கடவுளின் மொழி

விடியக்காலை மூணு நாப்பதுக்கு சென்னையில பிளைட். நான் மதியம் 3:00 மணிக்கு மதுக்கூர் பஸ்டாண்ட்ல நிக்குறேன். எப்டி பாத்தாலும் மன்னார்குடி ஒரு முக்கால் மணி நேரம். அங்க இருந்து கும்பகோணம் ஒரு இரண்டு மணி நேரம். ஒரு ஆறு மணில இருந்து ஒரு ஆறரைக்குள்ள கும்பகோணம் போனா அங்க இருந்து ஒரு ஏழு மணி நேரம் வச்சுக்கிட்டா கூட வொர்ஸ்ட் டூ வொர்ஸ்ட் விடியக்காலை ஒரு மணிக்கு நம்மல சென்னை ஏர்போர்ட்ல தள்ளிவிட்டுட்டு போய்ட மாட்டானான்னு.....நான் யோசிச்சுட்டு இருந்தப்பவே....மன்னார்குடிக்கு பஸ்ஸும் வந்துடுச்சு.....

இப்படி ஒரு டைட் செட்யூல் வச்சுக்கிட்டு ஏன் ஊருக்குப் கெளம்பணும்னு நீங்க கேக்குறது எல்லாம் சரிதான் பாஸ். ஆனா ஒரு வாரம் லீவுக்கு ஊருக்கு வந்துட்டு இந்த ஊர விட்டு கிளம்புற பாடு இருக்கே....அதை இந்த மாதிரி கிளம்பிப் போறவங்களுக்குத்தான் தெரியும். மண்ண விட்டு, மரத்த விட்டு, சொந்தங்கள விட்டு அம்புட்டு ஈசியா கெளம்ப முடியும்ன்றீங்க? ரொம்ப கஷ்டம். இந்தா பன்னென்டு தானே ஆகுது. அட ஒண்ணுதானே ஆகுதுன்னு நேரத்தக் கடத்தி கடத்தி... இன்னொரு கை சாப்டுப் போப்பான்னு அம்மா ஒரு கரண்டி சோறப் போட்டு ரெண்டு கரண்டி சாம்பார ஊத்தும் போது கரண்ட் இல்லாத தருமமிகு தமிழ்நாட்ல வேர்க்க விறுவிறுக்க சாப்டுற சுகம் இருக்கே......அதை எல்லாம் அனுபவிக்கணும்ங்க....

பஸ் வர்ற வரைக்கும் நாம ஊருக்குப் போய்த்தான் ஆகணுமா இது என்ன பொழப்புன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கவைங்க எம்புட்டு ஸ்பீடா கெளம்பி இருப்பாய்ங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்துக்கோங்க....

யப்பா தம்பி டிக்கெட் எடுப்பான்னு கண்டக்டர் தோள தொடவும் சுதாரிச்சுக்கிட்டு மன்னார்குடி ஒண்ணு கொடுங்கண்ணேன்னு கேட்ட வேகத்துல மன்னார்குடி போக எம்புட்டு நேரம் ஆகும்னு லவக்குன்னு கேட்டுப்புட்டேன். போறப்ப போவும்யா...ன்னு சொல்லிட்டு நவுந்து போன கண்டக்டர்க்கு எப்புடி தெரியும் நம்ம ஏரோப்ளேன் புடிக்க போற அவசரம். அரசு விரைவுப் பேருந்துன்னு போட்டு இருந்தா விரைவாப் போய்த்தான் ஆகணுமான்ற நையாண்டியோட கேசுவலா வண்டி ஓட்டிக்கிட்டு இருந்த டிரைவர பாத்து எமகாதகா....என் வாழ்க்கையில ஏன்யா வெளையாடுறன்னு கத்தணும் போல எனக்கு இருந்துச்சு.....

ஏற்கெனவே மெதுவா போற பஸ்ஸு நம்ம அவசரத்துக்கு இன்னும் மெதுவா போற மாதிரி தெரியவும் பேசாம பேக்க எடுத்துக்கிட்டு இறங்கி வேகமா ஓடிருவமான்னு கூட யோசிச்சுப் பாத்துட்டேன். மன்னார்குடி பஸ்ஸண்ட்ல அதிர்ஷ்டவசமா கும்பகோணத்தை நோக்கி பாஞ்சு சீறிக்கிட்டு(????!!!!!!*#!) இருந்த இன்னொரு விரைவுப் பேருந்த தொரத்திப் பிடிச்சு ஏறி ஜன்னலோர சீட்டா பாத்து புடிச்சுட்டு ஸ்ஸ்ஸ் அப்பாடன்னு நான் யோசிச்சதுதான் அப்போதைய என்னோட லைஃப் டைம் சாதனையா எனக்குத் தோணிச்சு....

