அம்மாவும் நானும்

மது தேடி
வந்தமர்ந்த வண்டு
தந்தையாகிப் போனது!

சுமை தாங்குவதென்னவோ
செடியின் தொழிலாகிப் போனது! - அதுவே
தாயின் நிலையானது…

காட்டில் வேலை செய்து
களைத்து வந்தாலும் - என்
மார்தட்டி தூங்க வைத்த பின் தான் - நான்
ஆட்சி செய்யும் கனாவுக்குள்
உலா போகும் அவள் விழிகள்!

துன்பங்கள் எல்லாம்
நெஞ்சு எலும்புகளுக்குள்
சிறை பட்டிருக்க
இன்பம் ஏதுமிருக்காது
என்னிடம் சொல்லி மகிழ
என்றாலும் சிரித்திருப்பாள்
என் முகம் சிரித்திருக்க!..

அவள்
இடுப்பில் இருந்த
நாட்களைச் சமன்செய்ய
இன்று வரை
நடந்து பார்க்கிறேன்
இயலவில்லை!..

இலவச சேலைக்குள்
ஒளிந்து கொண்டவள்
எனக்கு மட்டும் தான்
காசு கொடுத்து
கால் சட்டை வாங்கினாள்…

அம்மாவும் நானும் இருந்த
சிறிய உலகத்தில்
புதிய வரவாகியது
பூனைக் குட்டி
இல்லாத பொம்மைகளின்
இடம் நிரப்ப!..

என்னிடம்
பலமுறை சொன்ன பொய்யை
நான் திரும்ப சொன்ன போது
விழி நனைத்து
அணைத்துக் கொண்டாள்..
"பசிக்கலம்மா" – என்று

அந்த வறுமையை நேசிக்கிறேன்!..
வாழ்வதற்கு பொருளும் தேவையில்லை
தாயிருந்தால்..
என்ற பொருளை உணர்த்தியதால்..

ஆழி கொள்ளா அன்பை
அள்ளித் தெளித்தவள் - இன்று
ஆளில்லா வீட்டுக்குள்
ஆடு கோழியுடன்
பேசிக் கொண்டிருக்கிறாள்...

கையாளாகாத நானோ
கணினி முன் யாசித்திருக்கிறேன்
காகிதம் சம்பாதிக்க...

எழுதியவர் : செல்வா பாரதி (5-Dec-13, 3:56 pm)
பார்வை : 333

மேலே