பறந்தது கருங்குயில்

பறந்து விட்டாயே மண்டேலா.. எம்மைப்
பிரிந்து விட்டாயே என் தோழா!

வெள்ளை இருட்டினை
விரட்டி அடித்த
கருப்பு வெளிச்சம்
கரைந்து விட்டது!

தூக்கிக் கொன்று விட
தீர்ப்பளித்த அகங்காரம்...
ரத்த வெறியர்களுக்கு மத்தியில்
ரிவோநியாவில் உந்தன் ரீங்காரம்
நிறவெறிக்கெதிரான புதிய ராகம்...

கருப்பும் வெள்ளையும்
கலப்பதுவே குற்றமெனில்
கயிறுகள் கழுத்தினை இறுக்கட்டும்..
நிலை குலையா உன் முழக்கத்தால்
அலை அடித்தது ஆப்பிரிக்காவில்
நுரை தொட்டது அகிலமெங்கும்..

இருபத்தேழு ஆண்டுகள்
இரும்புக் கம்பிகளுக்குப் பின்..
சங்கிலிகள் அறுந்த போது
சிறகுகள் முளைத்தது
தென்னாப்பிரிக்க தேவதைக்கு...

கருகும் நிலத்திற்கு நீ தேவை..
கருப்பு நதியே.. உன் நீர் தேவை....
இருந்தும் கருங்குயிலே ஏன் பறந்தாய்?

எறிந்து விட்டாய் கிரீடத்தை
ஐந்தே ஆண்டுகளில்......
சொன்னபடி செய்ததனால் உன்
தலைமுடி கூட மணி முடியானது...

உன்கைகளில் தவழும்
நோபலும் தேம்புகிறது....
சாம்பலான ஃபீனிக்ஸே
சரித்திரமாய் நீ சிறப்பாய்!

பறந்து விட்டாயே மண்டேலா.. எம்மைப்
பிரிந்து விட்டாயே என் தோழா!

கண்ணீர்........கவிமகன் காதர்

எழுதியவர் : கவிமகன் காதர் (7-Dec-13, 8:43 pm)
பார்வை : 87

மேலே