அடுத்த நாள் காலையில டூட்டி ஜாய்ன் பண்ணனும், இந்த பிளைட்ட விட்டா மொத்த டிக்கட்டும் போய்டும்....அப்டீன்னு என்ட் ஆஃப் த டே எல்லா வெவகாரமும் பொருளாதரத்துலதான் வந்து முடியுது. செவ்வாக்கிழமை காலையில டூட்டி ஜாய்ன் பண்ணிடுவேன்னு பாஸ் தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு வந்துருக்கேன்னு யோசிச்சுட்டு இருந்தப்பவே அப்போன்னா முன்னாடியேல்ல கெளம்பி இருக்கணும்னு நமக்குள்ளேயே ஒரு குரல் நம்மள தெனாவெட்டா கேள்வி கேக்கவும் ஆரம்பிச்சுருச்சு....

சரி பாத்துக்கலாம். இந்த பஸ்ஸாச்சும் ஸ்பீடா போகுமான்ற மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலா ஆமா போகும்னு உறுதியா நான் சொல்லிக்கிட்டத பஸ் டிரைவர் கேட்டுட்டாரு போல....மன்னார்குடி எல்லைய தாண்டுன வண்டி....மாட்டப் புடிச்சு புது இடத்துக்கு இழுத்துக்கிட்டுப் போனா ரெண்டு காலையும் பப்பரப்பான்னு விரிச்சுக்கிட்டு மல்லுக்கட்டுமே அப்டி ஒரு மெர்சல் காட்டிகிட்டு வண்டி நவுருவேணாங்குது....என்ன பண்ண முடியும்ணா...? யோவ் வண்டிய கொண்டாய்யா நான் ஓட்டிக்கிறேன்னு கேக்காத பாடா டிரைவர் அண்ணன் பக்கத்துல போய் உக்காந்து கும்பகோணம் எத்தன மணிக்குப் போவும்ணேன்னு மிரட்சியா கேட்டேன்.....

போவும் தம்பி போவும்....போய் உள்ள ஒக்காருங்கன்னு அவர் சொன்ன உலகமகா பதிலை வங்கி கடிச்சுத் துப்பிக்கிட்டே திருவிளையாடல் தருமி கனக்கா எனக்கு வேணும், எனக்கு வேணும்.....நான் கேட்டிருக்க கூடாது, கேட்டிருக்க கூடாது....என் தப்புதான்....எந்தப்புதான்...சொக்கா...சொக்கான்னு நான் உள்ளுக்குள்ள கத்தினது வெளில கேட்டுருச்சுப் போல முன்னாடி சீட்டு அக்கா கனகாம்பரமும் கதம்பமும் சேத்து வச்சிகிட்டு இருந்தவங்க...திரும்பி பாத்து என்னை முறைக்க.....

அட என்னக் கொடுமை சரவணா இது ஈவ்டீஸிங்னு ஏதாச்சும் மாட்டிவிட்டா கூட அப்டி மாட்டிகிட்டோம்னு சொல்லிப் பெருமைப்படுற அளவுக்கு இவுங்க இல்லையேன்னு என் கல்லூரி கால நக்கல் எந்திரிச்சு குத்தாட்டம் போட அடங்கொன்னியா அடங்குடான்னு சொல்லிட்டு விரக்தியா நான் சோழப் பெருநாட்டின் வயல்வெளிகளுக்குள் பார்வையை செலுத்தினேன்....

அதாவதுங்க எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு. டாக்டர்கிட்ட போய் முடியலேன்னு படுத்துட்டீங்க. ஆப்பரேசன் தியேட்டர்ல கொண்டு போய் படுக்க வச்சப்புறம்....கையக் கால நீட்டிக்கிட்டு படுத்துக்கிட வேண்டியதுதான். அவரு என்ன வேணா செஞ்சுட்டுப் போறாரு....இனிமே இந்த ஃபுல் பாடியும் அவர் கண்ட்ரோல்லன்னு நினைச்சுப்போமே...அதே ஸ்டேஜ்க்கு நான் போய்ட்டேன்....

