உழைத்திடு உயர்ந்திடு
பெற்றவர் பேச்சைக் கேளாமல்
இருப்பதில் வருமோ ஒருஇன்பம்?
கற்றவர் கற்றவர் தமைத்தாமே
நட்புடன் நாடிச் சென்றிடுவார்.
மானிடர் எவரும் நம்மனத்தின்
மதிப்பிப்னைப் பெறுதல் முறையாகும்
இன்னல் தரும்வழி கூறிடுவார்
இனிக்கப் பேசிக் கெடுப்பவரே.
இணக்கம் எவருடன் கொள்ளுவது
உன்நிலை உயர்த்தும் நபரிடமே!
இனங்கள் பலவாம் உயிரினத்தில்
ஓரினமம் தம்மினம் சேர்ந்திருக்கும்.
பசுவொன்று பன்றியை நட்பித்தால்
பாவம் அதுவும் மலந்தின்னும்.
நம்மிலும் கற்றவர் பலரிருப்பர்
நாம்அவர் நட்பு கொண்டிருந்தால்
எள்ளள வேனும் உயர்வொன்றே
ஒவ்வொரு நொடியும் நமைச்சேரும்!
கல்லார் பொல்லார் உமைஆண்டால்
களிமண் ஆகும் உன்அறிவும்.
கற்றது பிறரும் பயனுறவே
கற்றதன் படிநாம் நடந்திடவே.
மூத்தவர் மதிப்பிற் குரியவரே
முறைதான் அவரை மதிப்பதுவே.
ஒன்றும் அறியார் பிடிவாதம்
உடைந்த்திடும் சேர்ந்தோர் மனங்களையே!
இன்னல் தருவது எளியதுவே
இழிபேர் பெறுவதும் எளியசெயல்
ஆக்கம் உள்ள செயல்களன்றோ
உழைப்பின் பயனை உருமாறும்.
பயனுற வாழ்ந்திடப் பிறந்தவரே
ஒவ்வொரு மனிதரும் நம்மிடையே.
உண்டு உறங்கி உடுப்பதுடன்
ஐம்புலச் சுவையே வாழ்க்கையல்ல.
ஆறறிவு இருப்பது மானிடர்க்கே
இயற்கை அளித்த பெரும்கொடையாம்
அதனால் விலங்கினும் உயர்ந்தவர்நாம்
என்பதை ஏன்நாம் மறந்திடுவோம்?
விலங்கினுன் கீழாய் நடப்பதற்கு
வீண்சிரமங்கள் நமக்குத் தேவையில்லை
வினாடி ஒன்றே நமக்கதிகம்
நம்மைத் தாழ்த்தி நடப்பதற்கு.
இடம்பொருள் ஏவல் உண்டிங்கு
உணர்ந்திட நம்மிடம் அறிவுமுண்டு.
பகுத்தறியாமல் எதையும் நாம்
அளந்திடத் துணிந்திடல் மடமையன்றோ?
புலனின்ப ஆசைகள் உடற்கூறே
அதையடக்கி ஒடுக்கவே பகுத்தறிவு
ஐம்புலன் இழுக்கும் நடந்தால்
விலங்கினை மிஞ்சித் தாழ்ந்திடுவோம்.
அறிவுக்கு விருந்து உயர்எண்ண்ம்
தருகின்ற பலவும் இருக்கையிலே
அழிவின் பாதையில் நடப்பதுவோ
எளியது இச்செயல் என்பதனால்?
ஐம்புலன் இன்பம் சுவைத்திடவே
அறிவுக்குச் சிறிதும் வேலையில்லை
எளிதில் கிடைக்கும் அவ்வினபம்
அழிவினைத் தன்னுள் மறைத்திருக்கும்
அறியார் விழுந்தால் முடிவதுவே.
அறிவுக்குப் பகைவர் இழிமாந்தர்
ஒவ்வா சிந்தனை கொண்டிருப்பார்
அவர்மனச் சோம்பல் இருட்டினிலே
உலவிடும் தீமைப் பேய்க்கூட்டம்.
சோம்பல் மனதுக்கு உணவானால்
தீமைகள் பலவும் உயிர்த்தெழுமே
கதிரொளி கண்ட ஆம்பல்போல்
அறிவும் சிதைந்து பொலிவிழக்கும்.
அதன்பின் நிற்கும் இழிதுணிவு
எதையும் செய்ய இடம்கொடுக்கும்
அந்நிலை அடைந்தவர் எந்நாளும்
அவருடன் சேர்ந்தவர் மனமறியார்.
அதிசயம் அன்னவர் திருந்துவது
அத்தி பூக்கின்ற செயலாகும்
இடைநிலை நிற்போர் உய்திடவே
உணர்ந்தால் நல்வழி உண்டாகும்.
இடைநிலை பாதி கெட்டமையாம்.
ஒருபுறம் முழுக்கேடு கடலிருக்க
மறுபுறம் நல்வழிச் சாரலுண்டு.
முழுக்கேடுக் கடலில் விழநினைந்தால்
நினைக்குமுன் அவருடல் மிதந்திருக்கும்
உணருமுன் பாதாளம் சென்றுவிடும்.
அவ்வழிச் சென்றபின் உயர்வில்லை
அவர்கதை அத்துடன் முடிந்துவிடும்.
நல்வழிச் சாரலில் சோதனைகள்
நடந்து நடந்து சென்றாலும்
சேருமிடம் வந்து சேராது.
சேர்ந்திடும் சோர்வு வழிதனிலே.
சிந்தனைச் சாறு தரும் ஊக்கம்
சோர்வினைத் தூர ஓட்டிடுமே.
நல்வழிச் சாரலைக் கடந்தபின்னே
விரிந்து பரந்த நல்லுலகம்
எல்லைகள் இல்லா வாழ்க்கையிது
உழைத்தால் உயர்வு கிளர்ந்தெழுமே.
உழைக்க உழைக்க நினைவாற்றால்
இமயம்போல உயர்ந்து வரும்.
உழைப்பிலும் களைப்பிலும் இன்பங்கள்
உதவிடும் போதும் கூடவரும்
உழைத்திடு உயர்ந்திடு உதவிடு
உலகில் சிறந்து வாழ்ந்திடு.
இந்திய நாட்டின் இளைஞனே
எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பியே
நிகழ் காலத்தை எப்படிச் சமைக்கின்றாய்
நினைத்துப் பார்த்திடு ஒருநொடி.