்தகை .....!

வாக்குறுதி மழைக்காக
வளைந்து கொடுக்கும் வானவில்......!

மக்களாட்சி தேசத்தில்
மக்களுக்கான ஒரு நாள்.....!

மந்திரிகள் மக்களாகவும்
மக்கள் மகேசனாகவும் மாறும் திருநாள்......!

சுயநல சிங்கங்கள்
பசுந்தோல் போர்த்திவரும்
நாடகமேடை ......!

இந்த தேர்தல் வந்துவிட்டால் ......!


மதுபான கடைகள்
மாநாடு போடும் ......!

கோழி இனங்கள்
கொலை செய்யப்படும்......!

வாகனங்கள்
அணிவகுப்பு சாகசம் செய்யும்......!

குட்டிச் சுவர்கள்
வண்ணச் சட்டை போடும்.....!

கட்சி கொடிகள் சுயநல கம்பத்தில்
அனைத்துக்கும் தலையசைக்கும்......!

ஐந்து வருடங்களுக்கு பிறகு
அமைச்சர்கள்
தொகுதிக்குள் செல்லும்
அதிசயம் நடக்கும்.......!

துண்டு பிரசுர
தூரல் விழும்.....!

இலவசம் என்னும்
இன்பச் சாரல் அடிக்கும் ......!

இரவிலும் கூட
பிரச்சார மழை பொழியும்.....!

கருப்பு பணம்
சுதந்திரம் கொள்ளும் ......!

கந்தல் சட்டைக்காரன் கூட
கவனிக்கப்படுவான் .....!

இந்த தேர்தலுக்கு மட்டும்தான்.....!

ஊர்ச்சாலைகள்
உருவம் கொள்ளும்.....!

வீதி விளக்குகள்
வெளிச்சம் காட்டும்......!

தண்ணீர் குழாய்கள்
தாகம் தீர்க்கும்.....!

மாற்றத்திற்க்காகத்தான் தேர்தல்
என்றாலும்....!
தேர்தலில் மட்டும்தான்
மாற்றம் வந்திருக்கிறது....!
வாக்குப்பெட்டியை பின்தள்ளி
மின்னணு எந்திரம் முந்திகொண்டது .....!
ஆனாலும் .....!
வாக்கு போட்டவர்கள்
வாழ்க்கைமட்டும் அப்படியே......!

எஜமானர்கள் என்னவோ
மக்கள்தான்.....!
அனால்....!
கிரீடத்தை யாரோ சூடிக்கொள்கிறார்கள்.....!

மொத்தத்தில்.....!
பதவிக்கு பணம் தர
நினைப்பவங்களுக்கு
தேர்தல் ஒரு "வியாபார களம்".....!
ஓட்டுக்கு பணம் பெற நினைப்பவர்களுக்கு
தேர்தல் ஒரு
"விபச்சார மடம்".....!

எழுதியவர் : கவிபாக்யா (4-Dec-13, 12:01 pm)
Tanglish : therthal
பார்வை : 597

மேலே