பஸ் ஸ்பீடா போனா என்ன ஸ்லோவா போனா என்ன....ஏர் அரேபியா பிளைட் ஒரு ஆள ஏத்திட்டுப் போறதும் ஏத்தாமப் போறதும் எவன் கையில இருக்கு.....? சம்போ மகாதேவா உன் கையிலதான்னு எல்லாத்தையும் அவன் கிட்ட விட்டுட்டேன்.

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் எத்தனை தடவை இந்தப்பக்கம் வந்து இருப்பாங்க....! எத்தனை போர்களுக்கு படை வீரர்கள்...சோழம்....சோழம்...சோழம்னு கேடயத்துல வாளால அடிச்சுக்கிட்டு ஓடி இருப்பாங்க....., மிகப்பெரிய வயல்வெளிகளோட இன்னும் அடர்தியா மரங்களோட பச்சைப் பசேல்னு எப்டி இருந்திருக்கும் சோழ நாடுன்னு உடையார் கொடுத்த அனுபவத்தை நான் மென்னு தின்னிகிட்டு இருந்தப்பவே பஸ் நின்னுடிச்சு....

டக் டக்குனு பழைய சோழ தேச கனவை விட்டு வெளில வந்து என்னாச்சுன்னு எட்டிப் பாத்தா...பூவலூர் பாலத்துகிட்ட சாலை மறியல் பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. டிரைவர் வண்டிய இழுத்தி நிறுத்திட்டு இறங்கிப் போய்ட்டாரு. கண்டக்டர்.....இப்போ எல்லாம் வண்டி எடுக்குற கதையா இல்ல தம்பின்னு என் நம்பிக்கையை மிதிச்சு துவம்சம் பண்ணினாரு....

மெல்ல கீழ இறங்கி வந்துப் பார்த்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னால ஒரு பத்து பஸ்...எங்க பஸ் நிறுத்தினதுக்கு பின்னால ஒரு 4 வண்டின்னு வரிசை பெரிசாகி இருந்துச்சு....

பூவலூர் பாலத்தை ஒட்டின மெயின் ரோட்ல பிரச்சினை நடந்த இடத்துக்கு பக்கத்துல வந்து பார்த்தேன். நடு ரோட்ல கிராமத்து ஜனங்கள்னு சொல்லிட்டு நிறைய ஆளுங்க அதுவும் எல்லாம் சின்னப் பசங்க உக்காந்து ஒரு வண்டியவும் விட முடியாது கலெக்டர் வரணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தாங்க. எதிர் திசையிலயும் ஒரு பத்து பதினைஞ்சு பஸ் கார்னு நின்னுட்டு இருந்துச்சு.

பூவலூர் டாஸ்மாக்ல ஏற்பட்ட பிரச்சினையில சோ கால்ட் மேல்சாதிக்காரங்கள சோ கால் கீழ் சாதிக்காரர் ஒருத்தர் ஏதோ சொல்லி திட்ட....அந்த சோ கால்ட் கொம்பு முளைச்ச மேல் சாதிக்காரர்க்கு ரோஷம் வந்து அவரோட பையனோட கெளம்பி வந்து சோ கால்ட் கீழ்சாதிக்காரர வயலுக்குக்குள்ள வுட்டு உருட்டுக் கட்டையில அடிச்சதுல....இவர் உயிர்க்கு ஆபத்தான நிலையில மன்னார்குடி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டிருகார்னு சொல்லி அடிபட்டவர் சார்பா அந்த மறியல் நடந்துட்டு இருந்துச்சு.....

சாதி சாதின்னு சொல்லி சாதிப் பெயரால அரசியல் செய்ற கருங்காலிகள் இருக்க வரைக்கும் நம்மூர்ல சாதி சனியன் செத்தே போகாதுன்னு எனக்குத் தோணிச்சு. அங்க மறியல் பண்ணிட்டு இருந்த ஒருத்தர் கூட நின்னு பேச முடியுற அளவுல இல்லாம டாஸ்மாக் அத்தனை பேரையும் கபளீகரம் பண்ணி இருந்துச்சு. யாரோ ரெண்டு க்ரூப் ஊருக்குள்ள அடிச்சுக்கிட்டு போலிஸ் ஸ்டேசன் போகாம ஒதுக்குப் புறமா இருக்க ஊரைவிட்டுத் தள்ளி மெயின் ரோட்டுக்கு வந்து உட்காந்து அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் போற பஸ்ஸுகள மறைச்சு நின்னு அவுங்க கோபத்தக் காட்றது சரின்னுதான் இந்த சமூகம் அந்த உலகமறியா அப்பாவி ஜனங்களுக்கு கத்துக் கொடுத்து இருக்கு.

