அன்னம் அளியுங்கள் அரும்பசி போக்கிடுங்கள்

மழலையின் வாட்டம்
மனதை வாட்டுகிறது !
பிஞ்சு விழிகளில் வழிகிறது
பசிக் கொடுமையின் வருத்தம் !

வரிசையில் நிற்கிறது
வாரிசும் படைத்தவரும் !
உயிராய் பிறந்தவர் உலகினில்
உணவும் வேண்டாமா உய்த்திட !

கொடுமையிலும் கொடுமை
வறுமையில் வாழ்வது அன்றோ !
உண்டிட வழியில்லை எனில்
உயிராய் பிறந்தும் பயன் என்ன !

மனிதரில் ஏன்தான் பிரிவினை
ஏழை பணக்காரன் எனும் இருகூறு !
பிறந்திடும் முறையும் ஒன்றுதானே
பிறந்தபின் ஏன்தான் இந்த வேறுபாடு !

பசிப்பிணியைப் போக்கிட
மருந்தொன்றும் இல்லையே !
படித்தவர் கோடிகள் ஆனாலும்
மருத்துவர் ஒருவரும் இல்லையே !

வேண்டுகிறேன் உங்களிடம்
உதவிடுங்கள் முடிந்தவரை !
அன்னமிட்டு போக்கிடுங்கள் பசியை
கிண்ணம் சோறாவது ஒருவருக்கு !

பசியென்று வருவோரை
புசிக்கவைத்து மகிழுங்கள் !
பட்டினி எனும் அரக்கனை நாம்
வெட்டிக் கொன்றிடுவோம் தவறல்ல !

பட்டினிச் சாவு பாரினில் உண்டு
ஊரும் உலகும் அழுதிடும் கண்டு !
வழி ஒன்று கண்டோமோ இன்றும்
வாழ வழிவகைதான் செய்தோமோ !

உழைக்கும் வர்க்கம் ஓரே இடத்தில்
உழைப்பை உண்பவனோ மேலிடத்தில் !
தினக்கூலியோ தின்றிட உணவில்லை
தினம் உழைத்தும் அவனும் உயரவில்லை !

கொள்ளை அடிப்பவரோ கொலு மண்டபத்தில்
தொண்டு செய்பவனோ தொலை தூரத்தில் !
சிந்திப்பீர் சிந்தை உள்ளவரே ஒருநிமிடம்
அன்னம் அளியுங்கள் அரும்பசி போக்கிடுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Dec-13, 3:02 pm)
பார்வை : 2199

மேலே