பருவம் என்னும் பாதையினிலே

தோழனே! நமது நட்பு
அறிமுகத்தில் ஆரம்பித்து
ஆற்றலையும் அன்பையும் பெருக்கி,
இன்ப துன்பங்களை பகிர்ந்து
ஈர மனதுடன் பழகி
உதவிக்குப் பழகாமல்
ஊடல்கள் இல்லாமல்
எண்ணங்கள் கலந்து
ஏளனம் செய்யாமல்
ஒற்றுமையாய் இருந்து
ஓருயிராய் மகிழ்ந்ததுவே!

பிறந்து விட்டோம்
காலத்தின் கட்டாயத்தால்
தொடர்கிறோம் நம் பந்தத்தை
மடலின் மூலமாய்

கண்டேன் மடலில்
காதல் எனும் கனியை நீ ருசிப்பதாக
கொண்டேன் மகிழ்ச்சி
இருந்தும் மனதில் ஓரத்தில் ஏனோ தளர்ச்சி
ஏன்? என்னை நானே கேட்கிறேன்

மனம் அறிந்து மணம் புரிவது அபூர்வம்
குணம் அறிந்து இனி இணைவது நலம்
சிலர் காதலை பொழுது போக்காக்கி
ஏமாற்றலாம் உன்னை

உன்னவளை தெரியவில்லை எனக்கு
எனவே புரிய வைக்கிறேன்
காதலைப் பற்றி உனக்கு!

தோழனே! காதல் என்பது
தழுவுவதால் வருவதுமல்ல
தவிர்த்தலால் வராமல் இருப்பதுமல்ல

கனவினில் கலந்து மனதினில் நினைந்து
மரணத்தில் விழுவதுமல்ல

அழகாலும் அறிவாலும்
அமைக்கப்படுவதுமல்ல
அது அழிக்கப்படுவதுமல்ல

பருவம் என்னும் பருவத்தில்
விழி என்னும் விதையால்
பார்வை என்னும் பாசனத்தால்
இதயம் என்னும் இடத்தில்
வளர்வதுதான் காதல்

தோழனே! உனது காதல்
கண்ணில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை
மண்ணில் முடியாமல் இருக்கட்டும்
மனதில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை
கணத்தில் முடியாமல் இருக்கட்டும்
ஏன் எளிமையாக ஆரம்பித்தாலும் பரவாயில்லை
ஏளனத்தில் முடியாமல் இருக்கட்டும்
மடலில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை
உடலில் முடியாமல் இருக்கட்டும்
அது மறுப்பில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை
மரணத்தில் முடியாமல் இருக்கட்டும்.

தோழனே! பெற்றோர் மனம் புண்படாமல்
உற்றார் கண் படாமல்
உறவினர் சொல் படாமல்
கற்பின் நெறி கலையாமல்
வறுமைகள் பறந்து வசந்தங்கள் பிறந்து
வளங்கள் நிறைந்து வாழ்க்கை சிறந்து
உனது காதல்
அன்பு என்னும் குன்றால்
உன்னத உயரம் அடையட்டும்.

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (7-Dec-13, 1:06 pm)
சேர்த்தது : KRISHNAN BABU
பார்வை : 61

மேலே