ஏதாச்சும் பிரச்சினை இல்லை யாரச்சும் தலைவர்கள் இறந்து போய்ட்டாங்கன்னா ஓடிக்கிட்டிருக்க இருக்க பஸ்ஸயும், ரயிலையும், கார்களையும் மறிக்கிறது உச்சபட்ச வன்முறை, அராஜகம், அயோக்கியத்தனம்னு ஏன் இன்னும் யாருக்கும் புரியலை. வண்டில போறவனுக்கு என்ன அவசரம்னு யோசிக்க முடியாத குரூரம், தன் வலியை தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை நேர்மையா தீத்துக்க நினைக்காத மனதின் வக்ரம் இன்னிக்கு போரட்டம்ன்ற பேர்ல நம்ம ஊர்ல சாலை மறியல்களா நடந்துகிட்டு இருக்கு. இப்படி சாலைமறியல் இருக்கறதை விட ஒட்டு மொத்த ஊர் ஜனங்களும் போலிஸ் கமிஷனர் ஆபிஸ்க்கோ இல்லை கலெக்டர் ஆபிசுக்கோ போய் உக்காந்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறவரைக்கும் முற்றுகை போரட்டம் நடத்தலாமேன்னு நான் யோசிச்சுக்கிட்டே...

பிரச்சினை நடக்குற மைய இடத்துக்கு என்னோட பேக்கோட வந்து நின்னு தேமேனு பாத்துட்டு இருந்தேன். யாரோ ஒருத்தர் அந்தக் கூட்டத்துல இருந்து எழுந்து வந்து அங்க நின்னுக்கிட்டு இருந்த என்னை மாதிரி வழிப்போக்கர்கள் கிட்ட நியாயம் கேட்டுட்டு இருந்தாரு.... இந்த அடர்த்தியான சமூகத்துல நானும் ஒருத்தன் தான் இதுக்குள்ள இருக்கும் போது இங்க இருக்குற நல்லது கெட்டதுகள்ள தெரிஞ்சோ தெரியாமலோ ஒவ்வொரு மனுசனும் பலிகெடா ஆகத்தான் வேணும்னு மனசுக்குப் பட்டுச்சு....

வாட்சைப் பார்த்தேன்... .மணி மாலை 5. அடக்கடவுளே இன்னும் பூவலூர் தாண்டலயே...நீடாமங்கலம்,கும்பகோணம் அதுக்கப்புறம் சென்னை பைபாஸ் புடிக்கிற வரைக்கும் புல் லோடான கிரைண்டர் சுத்துற மதிரில்ல ஆடி அசஞ்சு வண்டி ஓட்டுவாய்ங்க ஏதாச்சும் நடக்குமா...? போலிஸ் வருமா? கூட்டம் கலையுமா...

ஒரு மாதிரி படபடப்போட நின்னு பாத்துட்டு இருந்தேன். அஞ்சே கால்க்கு ஒரு போலிஸ் சாரும் ஒரு போலிஸ் அக்காவும் வந்தாங்க....கிட்டத்தட்ட நூறு இருநூறு பேருக்கு மேல நின்னு அழிச்சாட்டியம் பண்ணி மறியல் செஞ்சுட்டு இருந்த மறியலை கலைக்க வந்த போலிஸ் படை எனக்கு இன்னும் டென்சனை கெளப்ப....
கடவுளே சென்னை போகணும்...ப்ளைட்ட வுட்டா....டிக்கெட்டும் போய்டும்...வேலைக்கும் ஒரு நாள் கழிச்சு போய் ஜாய்ன் பண்ணனும்..இது என்ன கொடுமைன்னு சொல்லிட்டு இருந்தப்ப..

என் பக்கத்துல இருந்த ஒருத்தர்...கிட்ட வந்து என்ன தம்பி பிரச்சினைன்னு கேட்டாரு.. ! விவரத்தைச் சொன்னேன். தம்பி இப்போ எல்லாம் இங்க ஒண்ணும் ஆகாது, அந்த சைட்ல போய் ஏதாச்சும் ஆட்டோ இல்லை பைக் ரிவர்ஸ்ல போவாங்க போய்டுங்கன்னு சொன்னவரு என்ன நினைச்சாரோ தெரியலை... வாங்கன்னு சொல்லி என்னை கையப் புடிச்சு அந்தாண்ட பக்கம் கூட்டிட்டுப் போனாரு. கூட்டம் கூடினதோட மட்டும் இல்லாம ரெண்டு பக்கமும் வண்டிங்க வரிசை அதிகமாவும் ஆயிடுச்சு. என்னை கூட்டிட்டு அந்தப்பக்கம் போன அந்த நண்பர் அந்தப்பக்கமா நீடாமங்கலம் போற பைக் கிட்ட எல்லாம் இந்த தம்பிய நீடாமங்கலத்துல விட்ருங்கன்னு சொல்லி ஒவ்வொருத்தர் கிட்டயா கேட்டாரு.... இரண்டு மூணு பேரு முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

