போர்க்களங்களை ஒரு கை பார்க்கலாமே - நாகூர் கவி
பிறந்த மழலைக்கு
புன்சிரிப்பே போர்க்களம்
தவழும் குழந்தைக்கு
நடைப்பழகவே போர்க்களம்...!
பள்ளிப் பிஞ்சுகளுக்கு
புத்தகங்களே போர்க்களம்
தேர்வெழுதும் பிள்ளைகளுக்கு
தேர்ச்சியே போர்க்களம்...!
இளைய தலைமுறைக்கு
காதலே போர்க்களம்
முதிர்ந்த கன்னிகளுக்கு
திருமணமே போர்க்களம்... !
இல்லறத்தில் நுழைந்தோர்க்கு
துறவறமே போர்க்களம்
சந்நியாசி ஆனோர்க்கு
இல்லறமே போர்க்களம்...!
வறுமையிலே அகப்பட்டோர்க்கு
ஒருவேளை உணவே போர்க்களம்
செல்வச் செழிப்பில் மிதப்போர்க்கு
நிம்மதியே போர்க்களம்... !
இருளில் இருப்போர்க்கு
வெளிச்சமே போர்க்களம்
இயற்கையின் செழிப்பிற்கு
மனிதனே போர்க்களம்... !
வாகன ஓட்டிகளுக்கு
சாலைகளே போர்க்களம்
கடனை பெற்றவர்க்கு
பணமே போர்க்களம்... !
உறவைப் பிரிந்தோர்க்கு
பிரிவே போர்க்களம்
கர்ப்பிணி பெண்ணிற்கு
பிரசவமே போர்க்களம்... !
பிறந்த வீட்டிற்கு
புகுந்த வீடே போர்க்களம்
விழுந்த விதையினிற்கு
மண்மேல் எழுவதே போர்க்களம்... !
கண்ணீர் விழிகளுக்கு
புன்னகையே போர்க்களம்
பிரபலங்களுக்கு
நடைப்பாதையே போர்க்களம்...!
சம்பளங்களுக்கு
மாத பட்ஜெட்டே போர்க்களம்
மனிதப் பயணத்திற்கு
மரணமே போர்க்களம்...!