நிராயுதபாணிகள்

ஆளரவம் அற்ற வீதிகளில்
பேயுறங்கும் சாமத்தின்
நிசப்தத்தைக் கிழிக்கும்
சப்பாத்துச் சத்தங்கள்

நாய்கள் ஊழையிடும்
சத்தத்துடன் சேர்ந்து
குழந்தைகளின் அழுகை ஒலி
ஒரே சுருதியில் கலக்கும்

கறையான் துளையிட்ட
வேலி ஊடாக -எதிரி
வெள்ளை வாகனம்
வெளிச்சம் பாய்ச்சும்.

எந்தத் திசையிலும்-இந்த
இரத்தக் காட்டேரிகள்
பிணம் தின்னப்புறப்படலாம்
எச்சரிக்கை செய்யும் மனது

அவர்கள் துப்பாக்கியில்
இருந்து எந்தக் குண்டு
எப்போது புறப்படும்
தூக்கக் கலக்கத்தில்
துரத்தும் மரணபயம்.

யாருக்கும் புரியாத
இறுதியான கணங்கள்
கண்கள் இருட்டி
கால்கள் வலுவிழக்கும்.

குழ்ந்தைகள் மனைவி
குடியிருந்த வீடு,சுற்றம்
மனம் அங்கலாய்த்து
ஒய்ந்து கடவுளைக் கெஞ்சும்

ஐயோ! ஐயோ!
துப்பாக்கி சூட்டின்
ஒலியடங்க முன்
அடுத்த வீட்டில் கேட்கும்
அவலம்!

இன்றைக்கு எம்
முறை இல்லை -இருப்பினும்
என்றோ ஒருநாள்
தவணை முறையில்
எங்கள் தலைகள்
கொய்யப்படும்!

எழுதியவர் : சிவநாதன் (16-Dec-13, 8:52 am)
பார்வை : 69

மேலே