வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா
இனஒதுக்கல் இருளால்
இருண்டு கிடந்தது
தென்னாபிரிக்கா.
சுதேசப் பூக்கள் வாசம்
வெளியூர் ட்யூலிப்களால்
மறைக்கப்பட்டது.
உண்பதற்கு வாயும்
அழுவதற்கு கண்ணும்
முணு முணுக்க மொழியுமாக
முடங்கிக் கிடந்தது
அங்கே மானுடம்.
நானூறுஆண்டுகள்
இருண்ட வாழ்க்கையில்
சுருண்டு கிடந்த இனம்
ஒரு சூரியனுக்காய்
சொப்பனம் கண்டது.
குலூ கிராமத்து
மலையடிவாரத்தில்
பழங்குடி வாசலில்
உதித்தது அந்த கறுப்பு சூரியன்.
சோளக் காட்டில் கேட்ட
அழுகை ஒலியில் எதிரொலித்தது
சொந்த மண்ணில்
நொந்து வாழும் அடிமை
மக்களின் அவலம்.
குழந்தையை முத்தமிட்ட
தந்தை கூவினார் உரக்க
ரோலிலாலா.....!
காற்றோடும் வெயிலோடும்
கரும்புத் தோட்டங்களோடும்
கவலை மறந்து வளர்ந்தான்
ரோலிலாலா.
பள்ளியில் முதல் நாள்
இனவெறி ஆசிரியர்
ரோலிலாலா நாமத்தைப் பறிக்க
வேண்டா வெறுப்பாக
காவ தொடங்கினான் நெல்சனை.
சட்டத் துறையில் பட்டம்
சற்றும் சளைக்காத நெஞ்சில்
தாயகத்தின் சுதந்திரக் கனவு.
விழியில் விடுதலை இலட்சியம்
வெகுண்டு எழுகிறது மெல்ல
அடக்கப் பட்ட உணர்வுகள் .
சிந்தனை செயலில் சிதறுண்ட
கறுப்பின மக்கள்
சேர்ந்தனர் ஒன்றாய்.
வலுப் பெற்றன
மண்டேலா தலைமையில்
மாணவர் போராட்டங்கள்.
கறுப்பு வெள்ளை கூறு பிரித்து
தாழ்வு படுத்தி
விலங்கு பூட்டிய கொடுமைகள்
வேரூன்றிய நாட்டில்
சிறுபான்மை வெள்ளைகளின்
அதிகாரத்தை வேரோடு வீழ்த்த
வெகுண்டு எழுந்து
அகிம்சை ஆயுதம் ஏந்ததியது
அந்த கறுப்பு சிங்கம்!
ஆனால்ஆதிக்ககாரர்களின் காதுகள்
இன்னும் மூடியே கிடந்தன.
ஆம்...அப்போது வழி இன்றி
துப்பாக்கியை பரிசளித்தது
காலம்.
ஆப்ரிக்க தேசிய இராணுவம்
அணிவகுத்தது!
அடக்கு முறையாளர்களின்
அநியாங்களுடன்
அடக்கப்பட்டவர்களின்
ஆயுதங்கள் பேசத்தொடங்கின!
அரங்கேறியதுகரந்தடிப் படை தாக்குதல்!
தேசத்துரோகக் குற்றம் சுமத்தப் பட்ட
சாத்வீகப் போராளியை
கைது செய்தது இன வெறி அரசு.
ரொபன் தீவில் திறந்த வெளியில்
சுண்ணாம்புக் கட்டட வாயில்
நாற்பத்தியாறாவது வயதில்
கைதியின் சீருடைக்குள்
புகுந்து கொண்டது மண்டேலாவின்
மிடுக்கான உடல்.
நிறவெறிக் கொடுமையை
சாட்சியம் சொல்லும்
சிறைவாழ்க்கை அது!
இருபத்தேழு ஆண்டுகள்
சிறைவாசத்தின் பின்
தளர்ந்த உடலுடன் புன்னகை பூத்து
வெளியே வந்த மண்டேலாவை
அதிசயமாய் பார்த்தது உலகம்!
ஆம்! காழ்ப்பு உணர்ச்சியோ
வெறுப்போ இன்றி
தன் வாழ்வில் கால் நூற்றாண்டை
தன் நாட்டுக்காக சிறையில்
தொலைத்த தியாகி!
மாபெரும் மானுடப் போராளி
உலக வரலாறுப் புத்தகத்தை
புரட்டி பார்க்கும் போது
தரித்து நின்று தரிசிக்க வேண்டிய
தெய்வம்!
என்றென்றும் மக்கள் மனதில்
வாழும் மாவீரன்!