விறகாகும் தருணங்கள்

கிளை பரப்பி
நிழல் கொடுத்த
அரசமரம்
இலைஉதிர்த்து
நிற்கிறது -தன்
இறுதி நாட்களை
எண்ணியபடி.

பச்சைக் குடை பிடித்து
உச்சி வெய்யலின்
உஷ்ணம் தணித்த
நாட்களை வாழ்வின்
மிச்சமுள்ள கணங்கள்
ஏக்கத்துடன் அசை போட.
எச்சம் எதுவுமின்றி
ஏகாந்தப் பெரு வெளியில்-இவ்
விருட்சம் தவித்திருக்கும்.

அன்றொருநாள்
அச்சமுடன் காலடியில்
அசையாமல் படர்ந்திருந்த
அறுகம் புற்கள்
இன்று தன்னைத்
துச்சமெனப் பார்த்து நிற்க
துவண்டு விழும்
தன் மானம்.

ஆயிரம் கனிகளின்
சுவை சுமந்த காடு
அழகான பறவைகள்
கூடு கட்டி வாழ்ந்த வீடு.
வேர்கள் வலுவிழக்க
விரக்தியுடன் காழும்
உரியமும் காய்ந்து கிடக்க
காத்துக் கிடக்கின்றது
சில கோடரிகளுக்காக!

எழுதியவர் : சிவநாதன் (14-Dec-13, 8:52 am)
பார்வை : 132

மேலே