அக்கினிக்குள் அமிர்தம் அருந்துவோம்
மென்மைக்கோர் இலக்கணம்
மேன்மையின் தனித்துவம்
அன்பிற்கு அடித்தளம்
வையகம் ஈன்ற புதையல்
மங்கை....!
இருந்தும் சங்ககாலமென்ன
சரித்திரத்தில் சாதனையகும்
இக்காலமாயிருந்தென்ன
பெண்ணெனும் பேதப்படுத்தல்கள்
பேரம் பேசப்படாமலில்லை!
கரு ஒன்று சுமக்கப்படுகையிலே
அடித்தளமிடப்படுகிறது
பெண்பிள்ளைக்கான
வாதபிரதிவாதங்கள்
சீதனம் முற்கொடுப்பனவாய்
உத்தரவாதமளிக்கிறது
செல்லுபடியாகும் வாழ்க்கைகோலத்துக்கு.....!
ஆனபோதும்
கையூட்டு வழக்குகள்
தேங்கிக் கிடக்கிற
காவல் நிலையத்திலும்
சீதனத் திருமணங்கள்
மட்டும் ஏனோ
விலக்களிக்கப்படுகின்றன....!
எம்மதமும் சம்மதம்
சொல்லியே உள்ளன
இரண்டாம் பட்சப்படுத்தப்பட்ட
பெண்ணியலை....!
சரித்திரக்கதைகள்
சாய்வு நாற்காலியாகின்றன
பெண் மீதான அநீதிகளுக்கு...!
ஒழுக்கத்திற்கு ஓருயிரான
ராமனும் அனுமத்தித்தான்
கருவுற்ற சீதைக்கான
அக்கினிப்பிரவேசந்தனை.....!
மதுரை எரிந்த்ததால் தானா
கண்ணகியும் பத்தினி
என்ற பட்டம் பெற்றாள்
தருமனின் தருமம்
தோற்றபோதும்
துச்சாதனன் துகிலுரிந்தது
திரௌபதைக்கு தானே....!
உடுக்கை இழந்த திரௌபதையின்
இடுக்கண் கலைத்த
கண்ணன் கதைதனை
பாஞ்சாலி சபதமென
முறையாய் நோக்கி
பெண் புதுமை புரட்சிக்கு
பூ தூவிய
பாரதியும் செல்லம்மாவுக்கு
ஒரு புதுமை பூவை
சூடினானா....!!
சாட்டையடி சம்பிரதாய
சடங்குகள்
அணங்கவள் அடக்கு முறைகளுக்கும்
அத்து மீறல்களுக்கும்
அத்திவாரமிடுகின்றன....!
விளம்பரங்களே விளம்பரப்படுத்துகின்றன
பேதை என்பவள்
போதை ஊசியென...!
இருந்தும்
இன்று கற்று உயர்வதில்
பெண்களின் பங்களிப்பு
முன்னிலையில் இருப்பதை
பங்கீட்டு வழக்கு சொல்கையில்
நாமும் ஏன்
செக்கு மாடாய்
வாழ்ந்திட வேண்டும்...!!!
சேயின் முதல் உயிர்ப்பு
பசி என்பதாய்
நாமும் நிதமும் ஜனிப்போம்
இதுவரை
சுகப்பிரசவமாகாமல் போன
தலைப்பிரசவங்களை
பிரசவித்தே......!!!