செல்லத் தாயி புள்ள
காட்டாத்து வெள்ளம் போல
காலம் ஓடும் ஓட்டத்துல
கண்ணு முன்னு தெரியாம
ஓடித்தான் கெடந்தியே..
காலுகட்டு போட்டு வச்சு
கரசேத்து விட்டு புட்டா
காடு சேந்து நிம்மதியா
ஒறங்கிடலானு நா நெனச்சு..
கருப்பாயி மவளத்தான்
கட்டிவச்சு களிச்சு நின்னேன்
கண்ணுக்குள்ள பூத்திருந்த
கண்ணீர தொடச்சு நின்னேன்..
ஒருவருசம் ஆககுள்ள
சிறு நெலவு போலத்தான்
பேத்தி ஒன்னு கையில கொடுத்த
இந்த தாயி மனச குளிரவச்ச..
ஒருநாளும் இல்லாம
திருநாளும் அதுவுமா
வெயிலு சாயும் நேரத்துல
வரேன்னு சொல்லி போன..
ஒரு ராவு ஒரு பகலு
ஓன் வரவ பாத்து நின்னு
ஊரு சனம் ஒவ்வொன்னா
ஒன்ன பத்தி கேட்டு பாத்தேன்
கேட்ட சனம் எல்லாமே
பாக்கலன்னு சொல்லி போக
காடு மேடு வயலெல்லாம்
தேடிப் பாத்து தவிச்சு நின்னேன்
ஓன் மவன தேடுறியா
அந்த கிணத்தோரம் கெடக்கான்னு
ஒருகொரலு சொல்லிப் போக
பதறிப் போயி வந்து பாத்தேன்..
ஒரு பகலு வெயிலெல்லாம்
வாங்கித்தான் காஞ்சு கெடந்த
ஒலகத்த மறந்துபுட்டு
உசுர மட்டும் வச்சு கெடந்த..
கெணத்து தண்ணி வாரி ஊத்தி
வாயிலயும் கொஞ்சம் ஊத்தி
கொண்டவளுக்கு தெரிய வேணான்னு
தெளியவச்சு கொண்டு வந்தேன்
அது நாளு வரைக்கும்
நெலயாத்தான் வீடு வந்த
அந்த ஒரு நாளுக்கப்புறம்
என்னாச்சு தெரியலியே..
கரடு முரடு பாக்காம
காடு மேடு கடந்து போயி
கருவ குச்சு வெட்டி வந்து
கஞ்சு வச்சு வளத்த புள்ள..
ஊரு விட்டு ஊரு போயி
ஊத்து தண்ணி தேடித் போயி
கொண்டுவந்து வெந்நீ வச்சு
குளிப்பாட்டி வளத்த புள்ள..
தொட்டிகட்டி தூங்கையிலே
சிட்டெறும்பு கடிச்சதனால
தோளு மேல போட்டுகிட்டு
வேலசெஞ்சி வளத்த புள்ள..
ஒடம்புக்கேதும் வந்துபுட்டா
ஒப்பாரி பாடிகிட்டு
பட்டணம் கூடிப் போயி
வைத்தியம் பாத்து வளத்த புள்ள..
வெளிய.. வெளயாட போகக்குள்ள
வெனயேதும் வரக் கூடாதுன்னு
கண்ட சாமிகிட்டையும்
வேண்டி வேண்டி வளத்த புள்ள..
அப்பன் இல்லா கொறைய போக்க
ஆத்தாளும் அப்பனுமா இருந்து
அக்கம் பக்கம் கண்ணு படாம
அணச்சு அணச்சு வளத்த புள்ள..
சின்னத்தாயி தான் புள்ளய
ரொம்ப செல்லமா வளக்குரானு
செல்லத் தாயி புள்ளன்னு
ஊரு சனம் சொன்ன புள்ள..
மம்புட்டி புடிச்ச கையி
மது புட்டி ஒளிக்கப் பாத்து
மனசொடிஞ்சி போயி நின்னேன்
நான் பெத்த செல்ல மவனே..
கம்பீரமா நின்ன புள்ள
சத கரஞ்சு தோலா நிக்க
உசுரு கரஞ்சி நா நின்னேன்
என்னோட செல்ல மவனே..
கரவேட்டி கட்டி வர
ராசா வரான்னு சொன்னேனே
கர படிஞ்சி கெடக்கயிலெ
என்ன சொல்ல ஏன் மவனே..
சாராயக் கடையெல்லாம்
தேடித் போயி நின்னீயே
கூடாத உறவெல்லாம்
கூட்டிகிட்டு வந்தாயே..
