ஒரு காகித வரலாறு

வார்த்தைச் செறிவில்
திளைத்த என்
சர்க்கரைத் திசுக்களுக்கு
பழகிப் போயிருக்கிறது
வடிவக் கிறுக்கல்களின்
உப்புச் சுவை...!!!
இப்பொழுதெல்லாம்
நான்
வண்ணங்கள்
ருசிப்பதில்லை.. எல்லாவற்றிலும்
இரத்த வாடை...!!!
குறிஞ்சிகளாய்
குதூகலகங்கள்...
எப்பொழுதாவது...!!
அடுத்த நொடி...
குதறிப் போடும் குண்டுவெடிப்பு
புகைப்படங்கள்...!!!
நீண்டு தொடர்ந்திருக்கும்
என் நெடுங் கோடைகளில்
நெருப்பூற்றி ரசிக்கிறது...
விளம்பர நிர்வாணங்கள்...!!!
என் மழலைப்
பதிப்புகளிலும் எந்திர
அரக்கர்களே
சிரிக்கிறார்கள்....!!!
எழுத்தாணிக் காதலனின்
இன்பக்கலவி மறந்த
எனக்கு
மரத்துப் போயிருக்கிறது...!!
பந்துமுனை மையமிலங்களின்
ஒருதலை
வன்புணர்வுப் பதிவுகள்....
எப்பொழுது வரும்
எனை மீட்டுக்க....? இன்னுமொரு
அக்கினிச் சிறகும்...?
எனக்குப் போர்த்திவிட
சின்னஞ் சிறு கிளியும் ...?