நாலாவத ஒரு பைக் வந்துச்சு...அவர்கிட்ட என்னை கூட்டிட்டு வந்தவர் விபரம் சொல்ல...சரி நான் நீடாமங்கலத்துல அவரை விடுறேன்னு சொல்லி உடனே வண்டியில என்னை ஏறச்சொன்னாரு..... அவசரத்துல பைக் ஓட்றவரு யாரு என்னனு முகத்தைக் கூட பாக்கலை நான்...என்னை ஏத்திவிட்டவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு...

வண்டி பறந்து கொண்டிருந்தது.

நீடாமங்கலத்துக்கு அப்புறம் ஏதோ ஒரு கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருப்பதாய் சொன்னார். குழந்தைக்கு உடம்பு முடியாதப்ப வேண்டி இருந்தேன். இப்ப நல்லாயிட்டா அதான் போய் மாலை வாங்கிப் போடப்போறேன்னு சொன்னார். நீடாமங்கலத்தில இருந்து பஸ்ல போனா காரியம் ஆவாதே தம்பி.....ஆட்டோவுக்கு எப்படியும் ஐநூறு கேப்பான், அப்படியே போனாலும் நேரத்துக்கு போகவும் முடியாது....எப்டி போவீங்க? எப்டி சென்னை பஸ்ஸ புடிப்பீங்க.....கேட்டார்.

தெரியலிங்கண்ணா....ஆனா இன்னிக்குப் எப்டியும் போயகணும்ணா சொன்னேன்.

சரி நான் ஒண்ணு பண்றேன். நானே உங்களை கும்பகோணத்துல நேரா பைக்ல கொண்டு வந்து விடுறேன். பெட்ரோல் மட்டும் போட்டுட்டு போவோம் நீடாமங்கலத்துல....சொன்னார்! அண்ணா நீங்க பிள்ளைக்கு வேண்டிட்டு குலதெய்வம் கோயிலுக்குப் போறீங்க ..எப்டிண்னா..? தயங்கியபடியே கேட்டேன்.

அடப்போங்க தம்பி...சாமி ஒண்ணும் நினைச்சுக்காது. இன்னும் சொல்லப் போனா ஒங்க சூழ்நிலை தெரிஞ்சு உதவ முடிஞ்சும் அதோ கதியா நடுரோட்ல விட்டுட்டு சாமிகிட்ட போனாதான் சாமி என்ன திட்டும்....சொல்லிவிட்டு சிரித்தார். அண்ணா சாரிங்கண்ணா..பட் ரொம்ப தேங்க்ஸ்கண்ணா....சொன்னேன். வண்டிக்கு பெட்ரோல் போட்டார். காசு கொடுத்தேன். வலுக்கட்டாயமாக மறுத்து விட்டார். என்னை வண்டியை விட்டு இறங்கவே விடவில்லை.

வண்டி பறந்தது.

6 மணிக்கு கும்பகோணம் பஸ்டாண்டுக்குள் நுழைந்தோம். வரும் வழியிலேயே சொல்லிக் கொண்டு வந்தார். கடவுள் ஆன்மீகம் பத்தி எல்லாம் நிறைய படிச்சதில்ல தம்பி. எனக்கு சாமின்னா புடிக்கும். சாமி படைச்ச எல்லா மனுசங்களையும் பிடிக்கும். ரொம்பவுல்லாம் ஒண்ணும் தெரியாதுப்பா எனக்கு...ஆறாவதுதான் படிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ள அதுவும் எனக்குப் புடிச்ச பொட்டப்புள்ள...டப்புன்னு ஒரு நாளு உடம்பு முடியாம போக, ஆடிப்போய்ட்டேன்...வாந்தியும் வயித்தாலயுமா போவுது....