சேத்து வச்ச காசெல்லாம்
குடிச்சே கரச்சீயே
சொந்த பந்த உறவெல்லாம்
மறந்துதான் நின்னீயே..
பெத்து போட்டதால
என் மனசு தாங்குதடா
கட்டுனவ என்ன செஞ்சா
அவளப் போட்டு வாட்டுனீயே..
பச்ச ஒடம்புக் காரிகிட்ட
பாசங் காட்டலனாலும் பரவால
அடிச்சு படுத்துனீயே
அவ மனச அழிச்சீயே..
பெத்த புள்ள பாலுக்குதான்
அழுது கெடந்தாளே..
ரத்தம் வந்து நின்னதனால
அவ ஆத்தா துடிச்சாளே..
ஒத்த குடிக்கு பின்னால
நாலு உசுரு வாடுதடா..
சொட்டு சொட்டா உசுரு மேல
எரிமலத் தீய ஊத்துதடா..
கட்டுடல நனச்சு நனச்சு
கணங் கொறச்சு வக்குதடா
சிட்டெறும்பு நோவக்கூட
பெருநோவா மாத்துதடா..
வெடி மருந்து போலத்தான்
உசுர மாத்தி வக்குதடா
தீ ஒன்னு பட்டதுமே
வெடிக்கக் காத்துக் கெடக்குதடா..
ஊரு வம்பு இழுக்குதடா
ஒறவுப் பகைய வளக்குதடா
அருவா கத்தி எல்லாமே
பதம் பாக்கத் துடிக்குதடா..
நெருப்பு மேல நிக்க வச்சு
நெதமும் உசுர வதக்குதடா
மரத்துப் போக வச்சு வச்சு
எரிச்சு கரியா மாத்துதடா..
ஒன்ன புடிச்ச சனியனத்தான்
நா உண்ந்து சொல்லிப்பாத்தேன்
ஒளராம ஓரமா கெடன்னு
நீ ஒளறிக் கேடந்தீயே..
செல்லத் தாயி புள்ள போல
செதஞ்ச உடலு இருக்குதுன்னு
ஊரு சனம் சொல்லி ஓட
ஒறஞ்சு போயி நின்னுபுட்டேன்..
மனச கொஞ்சம் தேத்திகிட்டு
நானும் ஓடிப் போயி பாக்க
ஊரு சொன்னது பளிச்சதென்ன
ஏன் உசுர ஒடச்ச தென்ன..
கதறிக் கதறி அழுதேனே
கண்ணீர் விட்டு அழுதேனே
கண்ணுக்குள்ள வச்சு வளத்த
ராசாவக் காணாம அழுதேனே..
கட்டி வந்த பொண்ண விட்டு
பெத்தெடுத்த மான விட்டு
வெரசா நீயும் போனதென்ன
என்ன உசுரோட சாச்சதென்ன..
என்ன சொல்லி தேத்துவேனோ
பெக்காத மவள நானும்..
நான் பெத்த புள்ள ஒன்ன
வீதில விட்டுப் போயிட்டான்னு
ஏன் வாயால சொல்லிடவா
என்னோட செல்ல மவனே..
ஒன்ன சொல்லி குத்தமில்ல
நல்லாத்தான் ஒழச்சு போட்ட
ஏழற சனியனப் போல
அந்த குடி வந்து கொன்னுடுச்சே..
இந்த நாடு ஒன்ன கொன்னுடுச்சே
நல்லா ஊத்திக் கொடுத்தே கொன்னுடுச்சே..
நாலு தெருவுக்கு ஒரு கடன்னு
மூலையில.. நட்டு வச்சு கொன்னுடுச்சே..
நாட்டுக்கு வரவுன்னு
தெனம் நாலு கட மொளைக்குதடா
ஊருக்கு ஒரு சாவு
ஏன் புள்ள போல போகுதடா..
ஆயிரம் கோடி வருமானமுனு
வரி வரியா எழுதுறாங்க
ஆயிரம் தாலி அறுந்து விழுந்தத
யாரு கணக்கு எடுத்தாங்க..
ஆண்டி தள்ளாட
அரசாங்கம் நெலக்குதடா
அவன் உசுர காவு வாங்கி
ஒசந்துடலான்னு நெனக்குதடா..
ஒழச்ச காசு ஒட்டுனாலே
போதுமுன்னு வாழும் கூட்டம்
எங்க ஒழப்ப கூட உறிஞ்சு தானா
அரசாங்கம் நடத்துவாங்க
சொந்த அரசியலும் நடத்துவாங்க..