மார்கழி உடன் பிறந்தவள்
மார்கழி உடன்பிறந்த மதிமகளே!
மல்லிகை மணம்கொண்ட நிலமகளே!
வர்மனின் கைவண்ண வடிவழகே!
வசந்தமே நீயெந்தன் வாழ்வழகே!
எனக்கெனப் பிறந்து வளர்ந்தவளே!
எனக்கென வளர்ந்து பூத்தவளே!
என்னிதயம் நிறைந்து மணப்பவளே!
என்னுயிராய் என்னில் இருப்பவளே!
உன்சிரிப்பில் என்மனம் சிறகடிக்கும்.
உன்அழுகையில் என்மனம் துடிதுடிக்கும்.
உன்பேச்சில் என்மனம் நந்தவனம்.
உன்மௌனத்தில் என்மனம் வெந்தவனம்.
கண்பார்வையில் என்னைக் கட்டுகிறாய்.
என்பார்வையில் உன்னை ஒட்டுகிறாய்.
கனிரச மொழியில் மயக்குகிறாய்.
கருவிழிகளில் காதலைச் சுட்டுகிறாய்.
எண்ணம் எனக்குள் விதைக்கிறாய்
வண்ணம் உனதாய் வளர்க்கிறாய்.
புன்னகை என்மனம் பூக்கிறாய்.
பூவிதழ் விரித்து மணக்கிறாய்.
கோலம் தினமும் வரையுகிறாய்.
வாழும் காதலை எழுதுகிறாய்.
காலம் நீயென வாழுகிறேன்.
நாளும் துணையென தொடருகிறேன்.
கொ.பெ.பி.அய்யா.