கருப்பா என் புள்ளைய காப்பாத்துடான்னு வேண்டிக்கிட்டேன். காப்பத்திக் கொடுத்துட்டான். அவனைப் பாக்கப் போகையில உங்கள சந்திக்க வச்சுட்டான்....சொல்லி கொண்டே நீடாமங்கலம் தாண்டி அவர் செல்ல வேண்டிய குலதெய்வம் கோயில் பாதையைக் காட்டினார். இன்னொரு நாள் போயிக்குவேன் தம்பி.....ஒண்ணும் பிரச்சினை இல்லை...! அவர் காட்டிய திசையைப் பார்த்த் கையெடுத்துக் கும்பிட்டேன். அங்க யார் இருக்கா இல்லைன்னு எனக்கு தெரியல ஆனா ஒரு நல்ல மனுசன அந்தக் கோயில், அந்த சாமி அந்த சூழல் வார்த்தெடுத்து இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

என் ஊர், எப்போ வந்தேன், மறுபடி எப்போ வருவே என்று கேட்டார். வேற ஒண்ணுமே பேசிக்கலை.

கும்பகோணம் பஸ்டாண்ட் உள்ள நுழையவும் ஒரு விரைவுப் பேருந்து சென்னைக்கு கிளம்பவும் சரியா இருக்க...வண்டிய விரட்டிக் கொண்டு போய் பஸ்ஸு முன்னால நிறுத்தி.... ஒரு நிமிசம் நில்லுப்பா ஆளு வருதுல்ல என்று டிரவரை அதட்டினார்....நான் ரொம்ப தேக்ஸ்னா என்று சொல்லிய படியே என் மொபைலில் அவசரமாய் அவரது நம்பரை வாங்கிக் கொண்டேன். நம்பர மொபைல்லா சேவ் பண்ணிக்கிட்டே பஸ் உள்ள ஏறினப்பதான் நினைச்சேன்...அட அவர் முகத்தைக் கூட நாம பாக்கலயேன்னு...

ஓடிப்போய் ஜன்னல வழியா எட்டிப் பார்த்தேன். என்னை பார்த்து சிரித்தார். கை காட்டினார். பத்திரமா போங்க என்று சொன்னார். எனக்கு கண்ணீர் வந்தது. எந்த உறவும் இல்லை இவர். யார்னே தெரியலை...எவ்ளோ சிரமப்பட்டு அதுவும் அவ்ளோ விரைவா வண்டிய ஓட்டிக்கிட்டு வந்து...

மொபைலில் இருந்து கால் பண்ணி நன்றிண்ணா என்றேன் தழு தழுத்த குரலில். அடப் போங்க தம்பி....போய் இறங்கிட்டு எனக்குப் போன் பண்ணுங்க....சாமி சாமின்னு ஊரைச் சுத்தி அலைஞ்சுகிட்டு இருக்கறதும், நான் ரொம்ப பக்திமான்னு காட்டிகிறதும் இல்ல தம்பி... வாழ்க்கை...எனக்கு நெஞ்சுக்கு நிம்மதியா இருந்துச்சு இன்னிக்கு உங்கள டயத்துக்க் கொண்டு வந்து விட்டது... என் கருப்பன் சந்தோசப்படுவான்...பத்திரமா போங்கப்பா...வழியில ஏதாச்சும் பிரச்சினைன்னாலும் கால் பண்ணுங்க....

வண்டி சென்னை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவரது எண்ணை மொபைலில் சேமிக்க அவரோட பேரு வேணுமே அட என்ன பேருன்னு கேக்க மறந்துட்டோமே....யோசிச்சேன்......

..........கடவுள்........

அப்டீன்னு சேமிச்சு வச்சுக்கிட்டேன். ஜன்னலோரம் காற்று முகத்துல வந்து மோதி முடியை கலைச்சுட்டு இருந்துச்சு. கண்களை துடைச்சுக்கிட்டேன்....அங்க மறியல் நடத்திட்டு இருந்த கடவுளெல்லாம் செஞ்ச உதவியில இந்தக் கடவுள் எனக்குக் கிடைச்ச சந்தோசத்தில்....தொடர்ந்து கொண்டிருந்தது அந்த சுவாரஸ்யமான பயணம்...!


இப்போ எல்லாம் அடிக்கடி கடவுளும் நானும் பேசிக்கிறோம்.....!

எழுதியவர் : Dheva .S (13-Dec-13, 9:55 pm)
Tanglish : kadavulin mozhi
பார்வை : 421

சிறந்த கட்டுரைகள்

மேலே