அந்தகம் போக்கு
கவிதையும் வரவில்லை
கற்பனையும் வரவில்லை
காணும் பொருள் யாவும்
களிப்பூட்ட வுமில்லை
புவிசுற்றல் நின்றதோ
பகலவன் பாதை மாறியதோ
பாடுபொருள் யாவுமே
பார்வைக்கு வராமல் போனதுவோ
பாரதி இருந்திருந்தால்
அவனுக்கு தாசனாகி இருப்பேன்
பார் புகழ் பட்டு கோட்டையாரிடம்
பாட்டு கற்றிருப்பேன்
கண்ணதாசன் இருந்தால்
காதல் எழுத தெரிந்திருப்பேன்
கம்பன் மட்டும் இருந்தால்
எல்லாம் அறிந்திருப்பேன்
காதலரும் காதல் செய்யவில்லையோ- அந்த
காதலில் உயிர் துடிப்பு இல்லையோ
நீர்வீழ்ச்சி நீரள்ளிக் கொட்டவில்லையோ -அந்த
நீரில் மச்சங்களின் துடிப்பு மறைந்து போனதோ
கண் பார்த்தபோதும்
உருவம் பார்க்கவில்லை
குரல் கேட்டபோதும்
வார்த்தை கேட்கவில்லை
புலன் திறந்தபோதும்
புத்தி இங்கில்லை
புத்தி இங்கிலாதபோது
புதுகவிதை எங்கே
மனமே நீ மாறு
மறுபடியும் தேறு
மழையும் வரும்
வெயிலும் வரும்
இயற்கையின் கூறு
மறக்காதே உனக்குள் ஆறு .