இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...
அன்று... நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே,
இன்று... உன்னிடத்தில் இல்லையாம்!
கேள்விப்பட்டேன்.....!

உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்...
கண்களும் என்னை கைவிட்டன - உன்னைப்போலவே!

எப்போதும் திரும்பப்பெறமுடியாத
என்னுடைய நம்பிக்கைகளை
உன்னிடத்தில் தொலைத்தவன் நான்!
இனிமேலும் அதை நான்
உன்னிடத்தில் தேட மாட்டேன்!!!

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...
உன் வற்றாத நினைவுகளும்
ஆற்றமுடியாத காயங்களும்
ஆறாத கோபமும் கூட.
உன்னையும் நீ செய்த துரோகத்தையும்
எப்படி மறக்கமுடியும்???
என்னை மட்டுமா...
என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...
நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்
அதன் சமுதாய அடையாளத்தையும்
எப்படி மறைக்கமுடியும்???

அன்று கண்ணீரில் நான் கலங்கிநிற்க,
காரணமில்லாத காரணங்களுக்காய்...
தூக்கியெறிந்து விட்டுப் போனாய்!
நீயின்று கலங்கையிலே....
உன்னைப்போல் என்னால்
உதறிவிட்டுப் போக முடியவில்லை.

இப்பொழுதும் என்னை நீ அழவைக்கிறாய்...
உன்னை நினைத்தல்ல,
உன் நிலையை நினைத்து!

பழிவாங்கும் எண்ணத்தில்...
உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!
நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்
ஆறாக் காயங்களில்
இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!
உன்னைப்போல் மனச்சாட்சியை
இன்னும் நான் தொலைக்கவில்லை!

காதலால் மட்டும்தான்
துரோகங்களையும் மன்னிக்க முடிகிறது !?
ஏனென்றால்...
காதலுக்கு நேசிக்க மட்டுந்தான் தெரியும்!
காதலுக்கு நேசிக்க மட்டுந்தான் தெரியும்...!!

எழுதியவர் : ஒருவன் கவிதை (21-Dec-13, 12:19 am)
பார்வை : 186

மேலே